சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்கான ஐ.நா மன்றத்தில் எடுத்துரைக்கப்பட்ட தமிழர் விவகாரம்!

1 / 1

1.

சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்கான ஐ.நா மன்றத்தில் எடுத்துரைக்கப்பட்ட தமிழர் விவகாரம்!

 ஐ.நா சபையின் வணிக மற்றும் மனித உரிமை மன்றம் ( Business and human rights forum) மற்றும் சிறுபான்மையினருக்கான மன்றம் ( United Nations Forum on Minority Issues ) ஆகியவற்றின் கூட்டத்தொடர் நவம்பர் 27ம் திகதியிலிருந்து டிசம்பர் 1ம் வரை நடைபெற்றது. இதில் உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

குறிப்பாக கூட்டத்தொடர் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற எமது தேசத்தின் வீரமறவர்களின் நினைவேந்தல் நாளில் சிறீலங்கா பேரினவாத அரச பயங்கரவாதத்தால் தாயகத்தில் மேற்கொள்ளபட்ட மிரட்டல்கள் தொடர்பாக பிரதான அவையில் இடம்பெற்ற பொதுவிவாதங்களின் போது எடுத்துரைக்கப்பட்டதுடன் ஐ.நா வின் சிறப்பு அறிக்கையாளர்களுக்கும் உடனடியாக எழுத்துமூலம் அறிக்கைப்படுத்தப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தொடரின் இறுதிநாளான நேற்று பன்னாட்டுத் தளத்தில் உலகத் தமிழர் இயக்கத்துடன் இணைந்து செயற்படும் ஐ.நாவின் அங்கீகாராம்பெற்ற பாரதி அமைப்பின் ஒருங்கிணைப்பில் சிறுபான்மையினர் மற்றும் நாடுகளின் ஒருங்கிணைந்த சமூகங்களுக்கான உரிமை ( Minorities and Nations' Right to Cohesive Societies ) எனும் தலைப்பில் ஒரு பக்கவறை நிகழ்வும் நடாத்தப்பட்டது. இதில் ஐ.நா வின் பிரதிநிதிகளும் எம்மை போன்று விடுதலைக்காக போராடும் இனங்களின் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு - ஈழத் தமிழர்கள், ஐ.நா சபையின் சிறுபான்மையினரின் பிரச்சனைகள் தொடர்பான பேரவையில் கலந்து கொள்வதென்பது, இலங்கை தீவில் அவர்கள் சிறுபான்மையினர் எனப் பொருள்படாது. மாறாக ஈழத்தில் சிறீலங்கா அரசினால் நடாத்தப்பட்ட தமிழினப் படுகொலைபற்றி சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் தளமாகப் பயன்படுத்துதலே இதன் நோக்கமாகும். 

அத்துடன் சில தமிழ் அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர்கள், "ஒன்றுபட்ட சிறீலங்கா" எனும் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் சிங்கள அமைப்புகளுடன் இணைந்து ஐ.நா சபையில் சிங்கள அரசிற்கு சார்பாகச் செயற்படுவதைத் தெளிவூட்டுவதுடன் அதைத் தடுப்பதற்கான தளமுமாகும்.

அத்துடன் நாம் தமிழின விடுதலைக்காகப் போராடும் ஓர் இனமெனத் தொடர்ச்சியாக பல்வேறு சர்வதேச தளங்களிலும் ஒலிக்கச் செய்தல் வேண்டும்.