மோசமாகும் காலநிலை: பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
பிரித்தானியாவில் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு புயல் வீசக்கூடும் என பிரித்தானியா வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மதியம் 12.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை மேற்கு, மத்திய, தென் கிழக்கு, தென் மேற்கு இங்கிலாந்து, கார்டிஃப் (Cardiff) மற்றும் ஸ்வான்சீ (Swansea) ஆகிய பகுதிகளுக்கு முதல் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், புயல் வீசும் நேரங்களில் ஏற்படும் மின்னல் தாக்குதல் காரணமாக கட்டடங்கள் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன்போது மூன்று மணி நேரத்தில் 40 மில்லிமீற்றர் வரை மழை பொழியக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்படும் பெருவெள்ளங்களால் வாகனங்களில் பயணிப்பது ஆபத்தானதாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சனிக்கிழமை அதிகாலை 1.00 மணி முதல் நள்ளிரவு வரை, 23 மணி நேரத்துக்கு, வேல்ஸ் நாடு முழுவதிற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு இங்கிலாந்தின் லிவர்பூல், ஸ்டோக்-ஆன்-ட்ரெண்ட், லெய்செஸ்டர் மற்றும் கோர்ன்வால் ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நேரங்களில், மின்வெட்டுக்கள் நடைமுறைப்படுத்தப்படலாம் என்பதோடு பொதுப் போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.