தமிழீழ இராச்சியத்தில் எனது இறுதிக்கணங்கள். 2009 மே 17 சென்ற வருடத் தொடர்ச்சி

300 ஸ்பாட்டகஸ் வீரர் தலைவனின் மோதிரம் போல  தலைவரின் தாய் தந்தையர் எனக்குத் தொிந்தார்கள்.

தமிழீழ இராச்சியத்தில் எனது இறுதிக்கணங்கள். 2009 மே 17  சென்ற வருடத் தொடர்ச்சி

சென்ற வருடத் தொடர்ச்சி தமிழீழ இராச்சியத்தில் எனது இறுதிக்கணங்கள். 2009 மே 17

 

2009 மே 17 நேரம் அதிகாலை 3.30  மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

 

இதயத் துடிப்பு சற்று அதிகமாகவே உணர்கிறேன். ஒருவாறு அங்கிருந்த அனைவரையும் கூட்டிக்கொண்டு மெதுவாக வீதியில் வந்து ஏறினோம். வானில் ஆளில்லா வேவு விமானம் வட்டமிட்டுக்கொண்டே இருந்தது. 

ஆயிரம் கழுகுகளால் வட்டமிடப்படும் சில கோழிக்குஞ்சுகளின் நிலைமையில் அங்கிருந்த மக்களின் நிலை. 

 

வீதியில் நாங்கள் ஏறுகிற நேரத்தில் இயக்கம் தலைவரைக் காப்பாற்றும் நோக்கிலான நந்திக்கடலை ஊடறுத்துக் கடக்கும் தமது வலிந்த தாக்குதலை ஆரம்பித்தது. முதல் வேட்டொலி கேட்டு பத்து விநாடிகளுக்குள்ளாகவே எதிாியின் மல்ரி பரல் றொக்கற் தாக்குதல் எமது அணிகள் நிலைகொண்டிருந்த பகுதிகள் மீது சரமாாியாக வந்து வீழ்ந்து வெடித்தன. 

 

நாங்கள் எல்லோரும் அந்தந்த இடங்களிலேயே வீழ்ந்து படுத்தோம். எம்மில் யார் காயம் யார் இறந்தது என்று யாருக்கும் தொியாது தமக்கருகில் இருப்பவர் உயிரோடிருக்கிறார் என்பதை மட்டுமே உறுதியாகத் தொியும் நிலை. ஒவ்வொருவரும் தமது உயிரை மட்டுமே காத்துக்கொள்ள போராடும் நிலைமை அங்கு நிலவுகிறது. அந்த உக்கிரமான மிலேச்சத்தனமான எறிகணைத் தாக்குதல்கள் வகைதொகையின்றி நடந்து கொண்டிருந்தன. இயக்கத்தின் சிறுரக ஆயுதங்களின் தாக்குதலை எதிாி கனரக மற்றும் ஆட்டிலெறித் தாக்குதல் நடாத்தி முறியடித்துக்கொண்டிருந்தான். அவற்றில் இருந்து தப்புவதற்கு அருகில் நின்றிருந்த பஸ் வண்டிக்கு பக்கவாட்டாக மறைப்புக்குள் சென்று போது அங்கே நிறையப் பேர் ஏற்கெனவே நின்றார்கள். 

அங்கே குபேரன் ராஜூ   திலீபன் விதுஸன் சோழன் முத்து இன்னுமொரு போராளியும் ஜெகன் அங்கிள் அவர்களுடன் எனது பொறுப்பாளர் என கணிசமானவர்கள் நிறைந்திருந்தார்கள் .  அனைவரது பெயர்களையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.. அவர்களுடன் தலைவர் அவர்களது தாயாரும் தந்தையாரும் கூட இருந்தார்கள். எல்லோருடைய முகங்களிலும் அச்சநிலை தொிந்தது. அவை பல்வேறு மனநிலைகளின் கலவைகளாக  இருந்தன. யாரோடும் எதுவும் கதைக்க தேவையில்லாமலே கள நிலைமை விளங்கியது. ஏற்பாடுகள் எதுவும் முழுமையாக்கப்படாமலே இறுதித் தாக்குதல் ஆரம்பிக்கப்பட வேண்டிய நிலைமை என்பது. எனது பொறுப்பாளர் உாிய இடத்திற்கு கொண்டு செல்ல முடியாமைக்கான காரணத்தை கேட்டறிய எனக்குத் தோன்றவில்லை.

இந்த கணம்  உயிரோடு இருக்க வேண்டும் ஒவ்வொரு உயிாினதும் ஏக்கமாகவும் இயக்கமாகவும் இருந்தது.   

அடுத்தது என்ன என்பதை அவசரமாக முடிவெடுக்க வேண்டும். எனது பொறுப்பாளர் அதே பேருந்தின் மறைவில் ஒருசில மண்மூடைகளின் காப்பில் அங்கிருந்த போராளிகள் சூழ்ந்திருக்க ஸ்ரெச்சாில் படுத்தபடி செய்மதித் தொலை பேசியில் பேசிக்கொண்டிருந்தார். அவர் எதை யாருடன் பேசுகிறார் என்பதை  அறிய தேவையிருக்கவில்லை. அங்கு எந்த அதிசயங்களும் நிகழ வாய்ப்பிருக்கவில்லை. 

