கண்ணுக்கெட்டிய தூரத்திலேதோ
அவலமொன்று அரங்கேறியதைச்
சுட்டிக்காட்டி ஓடுவதைப்போலவே
கைச் சைகை காட்டியவாறாய்
கிளிநகரின் சாலைகள் தோறும்
ஓடித்திரிந்த ஒருவன்!

போரின் வடுக்களைச் சுமந்த
சாட்சியத்தி லொருவனாய்
பார்ப்பவரின் எண்ணத்தில்
பாழ்படுத்திப் போன அந்தப்
பொழுதுகளை நினைவூட்டியபடி
பாதைகளை அளந்த பருவன்!!

காணக்கூடாத கொடுந்துயரை
கண்டதாலேற்பட்ட கலக்கம்!
இழக்கக்கூடாததை இழந்ததில்
இளநெஞ்சிலேற்பட்ட மயக்கம்!
ஆதரிப்பாரில்லாத ஆன்மாபோல
அந்தரித்துத் திரிந்த இளைஞன்!

பற்றையாகப் படர்ந்துபோன
பரட்டைத் தலை முடியோடும்,
முகத்தை மூடி மண்டிக்கிடந்த
மீசைத்தாடியின் திரையோடும்
ஓட்டமும் நடையுமாகத் தினமும்
ஓய்வின்றிச் சுழன்ற ஒருவன்!!.

அழுக்கேறிச்சுருண்ட சாரத்தோடும்
அங்கங்கள் கிழிந்து தொங்கிய
மேற்சட்டையோடுமாய் – நிதமும்
ஆங்காங்கே நின்று பலருக்கும்
அவலத்தின் வேதனையின்
ஆளத்தைச் சொன்ன ஒருவன்!

பார்ப்பவர் கண்களுக்குப்
பைத்தியக் காரன் போல்தெரிந்த
பாவப்பட்ட தமிழனிவன்!
பாதையிலே பறந்து திரிந்து
வீதியோரமாய் படுத்தெழுந்து
விதிமுடிந்து போன தனியனிவன்!.

தென்னிலங்கை வாசிகளுக்கிவன்
தெருக்கூத்துக் காரன்!
தெரிந்தவர்களுக் கெல்லாமிவன்
பாவப்பட்ட ஜீவன்!!
தேசத்தை நேசித்தவர்களுக்கிவன்
இனவழிப்புச் சாட்சியக்காரன்!.

விபத்தில் விதிமுடிந்து போகுமென
வீதிகள்கூட நினைந்திருக்கவில்லை!
ஏ-9 நெடுஞ்சாலையும் இவனுக்காக
விம்மியழுது கண்ணீர் வடிக்கின்றன!
நிழற் குடைபிடித்த சாலையோரத்து
நெடுமரங்களும் வாடித்துடிக்கின்றன!!.

நாடுகேட்பவர்க்கு இதுதான் நிலையென
நாலுபேருக்குச் சேதியைச் சொன்ன
நம்மவரில் இன்னொருவனிவன்!.
ஆறாத வடுக்களோடு தெருவெளியில்
ஓடித்திரிந்த ஓயாத இவன் கால்கள்
ஓயட்டும் இனிமேலாவது………….!.

குட்டிமணியை அறிந்தவர்களில்
நானுமொருவனாய் இன்று…………..!
இவன் ஆத்ம அமைதிக்காக
இறைபதம் இறைஞ்சித் தொழுகிறேன்.

                    வன்னியூர்- வரன் 
                      19/08/2022
முந்தைய கட்டுரைதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஆறாம் நாள்…!
அடுத்த கட்டுரைதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஏழாம் நாள்…!

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்