13 ஆண்டு முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவுநாள் – பிரித்தானியா

உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நந்திக் கடலை நினைவு படுத்தும் வகையில் ஆற்றங்கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் பெருந்தொகையான மக்களின் உணர்வுகளுக்கு மத்தியில் எழுச்சியுடன் நடைபெற்றது.

18.05.2022 அன்று மாலை 6.00 மணி அளவில் பிரித்தானியாவில் அமைந்துள்ள தமிழருக்கு சொந்தமான நிலத்தில், உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் ஆரம்பமாகியது. இயற்கையான ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்றலில் சமய பெருமக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் தமது உறவுகளை இழந்தவர்களினால் பொதுச்சுடர் ஏற்றத்துடன் ஆரம்பமானது.

பிரித்தானியக் கொடியினை திரு.புஸ்பராஜா அவர்கள் ஏற்ற, பல்லாயிரம் மாவீரர்களின் நினைவு சுமந்த தமிழீழ தேசியக் கொடியினை கொடிப் பாடல் ஒலிக்க, பிரித்தானியாவின் அரசியல் துறையின் பொறுப்பாளர் திரு.வீரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவோசை ஒலிக்க பிரதான சுடரினை கணவரையும் பிள்ளையையும் தாயக மண்ணில் இனவழிப்பு க்கு பறிகொடுத்த திருமதி இரஞ்சினி பாலச்சந்திரன் அவர்கள் ஏற்றிவைக்க, அங்கே கூடியிருந்த உறவுகள் தமக்கு முன்னால் நடப்பட்டிருந்த நெய் பந்தங்களை ஏற்றி இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமது உறவுகளின் நினைவுகளில் கலந்து கொண்டனர். தொடர்ந்து இனவழிப்பு நினைவு தூபிக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்யப்பட்டது. இவ்வேளை தாயகத்திலிருந்து இறுதி யுத்தத்தில் தனது தந்தையை பறிகொடுத்த செல்வி கண்ணம்மா தனது உணர்வுகளை உறவுகளுடன் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து பிரித்தானியாவில் பிறந்த சிறுவன் செல்வன்.ஆதி முள்ளிவாய்க்கால் இனவழிப்பு சம்பவத்தினை உரையாக வழங்கினார். தொடர்ந்து ஆங்கிலத்தில் முள்ளிவாய்க்கால் அவலத்தினையும் அதன் நீதி கோரலையும் திரு. சென் கந்தையா அவர்கள் வழங்க, முள்ளிவாய்க்கால் இனவழிப்பும் சமகால அரசியலையும் தழுவி ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் உரையினை வழங்கினார்.

சமநேரத்தில் வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் மே மாதத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் திருவுருவப் படங்கள் நிலைப்படுத்தப்பட்டு அவர்களுக்கும் மலர் வணக்கமும் ஈகை சுடர் ஏற்றும் நிகழ்வும் நடைபெற்றது. குறிப்பாக 2009 மே மாத பகுதியில் தாயக மண்ணில் விடுதலையையே தங்கள் இலக்கு என்று இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்கள் திருவுருவப்படங்கள் அங்கே நிரைப்படுத்தபட்டிருந்தது. நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் வாழ்க்கையை நினைவு படுத்தும் வகையில் வந்திருந்தவர்களுக்கு “முள்ளிவாய்க்கால் கஞ்சி” சிரட்டையில் பரிமாறப்பட்டது. இந்நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் பெருமக்கள், இளையோர், முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து தப்பியவர்கள், உள்ளூர் பிரித்தானியா மக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு, உணர்வுகளுடன் சங்கமித்தனர். இந்நிகழ்வானது எமது தாயக விடுதலை அடையும் வரையும் எமது இனவழிப்புக்கு நீதி கிடைக்கும் வரையும் எமது பயணம் தொடரும் என்பதனை கட்டியம் கூறும் வகையில் உறுதி ஏற்புடன்
” நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற நம்பிக்கை பாடலுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

முந்தைய கட்டுரைமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு நீதி கோரி பாரிஸ் நகரில்….
அடுத்த கட்டுரைமே 18 நாள் நிகழ்வுகள்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்