தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு - 02.08.2025.

தேசியத் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வை வருகின்ற ஆகத்து மாதம் 2 ஆம் நாள் (02.08.2025) சனிக்கிழமை, ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த நிகழ்வாக சுவிற்சர்லாந்து நாட்டிலும் அதேவேளை, தமிழர் வாழும் உலகப்பரப்பு எங்கும் எழுச்சியுடன் மேற்கொள்ள ஒழுங்குகள் பூர்த்தியடைந்துள்ளன என்பதனை உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களுக்கு உரிமையுடன் அறியத்தருகிறோம்.

மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்

Methagu V.Pirabakaran Remembrance Organization

05.04.2025

உலகெங்கும் பரந்துவாழும் எம் உயிரினும் மேலான தமிழ் மக்களே.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு - 02.08.2025.

தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்து போராடிய தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியின் நந்திக்கடலோரம் நடைபெற்ற இறுதிச் சமர் வரை படைநடத்தி, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் தன் இன்னுயிரை ஆகுதியாக்கினார் எனும் பெருந்துயர்மிகு அறிவிப்பை கடந்த 12.10.2024 அன்று சுவிற்சர்லாந்து நாட்டில் ஒன்று கூடிய போராளிகள் மற்றும் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் முன்னிலையில் தமிழீழ மாவீரர் பணிமனை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

அவ்வறிவிப்பைக் கருத்திற்கொண்டு, எமது தேசியத் தலைவர் அவர்களின் வீரவணக்க நிகழ்வை முன்னெடுக்கும் நோக்குடன் "மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்" கட்டமைக்கப்பட்டது.

தேசியத் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வை வருகின்ற ஆகத்து மாதம் 2 ஆம் நாள் (02.08.2025) சனிக்கிழமை, ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த நிகழ்வாக சுவிற்சர்லாந்து நாட்டிலும் அதேவேளை, தமிழர் வாழும் உலகப்பரப்பு எங்கும் எழுச்சியுடன் மேற்கொள்ள ஒழுங்குகள் பூர்த்தியடைந்துள்ளன என்பதனை உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களுக்கு உரிமையுடன் அறியத்தருகிறோம்.

ஒரு கால்நூற்றாண்டுக்கு மேலாக அடக்குமுறைக்கு முகம்கொடுத்து நின்ற ஒரு தேசிய இனத்தின் வரலாற்றையே மாற்றுகின்ற விருப்போடும் துணிவோடும் நம்பிக்கையோடும் எதிரிக்கெதிரான விட்டுக்கொடுப்பற்ற ஒரு மாபெரும் விடுதலை இயக்கத்தை கட்டியெழுப்பி முப்படை அமைத்து ஒரு தனித்த தேசத்துக்கான வல்லமைகளோடு போரட்டத்தை வழி நடத்தியவர் எமது தேசிய தலைவர்.

எமது மக்கள் எதிர்கொண்ட அத்தனை வலிகளையும் தானும் சுமந்து, இறுதியில் விடுதலைக்கான இந்த நீண்டபாதையில், எந்த மக்களுக்காக ஆயுதமேந்தினாரோ அம்மக்களுக்காகவே கடைசி மணித்துளிவரை வீரமுடன் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

"எனது மக்களுக்கு வீடுதலையை பெற்றுக் கொடுங்கள்" என்பதே அவர் எங்களுக்கு வீட்டுச் சென்றிருக்கும் "விடுதலைப் பத்திரம். "தேசியத் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்தும் அந்நாளில் அதனையே ஒன்றுகூடும் எங்கள் அனைவரது மனங்களிலும் ஏந்துவோம்.

தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலட்சியம் அடையும் வரை அணையாது காப்போம் என உறுதியெடுப்போம். எமது தேசியத் தலைவரினது வீரவணக்க நிகழ்வை பேரெழுச்சியுடன் உலகமே வியக்கும் வகையில் மேற்கொள்வோம்.

'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'

நிகழ்வு ஏற்பாட்டுக்குழு,

மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்.

இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது.

-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்

Files