பிரான்ஸ் தேசத்தில் நினைவுகூரப்பட்ட தமிழீழ காவலன்.

கடந்த 27/03/2022 அன்று இதயசத்திர சிகிச்சை பலனின்றி பிரான்ஸ் தேசத்தில் சாவடைந்த தமிழீழ காவல்துறையின் மாவட்டக் கண்காணிப்பாளரான கடமைவீரர் நிக்சன் ரஞ்சித்குமார் அவர்களின் 41வது நாள் நினைவு வணக்க நிகழ்வு நேற்று முன்தினம் 07.05.2022 சனிக்கிழமை பிரான்ஸ் பாரிசில் நினைவுகூரப்பட்டது. இதன்போது கடமைவீரர் ரஞ்சித்குமார் அவர்களின் தாயகச் செயற்பாடுகள் மற்றும் அவரது பசுமையான வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய நினைவுமலர் ஒன்றும் குடும்பத்தினரால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் தலைமையினை அவரது செல்ல மகள்களான யாழ்நிலா எழிலோவியா,தேவ அமிர்தா ஆகியோர் தலைமையேற்று நடத்தியது மனதை உருக்கும் நெகிழ்சியினை ஏற்படுத்தியிருந்தது.

நிகழ்வின் பொதுச்சுடரினை கடமைவீரர் ரஞ்சித்குமார் அவர்களின் மைத்துனரான புலவர் (கடற்புலிகள்)
அவர்கள் ஏற்றிவைத்தார்.
திருவுருவப் படத்துக்கான மலர்மாலையினை கடமைவீரர் ரஞ்சித்குமார் அவர்களின் துணைவியாரான பிறின்சி ரஞ்சித்குமார் (தமிழீழதேசிய எழுச்சிப் பாடகி) அவர்கள் அணிவிக்க,ஈகச்சுடரினை அவரது மாமியார் (கடற்புலி மாவீரர் பரந்தாமன் தாயார்) ஏற்றிவைத்தார்.
மலர்வணக்கத்தை மாமன் உறவுமுறையான திரு-திருமதி மனோகரன் அவர்கள்
தொடக்கிவைக்க
நினைவுப்பகிர்வுகளை அவரது செல்லமகள் மகள் தேவ அமிர்தாவும், மருமகன் அன்புத்தேவனும் கண்ணீர்மல்க பகிர்ந்தனர்.தொடர்ந்து
அரசியற்செயற்பாட்டாளர் நாயகன் மற்றும் தமிழீழ காவல்துறை நண்பர்கள் போராளிகள்,உறவினர்களாலும் அவர்பற்றிய நினைவுக் குறிப்புகள் பகிரப்பட்டது. சம நேரத்தில் அங்கு வருகைதந்திருந்த அனைத்து உறவுகளுக்குமான மதியபோசனமும் குடும்பத்தினரால் நன்றியுணர்வோடு பரிமாறப்பட்டது.

கடமைவீரர் ரஞ்சித்குமார் அவர்கள் 1991 இல் தமிழீழ காவல்துறை தொடங்கப்பட்ட நாளிலிருந்து இறுதிப்போர் நடைபெற்று முடிந்த 18/05/2009 நாள்வரை தமிழீழ காவல்துறையின் பல்வேறு உயர் பொறுப்புநிலைகளை வகித்து சிறந்த காவலனாக விளங்கி தமிழீழத் தேசியத் தலைமையாலும், தளபதிகள்,போராளிகள் மற்றும் அனைத்து தமிழீழ மக்களாலும் மதிக்கப்படும் பண்பாளராக பலருக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து அனைவரது மனங்களிலும் தனக்கென தனியிடம் பிடித்துக்கொண்டவர்.

இவரது இழப்பானது தமிழீழ தேசத்திற்கு இட்டு நிரப்பப்படாத இழப்பாக தமிழீழ விடுதலைப் பற்றுறுதியுள்ளவர்களால் அண்மைய நாட்களாக அதிகம் பேசப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
இறுதி யுத்தத்தின் பின்னர் முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து வெளியேறிய திரு நிக்சன் ரஞ்சித்குமார் அவர்கள் சிறிலங்கா இராணுவத்தால் அடையாளங்காணப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
தொடர்ந்து சிறைவைக்கப்பட்டவர் தாங்கொணா கொடும் சித்திரவதைகளை அனுபவித்து சில வருடங்களின் பின்னர் புனர்வாழ்வு எனும் பெயரில் விடுதலையானவர்.

சிறையிலிருந்து விடுதலையான போதும் சிங்களப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு அவர் இலக்கானார். மீண்டும் கைதுகளும்,விசாரணைகளும் குற்றச்சாட்டுகளும் அரச பயங்கரவாதத்தால் அவர்மீது முடுக்கிவிடப்பட்டபோது வேறு வழியின்றி தாயகத்திலிருந்து புலம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டார்.

புலம்பெயர் தேசத்திற்கு வந்தபின்னர் தனது தனிப்பட்ட முயற்சியில் தேசியச் செயற்பாடுகளையும்,இறுதிப்போரில் இனவழிப்புக்குள்ளான மக்களுக்கான நீதிகோரும் செயற்பாடுகளிலும்,
காணாமலாக்கப்பட்ட போராளிகள் மற்றும் பொதுமக்களைக் கண்டறிவது தொடர்பான மனித உரிமைச் செயற்பாடுகளிலும் இறுதிப்போரின் தமிழர் இனவழிப்பின் முக்கிய நேரடிச் சாட்சியாக பல்வேறு தளங்களில் செயற்பட்டு வந்திருந்தார்.
இதயசத்திர சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றிருந்த கடைசி நாட்களிலும் தனது தேசியக் கடமையிலிருந்து தவறாது தமிழீழ காவலனாக வாழ்ந்திருந்தார் என்பதனை அரசியற் செயற்பாட்டாளர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் நேற்றைதினமும் நினைவுகூர்ந்தனர்.

அதேவேளை தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாவீரர்,போராளிகள் குடும்பங்கள் மற்றும் மக்களுக்கான பொருளாதார உதவிகளை தனது சொந்த உழைப்பிலும்,தனக்குத் தெரிந்தவர்கள் மூலமும் வழங்கியிருந்தார் என்பது பலரது வாக்குமூலங்களாக அவரது இறுதிக் கல்லறை அடக்க நிகழ்வின்போது கண்ணீர்மல்க பலரால் நினைவுகொள்ளப்பட்டிருந்ததோடு நேற்றை நிகழ்விலும் பேசப்பட்டது.

தமிழீழ விடுதலை பெறும்வரை ஒவ்வொரு தமிழனும் இவர்போன்று தேசத்தை காக்கும் காவலனாக செயற்படவேண்டும் என்பதை இவரது வாழ்வும் சாவும் சொல்லிநிற்கும் செய்தியாக தமிழர் நெஞ்சங்களில் படரவிடப்பட்டுள்ளது.

தமிழீழ தேசத்தின் காவலனாக என்றும் தமிழீழ மக்களுக்குள்ளே அவர் வாழ்வார்.வாழ்ந்துகொண்டிருப்பார்.

முந்தைய கட்டுரைதமிழ்த் தேசிய மேதின நிகழ்வுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில்…
அடுத்த கட்டுரைபிரித்தானியாவின் வரலாற்று மையத்தில் மே 18 நினைவேந்தல் சிறப்பு ஏற்பாடுகள்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்