பாரிசில், நீதிக்காகவும்,உரிமைக்காகவும் நடைபெற்ற “எழுக தமிழா” உணர்ச்சிபூர்வ ஒருங்கிணைவு.22/06/2022.

இலங்கையில் சிங்கள பேரினவாத அரசினால், காலாகாலமாக தமிழ்மக்கள்மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்பிற்கு நீதிகேட்டும்,பறிக்கப்பட்டுவரும் தமிழர்களின் இறையாண்மைக்கான உரிமையை பெற்றுத்தர ஆவன செய்யக்கோரியும், திட்டமிட்டு அழிக்கப்பட்டுவரும் நமது தேசிய அடையாளங்களை நிலைநிறுத்த வேண்டியும், பிரான்ஸ்வாழ் தமிழ்த்தேசிய அமைப்புகளின் ஒன்றிணைவில் முன்னெடுக்கப்பட்ட “எழுக தமிழா” எழுச்சிநிகழ்வானது 22.06.2022, பாரிசின் République சுதந்திர சதுக்கத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வினை இளையோர் தலைமையேற்று நடத்தியிருந்தமை சிறப்பான விடயமாகும்.

இந்நிகழ்வில் பிரான்ஸ் நகரசபைகளின் முக்கிய உறுப்பினர்கள், இனவிடுதலையை நேசிக்கும் மக்கள்,உணர்வாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 22.06.2022 மாலை மூன்று மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், பொதுச்சுடரினை la Courneuve நகரசபை உறுப்பினர் திருமதி.சுகுர்ணா ஸ்ரீகணேஸ் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தேசியக்கொடியேற்றல் நிகழ்வு. இதன்போது, பிரெஞ்சு தேசியக்கொடியினை Vitry sur seine நகரசபை உதவி நகரபிதா Mr. Albertino Ramaël அவர்கள் ஏற்றிவைத்தார், தொடர்ந்து எமது தேசியக்கொடிக்கீதம் காற்றலையில் ஒலிக்க, தமிழீழ தேசியக் கொடியினை திருமதி ஈழநதி அவர்கள் ஏற்றிவைத்தார். பட்டொளி வீசிப் பறந்த தேசியக்கொடியின் கீழ் மக்கள் பரவசமாய் நின்றிருந்தனர். அகவணக்கத்தினைத் தொடர்ந்து ஆரம்பமான நிகழ்வின் விளக்கவுரையினை, இளையதலைமுறையின் ஏற்பாட்டாளர் திரு.குலராஜ் நிகழ்த்த,அதனைத்தொடர்ந்து மூத்த கலைஞர்களின் பறையிசைப்பாடல் எழுச்சியுடன் இசைக்கப்பட்டது. பின்னர் உரைகள் இடம்பெற்றன. ville juif நகரசபை உறுப்பினர் Mr.Guillqme de souch, vitry sur seine நகரசபை உதவி நகரபிதா Mr.Albertino Ramaël, Bondy நகரசபை உதவி நகரபிதா திருமதி Katie, seine saint Denis மாவட்டசபை உறுப்பினர் போன்றோர் உரையாற்றியதுடன், பிரெஞ்சு மொழியிலான உரையினை, செல்வி. அம்மு ரஞ்சித்குமார், செல்வி.இலக்கியா எட்வேர்ட் லூயிஸ், ஆகியோரும்,
சிறப்புரைகளினை, தமிழ் தேசிய செயற்பாட்டாளர் திரு பொன்.நாயகன், la Courneuve நகரசபை உறுப்பினர் திருமதி. சுகுர்ணா ஸ்ரீகணேஸ், திரு.தமிழரசன், திரு.சுதன்ராஜ், Noisy le sec நகரசபை உறுப்பினர் El hadj Mahmoudba ஆகியோரும் நிகழ்த்தினர். நிகழ்வில் கவிஞர் வன்னியூர் குரூஸ் அவர்களின் உணர்வுக் கவிதையும், மூத்த கலைஞர்களான திரு தயாநிதி, மயிலையூர் இந்திரன், ஆகியோரின் சிறந்த வெளிப்படுத்தலில் “நாயைக்காணவில்லை” எனும் நாடகமும் நடைபெற்றன. கூடிநின்ற மக்கள்,உணர்வாளர்களின் மனமுருக சிறப்பாக அமைந்திருந்தது அந்நாடகம்.

நமது தமிழினத்தின் மேல் மேற்கொள்ளப்பட்டது திட்டமிடப்பட்ட இனவழிப்பு எனவும் ,அதற்கான நீதி கிடைக்க பிரான்ஸ் அரசாங்கம் எமக்கு உதவி புரிய வேண்டுமெனவும், மூதாதையர் வழிவந்த எமது தேசிய அடையாளங்களை அழியவிடாது பாதுகாத்து பயன்படுத்துவதற்கும் , போரில் வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளின் நிலையையும் விடுதலையையும் பெற்றுத்தருவதற்கும் மனிதாபிமான பிரான்ஸ் அரசு தமக்குஉதவி புரியவேண்டுமெனவும் “எழுக தமிழா” நிகழ்வில் தமிழ் மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து நன்றியுரையினை திரு.குணா அவர்கள் வழங்க தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு ‘நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும்’ எனும் பாடலுடன் நிகழ்வு எவ்வித இடையூறுகளுமின்றி அமைதியாக நிறைவுபெற்றது.

நன்றி உயிர்த்தமிழ்

முந்தைய கட்டுரைRassemblement émouvant “Ezhuka Tamila” à Paris pour la justice et les droits.22/06/2022
அடுத்த கட்டுரைMoving rally “Ezhuka Tamila” in Paris for justice and rights.22/06/2022.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்