தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் ஆழமாக நேசித்த நல்ல மனிதர் ஒருவரை தமிழர் தேசம் இழந்துவிட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு அயராது உழைத்த அற்புதமான மனிதர் ஒருவரை நாம் இன்று இழந்துவிட்டோம்.
திரு.பயஸ் அன்டன் கிறிஸ்தோப்பர் அவர்கள் ஒரு பண்பான மனிதர். நெஞ்சில் தூய்மையும் நேர்மையும் கொண்டவர், தன்னலமற்றவர், பொதுநலத்தையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர். இனிமையான பேச்சும்,எளிமையான பண்பும், அமைதியான போக்குமே அவரது ஆளுமையின் அழகு.
இவர் ஒரு சிறந்த தேசப்பற்றாளர் , சிறந்த கல்வியியலாளர்.தென்னாபிரிக்க மண்ணில் வாழ்ந்தபோதும் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணை அவர் ஆழமாக நேசித்தார். சிங்கள அதிகார வர்க்கம் தனது இராணுவ அடக்குமுறைப் பாதையைக் கைவிட்டு தமிழ் மக்களுக்கு என்றுமே ஒரு நீதியான தீர்வை வழங்கப்போவதில்லை என்பதை ஆழமாக உணர்ந்திருந்தார்.
1976 இல் தமிழீழ மண்ணில்
தாயக விடுதலைப்பணியை தொடங்கியவர்,1980 இல் புலம்பெயர்ந்து வந்தபின்பும் தென்னாபிரிக்க மண்ணின் விடுதலைக்காகப் போராடிய இலட்சியப் போராளியாக திகழ்ந்தவர்.தமிழீழ மண்ணின் விடுதலைக்காக தொடர்ந்து பணியாற்றி வந்தவர். அனைத்துலக மட்டத்தில் தமிழீழப்போராட்த்தின் தேவையையும்,உண்மைத் தன்மையை நிலை நிறுத்த இறுதிவரை அரும்பணியாற்றிய அற்புத மனிதர்.

தமிழீழப் போராட்டப் பயணத்தில் மறைமுகமாக அன்னார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. ஆபத்தான போராட்டப்பாதையைச் சரியாக புரிந்து கொண்டு பயணித்து வந்தவர்.
கடல்கள் தாண்டி, கண்டங்கள் கடந்து தனது தாயகத்திற்கு வெளியே தூரதேசத்திலே ஒருவர் எத்தனை பெரும் பணியை தனது தேச விடுதலைக்கு ஆற்ற முடியுமோ அதைத்தான் இவர் தென்னாபிரிக்க மண்ணில் புரிந்தார்.
தமிழ்மக்களின் அவலங்களையும், பொருளாதார நெருக்கடிகளையும், துன்பங்களையும் நீக்க இறுதிவரை பயணித்து வந்தார்.
2009 தமிழின அழிப்பைத் தொடர்ந்து எல்லாவற்றையும் இழந்து நின்ற தமிழீழ மக்களின் நீதிக்காக அயராது பாடுபட்டு வந்தவர்.சாவு தன்னை நெருங்கியபோதும் நெஞ்சுறுதியுடன் தமிழீழ தனியரசு அமைப்பதற்கு இறுதிவரை துணை நின்றவர். திரு.பயஸ் அன்டன் கிறிஸ்தோப்பர் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப்பற்றிற்கும் மதிப்பளித்து அவருக்கு இறுதி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது அன்பான ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு அழித்துவிடுவதில்லை. எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு.

முந்தைய கட்டுரைதிரு.பயஸ் மாஸ்ரர் (சுமதி மாஸ்ரர்) பெருமைக்குரியவர்.
அடுத்த கட்டுரை16 வருடங்கள் ஓடிவிட்டன “அப்பா”

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்