முள்ளிவாய்க்கால் ஆறாத வலியின் 13வது நினைவேந்தல் நிகழ்வு 16/05/2022அன்று பிரித்தானியப் பாராளுமன்ற வளாகத்தில் தொழிற்கட்சியிக்கு ஆதரவான தமிழர்களின் ஏற்பாட்டில் நினைவுகொள்ளப்பட்டது.

பிரித்தானியாவின் தொழிற்கட்சி பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்,
தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள்,
சட்டவாளர்கள்,தமிழீழ விடுதலைச் செயற்பாட்டாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து முள்ளிவாய்க்காலில் இனவழிப்புக்குள்ளான தமிழ் உறவுகளை நினைவுகொண்டதோடு முக்கிய பிரமுகர்களின் உரைகளும் இடம்பெற்றது.

இறுதிப்போரின் போது சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் திட்டமிட்ட தமிழர் இனவழிப்பு நடைபெற்றதையும்,
மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் என்பன அங்கே இடம்பெற்றதையும் சுட்டிக்காட்டிப் பேசிய தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் இலங்கையின் இனப்படுகொலையாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கும்,தமிழர் உரிமைகள் மீளப்பெறுவதற்கும் ஆதரவுக்குரல் கொடுக்கவேண்டுமென வேண்டுகைகளை முன்வைத்தனர்.

இதேவேளை இந்த நினைவேந்தலுக்கு அழைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறையினர் இனவழிப்புக்குள்ளான தமிழர்களின் மறுக்கப்பட்டுவரும் நீதியை பெறும் செயற்பாடுகளில் பிரித்தானியாவுக்குள்ள பொறுப்பை சுட்டிக்காட்டினர்.
தமிழீழ அரசியற்துறை சார்பில் அதன் ஊடகப்பொறுப்பாளர் திரு சங்கீதன் உரையாற்றியிருந்தார்.

தொடர்ந்து திரு சங்கீதன் அவர்கள் உரையாற்றுகையில் இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட வன்முறைகளால் எமது விடுதலை இயக்கம் தேசியத் தலைவர் வே பிரபாரன் அவர்களின் தலைமையில் பிறப்பெடுத்தது.30 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற ஆயுதப்போராட்டமே தமிழர்களின் உரிமைப் பிரச்சினைகளை உலகத்திற்கு வெளிப்படுத்தியது.
மே18-2009 எமது விடுதலை இயக்கம் ஆயுதங்களை மௌனித்தபோதும் தொடர்ந்தும் நாம் தமிழீழ அரசியற்துறையாக தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்,
சர்வதேசம் எமது அரசியல் உரிமைப்போராட்டத்தின் நியாயத் தன்மையை ஏற்றுக்கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கி தமிழீழ அரசியற்துறையாகிய எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் தரவேண்டுமென்று கோரிக்கையையும் முன்வைத்தார்.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் அவற்றை ஆதரித்து தமது கைதட்டல்கள் மூலம் நம்பிக்கையினை வெளிப்படுத்தினர்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையானது தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அணையவிடாது பற்றியெரியும் தீச்சுடராக பற்றியுள்ளது.

தமிழினம் விடுதலை பெறும்வரை முள்ளிவாய்க்காலில் மௌனித்த ஆயுதங்களின் முழக்கங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும்.

முந்தைய கட்டுரையாழில் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும்
அடுத்த கட்டுரைமுள்ளிவாய்க்கால் மண்ணில் எம் மக்கள்…..

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்