ஜம்மு – காஷ்மீர் தாக்குதல் - ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

ஜம்மு – காஷ்மீர் தாக்குதல் - ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று முன்தினம் (22) தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, தீவிரவாதிகளைப் பிடிக்க இராணுவத்தினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக காஷ்மீரில் இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை பொலிஸ் தரவுகளில் இடம்பெற்றவர்கள், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் அடங்குவர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே ஜம்மு காஷ்மீரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுக் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து காஷ்மீரிலிருந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வெளியேறியுள்ளனர். அவர்களுக்கு இடையூறு இல்லாமல் அதே நேரத்தில் தீவிர சோதனைக்குப் பிறகு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.