இலங்கை மீண்டும் உலகிற்கு பாடமாக அமைந்துவிட்டது. அமைதி நிலைநாட்டப்படுமா ?

இது ஒரு தமிழ்த் தாயின் சாபம்

எங்கள் மன்னன் வீரன்.. எந்த நிலையிலும் மக்களைக் கைவிட்டு ஓடவில்லை. உலகச்சதியால் முடக்கப்பட்டபோதும், இறுதிக்கணம் வரை தேசத்திற்காகவும், மக்களுக்காகவும் அர்ப்பணிப்போடு❤️‍🔥 விலைகொடுத்த மாவீரன். இந்த மாவீரனை நம்பி, இந்த மாவீரனுக்காக மட்டுமே ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இவனின் பின்னால் முள்ளிவாய்க்கால்வரை வலிசுமந்தார்கள். வட்டுவாகல் பாலம் கடந்த போதும் தலைவனின் பாதுகாப்பிற்காக வேண்டிய மக்கள் ஏராளம்..
மாமன்னர் வழிப்பண்பாடு.. தனக்குப்பின் மகனோ, மகளோ என தன் குடும்பத்துடன் நாட்டுக்கான அர்ப்பணிப்பு. அதை எங்கள் மாமன்னன் மிகச்சிறப்பாகவே செய்தார்.. எமக்காய் தன் கீற்றுக்களையும் வீசி ஒளிகொடுத்த அந்தச் சூரியனை மறைத்து “ஓடி ஒளிந்த மன்னனாக” உலகிற்கும் எமது அடுத்த சந்ததிக்கும் காண்பிக்க நயவஞ்சக நாடகமாடிய எதிரிகளும், எம் இனக் கைக்கூலிகளும் வெட்கித்தலைகுனிய வேண்டிய நேரமிது.. எங்களின் மாவீரன் எப்போதும் தன் சொந்த இனத்தையும், மக்களையும் கைவிட்டுத் தப்பியோடுபவரல்ல.. இப்போது இலங்கையில் நடக்கும் கேவலமான நிலமையே இதற்குச் சான்று.. எங்களின் மானம்காத்த எம் மாமன்னனை, இணையவழிப் புகைப்படங்களில் மிகக்கேவலமாக, உடைகள் களையப்பட நிலையில் காண்பித்த மூடர்களே! மன்னனின் நல்லாட்சியில் சுதந்திரமாக வாழ்ந்த மக்களாகிய,நாங்கள் அந்த நிலையை எப்படிப் பார்த்தோம் தெரியுமா? மக்களுக்காய் அன்று கச்சை கட்டப்பட்டு,சிலுவையில் அறையப்பட்டு இன்று உலகமே தலைவணங்கி வழிபடும் இயேசு கிறிஸ்துவைப் போலவே பார்த்து வழிபடுகிறோம்.” தெய்வம் நின்று கொல்லும் ” . இப்போது பாருங்கள் உங்களின் ஆட்சியாளர்களை.. பொருளாதார நெருக்கடியில் நாட்டை சிக்கவைத்து, நாட்டை விற்கும் நிலையில், ஒருவேளை உணவிற்கே வழியில்லாமல் செய்து விட்டு மக்களின் இரத்தத்தினைக் குடித்து ராஜபோக வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, சொந்தநாட்டு மக்களாலேயே மிகக் கேவலமாக விரட்டப்பட்டு ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்.. இவர்களையா வீரர்கள் என்று கொண்டாடினீர்கள்?
ச்சீ…என்ன கேவலம்? எங்கள் வீரர்களின் கல்லறைகளைக் கிளறி, அவர்களின் உடல் எச்சங்களை வீதிகளில் போட்டு மேலே தார் ஊற்றி பாதையாக்கி அதன்மேல் பயணித்த காடையர்களே! எங்களின் வீரர்கள் தேசவிடுதலைக்காய் மட்டுமே உயிர்கொடுத்தவர்கள். நீங்கள் தூவிய இடமெங்கும் அவர்களின் ஆன்மாக்கள் காற்றுடன் கலந்து தேசத்திற்காய் போராடும். எம் மக்களை கொன்றுகுவித்து, எம் இனத்தை அழித்து, எம் கண்ணீரில் நீங்கள் கட்டிய பதவிகள், ஆட்சிகள் , சிதைக்கப்பட்டு உருத்தெரியாது அழிந்து போகும்.. இது எதிரிகளுக்கு மட்டுமல்ல எம் இனத்துரோகிகளுக்கும், விடுதலையின் பெயரால் சூறையாடி நம்பிக்கைத் துரோகம் செய்தவர்களுக்கும், தங்களின் களவுகளை மறைக்க “தலைவர் வருவார்” கணக்குக் காட்டுகிறோம் என்று கதையளந்து அடுத்த சந்ததிகளின் மனதில் தப்பியோடிய மன்னனாக எம் மாமன்னனை, மாவீரனை,பதியவைக்க விசுவாசிகளாகி வேடம்கட்டும் வேடதாரிகளுக்கும் சேர்த்துத்தான்..
இது ஒரு தமிழ்த் தாயின் சாபம். தமிழ் மகளின் சபிப்பு.. தலைமைக்கும், தேசத்திற்கும் துரோகம் செய்துவிட்டு இப்பொழுது பகட்டாக வாழலாம்.. எப்பொழுதும் வாழ முடியாது.

வரலாற்றை சரியான முறையில் கடத்தி அறவழிகளில் எமக்கான உரிமைகளை மீட்க, மன ஒற்றுமையுடன் செயற்பட்டால் செய்த பாவத்தையாவது கழுவ வழி உண்டா என்று பார்க்கலாம்… இவற்றில் ஆதாயம் தேட நினைத்தால் பரம்பரைகளே இல்லாமல் போகும் நிலை வரும்.. கர்மா என்பது இப்போது இலங்கையைச் சூழ்ந்து நிற்பதுபோல்.

இ.உயிர்த்தமிழ்

முந்தைய கட்டுரைகரும்புலிகள் நாள் 2022 நாயகன்
அடுத்த கட்டுரைபாரிஸில் காவல்துறை ஆணையாளருக்கும் தமிழர் அமைப்புக்களுக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்