.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிக வடு நிறைந்த முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் தீரமுடன் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 22 மாவீரர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடுகல் விதைப்பு இன்று மாலை பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் பகுதியில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தின் மாவீரர் நினைவாலயத்தில் தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில்
மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

2009 மே 18 தமிழரின் ஒரேயொரு பாதுகாப்பு அரணான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை மௌனிக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்பட்டது. சர்வதேச நாடுகளின் துணையோடு சிறிலங்கா அரசு மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டு முன்னேறி ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மக்களை படுகொலைசெய்து எமது நிலத்தை அபகரித்தது.


அன்றிலிருந்து எமது தாயக நிலப்பரப்பு முழுவதும் எதிரியின் முற்றுகைக்குள்ளானது. எமது மக்கள் இராணுவ அடக்குமுறைக்குள் தொடர் இனவழிப்புக்கு முகம் கொடுக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.
மக்களைக் காக்கும் பணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது உயிரைக்கொடுத்து போராடி மடிந்தனர்.

யுத்தத்தின் இறுதியில் உலக நாடுகளின் வஞ்சகங்களால் கைதுசெய்யப்பட்ட பல நூற்றுக்கணக்கான போராளிகள் யுத்த நெறிமுறைகளை மீறி கொல்லப்பட்டார்கள்.
பன்னாட்டு அரசுகளின் வாக்குறுதிகளில் நம்பிக்கைவைத்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட பல ஆயிரம் போராளிகள் சிறைவைக்கப்பட்டனர். அதிலும் பலர் கொல்லப்பட மிகுதியானோர் கொடும்வதைகளுக்கு பின்னர் நடைபிணமாக விடுதலை செய்யப்பட்டனர்.

ஆயுதங்களை கீழே போடுமாறு கூறி தமிழ் மக்களின் பாதுகாப்பை தாம் உறுதிப்படுத்துவதாக வாக்குறுதியளித்த ஐக்கிய நாடுகள் சபையும்,பன்னாட்டு அரசுகளும் இதுவரை போர் முடிவடைந்து 14 வது ஆண்டை நெருங்கும் நிலையிலும் எமது மக்களுக்கான பாதுகாப்பு பொறிமுறையை ஏற்படுத்தவில்லை.
இன்றுவரை காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டமும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.
யுத்தக்குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவந்துகொண்டிருக்கின்றனர்.

இதேவேளை போரின் வடுக்களைச் சுமந்துகொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் போராளிகளும் நாளாந்தம் சாவடைந்து வருகின்றனர்.
அவர்களது எதிர்பார்ப்பும் ஏக்கமும் இறுதிப்போரின்போது எமது இனவிடுதலைக்காக போராடி மடிந்தவர்களின் வீரவரலாறுகளை சரிவர எதிர்காலச் சந்ததியினருக்கு தெரியப்படுத்தி அவர்களிடம் எமது போராட்டத்தின் இலட்சியத்தை விதைப்பதே. எமது தலைமுறையே எமது கடைசி நம்பிக்கை ஆகும்.
எனவே இந்த வரலாற்றுக் கடமையை செய்யும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வே இன்று 22 மாவீரர்களுக்கான நடுகல் விதைப்பின் முக்கிய நோக்கமாக கருதப்பட்டுகிறது.

ஒவ்வொரு மாவீரனும் புதைக்கப்படவில்லை அவன் விதைக்கப்படுகிறான். தாயகத்தில் இன்று இந்த மாவீரர்களை உரிய மரியாதையுடன் விதைப்பதற்கான துயிலுமில்லங்களும் எதிரிகளால் அழித்தொழிக்கப்பட்டுள்ளது.அதேவேளை எமது நிலத்தில் இந்த மாவீரர்களுக்கான வீரவணக்கத்தையும் உரிய முறையில் செய்வதற்கான காலச்சூழல் இல்லாதபோதும் புலம்பெயர் நாடொன்றில் ஒக்ஸ்போட் பகுதியில் சிறிய நிலப்பரப்பை கொள்வனவு செய்து அங்கே இந்த மாவீரர்களை விதைத்து மாவீரர் துயிலும் இல்லம் உருப்பெற்றுள்ளது.

விடுதலைப்புலிகளின் இயக்க மரபுக்கிணங்க வித்துடல் விதைப்பின்போதும்,
நடுகல் விதைப்பின்போதும் உறுதியெடுக்கப்படும் அந்த வார்த்தைகள், இந்த மாவீரர்கள் ஆணிவேர் அறுபடாத ஆலமரங்கள்-மீண்டும் வேர் விடுவார்கள் விழுதெறிவார்கள்.
புதிதாகப் பிறக்கப்போகும் புலிகளுக்குள்ளே புகுந்துகொள்வார்கள்.
ஆம் நிச்சயம் இந்த மாவீரர்கள் மீண்டும் பிறப்பெடுப்பார்கள்.புதிதாக பிறக்கப்போகும் புலிகளுக்குள்ளே புகுந்துகொள்வார்கள்.

‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.”

மட்டு.மாவட்ட படையணி தளபதிகளில் ஒருவரான திரு ஜெயாத்தன்
முந்தைய கட்டுரைசெய்யத்தவறிய கடமைகள் -ரஞ்சித்குமார்
அடுத்த கட்டுரைகாவிய நாயகர்களுக்கு பிரான்ஸில் சிறப்புற வீரவணக்கம்…

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்