மழைக்கால இருட்டானாலும் கொப்பிழக்கப் பாயாது மந்தி!

-சுடரவன்

மழைக்கால இருட்டானாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது என்பது பழமொழி. அதேபோல சிங்களத்தரப்பினர் தமக்குள் என்ன தான் மோதிக் கொண்டாலும் தமிழ்பேசும் மக்களைக் கருவறுப்பது என்ற தமது ‘இலட்சியத்தில்’ இருந்து என்றும் மாற மாட்டார்கள்.

கப்பலில் வந்த இரண்டு லட்சத்து அறுபதினாயிரம் உர மூடைகளில் 40 மட்டுமே கிளிநொச்சிக்கு ஓதுக்கீடு என்ற செய்தி காலைக்கதிரில் வெளியாகியுள்ளது. கிளிநொச்சியிலுள்ள அனைத்து விவசாயிகளையும் வரிசையில் நிற்க வைத்து கோயிலில் பிரசாதம் வழங்குவது போல அரச அதிபர் வழங்கினாலும் இது போதாது. கிளிநொச்சி – யாழ்ப்பாண மக்கள் மீதான கடுப்பு இன்று நேற்றல்ல சிறிமா ஆட்சிக்காலத்திலிந்தே தொடர்கிறது. அன்றைய காலத்தில் நிலவிய உணவுத்தட்டுப்பாடு காரணமாக ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு அரிசி கொண்டு போக முடியாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஏனைய மாவட்டங்களில் இது சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டதோ என்னவோ யாழ்ப்பாண மாவட்டத்திற்குள்ளையே அன்று கிளிநொச்சித் தொகுதி இருந்தும் ஆனையிறவுத் தடை முகாமினூடாக அரிசி நெல் கொண்டு செல்ல முடியாது என்றது அன்னை சிறிமாவின் அரசு. (இன்றும் கூட யாழ் தேர்தல் மாவட்டத்திற்குள்ளே தான் கிளிநொச்சி உள்ளது) அன்று செல்வாக்கு செலுத்திய அமைச்சர் குமார சூரியரினாலோ யாழ்ப்பாண மாநகர மேய ர் அல்பிரட் துரையப்பாவினாலோ அல்லது இடது சாரிக்கட்சிகளினாலோ சிறிமாவின் இந்த உத்தரவை மாற்ற முடியாமல் போயிற்று. இதனால் பல இளைஞர்கள் வவுனியாவைத் தாண்டி அநூராதபுரத்திற்குச் சென்று அரிசி வாங்கி புகையிரத வண்டி மூலம் அதனைக் கடத்திக் கொண்டு வந்தனர். இடையிடையே சிங்களக்கடையரினாலும், புகையிரதப் பரிசோதகர்களாலும் அரிசியை இழந்த வரலாறும் உண்டு. புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் அரிசி கடத்திவரும் ஒரு இளைஞன் விபத்தில் சிக்கி ஓரு கையையும் இழந்தார்.

இன்று ஆரிய குளத்தில் பெளத்த கொடி பறக்கத்தடையா? யாழ். மாநகரசபையை ஓரு கை பார்த்துத்தான் விடுவேன் என்று கங்கனம் கட்டி நிற்கும் வடமாகாண ஆளுநரால் உர விநியோகத்தில் நிகழும் பாரபட்சம் பற்றி மூச்சு விடமுடியாது. கிளிநொச்சி மாவட்டத்தில் 27.500 ஏக்கர் நிலத்தில் சிறுபோகம் விதைக்கப்பட்டுள்ளது. இதில் ஏழாயிரம் முதல் எட்டாயிரம் ஏக்கர் நிலத்தில் 45 நாள் பயிராக உள்ளது இதற்காவது இக்காலத்தில் உரத்தை இடமுடியாது போனால் உரிய விளைச்சலைப் பெற முடியாது. இதெல்லாம் தெரிந்திருந்தும் சிறிமாவின் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தெரிவான அங்கஜயனோ அல்லது சந்திரகுமாரோ, டக்களஸ்சோ இது தொடர்பாக எதுவும் செய்ய முடியாது. பட்டு வேட்டி பற்றிய கனவில் இருக்கும் போது கட்டியிருக்கும் கோவணமும் கழவாடப்பட்டது போல சுமந்திரன் ஓரு வேளை பிரதமரானால் என்னென்ன பலாபலன் கிடைக்குமென்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் கிளிநொச்சிச் சிற்றரசரின் நிலையும் இதுதான். இனிமேல் இரணைமடுவில் பொங்கல் பானை வைக்கிறேன் என்று போகும் போது ஏதாவது விபரீதம் நிகழாமல் இருந்தால் சரி. கிளிநொச்சி அரச அதிபருக்கோ கமநல சேவைத்திணைக்கள அதிகாரிகளுக்கோ எதுவும் தெரியாது என்ற பாணியில் தான் காலைக்கதிர் செய்தி வெளியிட்டுள்ளது. வயல் நிலைமைகளைப் பார்வையிட எமக்கு எரிபொருள் கிடைக்கவில்லை என்ற பதிலைச் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


இதேவேளை தன்னுடைய வீட்டையும் நூலகத்தையும் போராட்டக்காரர்கள் எரித்துவிட்டார்கள் என்று கண்ணீர் சிந்துகின்றார் ரணில். இந்த வலிகளை முற்றிலும் பெளத்த சிங்களவர்களேயே கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களால் உணர முடியாது. தமிழர்களாலேயே உணர முடியும்- சில புத்தகங்கள் மிக அரிதானவை என்றும் அவர் குறிப்பிடுகிறார். அன்று யாழ் நூலகத்தை எரித்தவர்களுடைய பரம்பரையினர் தான் ரணிலின் வீட்டையும் நூலகத்தையும் எரித்துள்ளனர். யாழ் நூலகத்தில் பல அரிய ஓலைச்சுவடிகளும் இருந்தன. அவற்றை எப்படிப் பெறுவது? அன்று நூலகத்தை எரித்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமென்று இவர் விடாப்பிடியாக நின்று நீதியை நிலைநாட்டியிருந்தால் இன்று இவர் பக்கம் தமிழ்மக்கள் இருந்திருப்பர்.

மாறாக நூலக எரிப்பை நெறிப்படுத்திய காமினி திசநாயக்காவின் வாரிசு நவீனுடன் அல்லவா இவர் பின்னாளில் கைகோர்த்து இருந்தார். அந்த நவீன் ரணிலைப் புகழப்போய் முதலுக்கே மோசமானது. தன்னுடைய தலைவர் ரணிலின் ராஜதந்திரமே புலிகளிடமிருந்து கருணாவைப் பிரித்தது என்றார் அவர். பேச்சுவார்த்தைக்கு என சென்ற கருணாவிடம் உங்களைப் போன்ற ஓரு தளபதி இருந்திருந்தால் எங்களது ராணுவம் எங்கேயோ போயிருக்கும் என்று சிங்களத்தரப்பு பப்பாசியில் ஏற்றி விட்டது. அப்படியும் இருக்குமோ என சிந்தித்த அவர் பிரிந்து செல்லும் முடிவை எடுத்தார். ஓன்றுக்குப்பின்னால் நின்றால் தான் பூச்சியத்திற்கு பெறுமதி; என்னால் தானே ஓன்றுக்குப் பலம் சேர்ந்தது என எண்ணி ஒன்றுக்கு முன்னால் போய் பூச்சியம் நின்றால் அதற்கு பெறுமதியேது?

நவீனின் பேச்சு ரணிலை உற்சாகப்படுத்தியிருந்திருக்கலாம். ஆனால் தமிழ்ப்பகுதிகளில் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்கும் முடிவை புலிகள் எடுத்த காரணங்களில் இதுவும் ஓன்று. முடிவாக ரணிலின் ஜனாதிபதி கனவும் போயிற்று; தமிழரின் ஆயுதப் போராட்டமும் முடிந்து போயிற்று. கருணாவின் கற்பனையும் சாத்தியமாகவில்லை இறுதியாக ராஜபக்சாக்களின் புகழும் கரைந்து கறைபடிந்த ஓடுகாலி வரலாறு உருவாயிற்று.மொத்தத்தில் அன்று ரணில் சரியான நிலைப்பாடு எடுக்கத்தவறியதால் வரலாறு திசை திரும்பியது.

யாழ் நூலக எரிப்புத் தான் நாயன்மார்கட்டு சனசமூக நிலையத் தலைவராக இருந்தவரும் வாசிப்பில் அதீத ஆர்வம்கொண்டிருந்தவருமான சன்முகநாதன் சிவசங்கர் என்ற இளைஞனை பொட்டம்மானாக உருவாகியது.

முந்தைய கட்டுரைபாடநூல் திரிபுபடுத்தப்பட்டது வரலாற்று துரோகம். நன்றி Mithivedi
அடுத்த கட்டுரைபிரான்சின் தேசிய நாள் ‘la Fête du 14 juillet’’ (14 ஜூலை) லாச்சப்பல் 2022

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்