 

 இன்னும் ஒருசில மணித்துளிகளில் அனைவரும் கொல்லப்பட்டுவிடுவோம். என்பதே அனைவரதும் அசைக்க முடியாத நம்பிக்கை. எத்தனையோ களங்களில் சாகாதவர்கள் அனியாயமாக சாகப்போகிறோம். எத்தனையோ தேசக் கனவுகளோடு வாழ்ந்தவர்கள் அந்த கனவுகளை உருவாக்கியவர்கள் சாகப் போகிறார்கள். தமிழீழம் எனும் மாபெரும் இராச்சியத்தின் அழிவின் இறுதித் தருணங்கள். மனம் அறிவு நிலை தளரத் தொடங்கியிருந்தது. 

 

காயப்பட்டவர்களை அழைத்துச் செல்வது போல எனது பொறுப்பாளரை நான் அழைத்துப் போவதாக நேற்று சந்தித்த போது கேட்டிருந்தேன். தாம் அப்படி வரப்போவதில்லை என்பதை முன்பே சொல்லியிருக்கிறார். 

அதனால் மீண்டும் முயலப் போவதில்லை. 

நேரம் 5 மணியை நெருங்கிக் கொண்டிந்தது. தாக்குதல்களின் வேகம் சிறிது சிறிதாக அடங்கிக் கொண்டிருந்தது. அந்த ஊடறுப்புச் சமர் வெற்றியளிக்கவில்லை என்பது புலனானது. 

 

நாம் சாகத்தான் போகிறோம் அந்த சாவு வீணானதாக இருக்கக் கூடாது . தற்கொலை செய்ய விரும்பவில்லை . அப்போது ஆயுதம் துாக்கி சண்டையிடவும் முடியவில்லை. என்ன செய்வது என எண்ணிய போது திலீபன் அண்ணா வந்து என்னிடம் சிவனந்தன் நீங்கள் அங்காலை போறதென்றால் இவர்களையும் பாதுகாப்பாகக் கொண்டு சென்று விடுகிறீர்களா என்றார். அப்போ நீங்கள் இவர்களைக் கொண்டு போகவில்லையா என்றேன் . இல்லை நான் அங்காலை வரமுடியாது . நான் நிற்கப் போகிறன் என்றார். அவரது அந்த உறுதியான முடிவு எனக்கு மிகவும் மாியாதைக்குாியதாக இருந்தது. அவ்வாறான ஒரு வீரனுக்கு ஒரு திருப்தியான மனநிலையை வழங்கவிரும்பினேன். உங்களை நினைத்து பெருமைப் படுகிறேன் என்ற பக்கம் திரும்ப அங்கே நிறைமாத கர்ப்பிணியாக தனது மூன்று வயதிருக்கும் மகனை கையில் பிடித்தபடி சுபா அக்கா.

இந்த வீரத் தம்பதிகளுக்காக என்ன செய்யப்போகிறோமோ எம் வாழ்வில். அண்ணை அவர்களுக்காக இல்லாவிட்டாலும் உங்களுக்காக நான் இந்தப் பணியைச் செய்கிறேன். அத்தோடு தலைவருடன் செல்லும் அணியில் செல்ல எங்களுக்கு அதிஸ்டம் இல்லை அவரை தமிழினத்திற்காகத் தந்த இந்தத் தாயையும் தந்தையையும் காப்பாற்ற வேண்டியது அப்போது எனது கடமையாக தோன்றியது.

இந்தக்கடமையின் போது நான் இறந்தாலும் திருப்தியாக சாவேன். என்கிற விருப்புடன் நான் அதற்கு சம்மதித்தேன். மிக்க நன்றி என்றவாின் முகத்தைப் பார்த்தேன் போது என் கண்கள் பனித்திருந்தன. கலங்கிய கண்களுக்கு ஊடாக அவர் ஒரு தேவனைப் போலிருந்தார்.

300 ஸ்பாட்டகஸ் வீரர் தலைவனின் மோதிரம் போல  தலைவரின் தாய் தந்தையர் எனக்குத் தொிந்தார்கள்.

காலம் இன்னும் ஏதோ ஒரு கடமையை எனக்கு தர நினைக்கிறது . உயிரோடு தப்பினால் இது தேசத்திற்காக தப்புவிக்கப்பட்ட உயிர் என்கிற ஒற்றை நம்பிக்கையுடன்  அதையும் சாியாக செய்ய வேண்டும் என்கிற வெறியோடு அங்கிருந்து நகர்ந்து மக்களோடு கலந்து நிற்பது என்கிற முடிவுடன் எனது பொறுப்பாளாிடம் விடைபெற நினைத்தேன். அவரோ அந்த இறுதி நேரத்திலும் க்புலம் பெயர் தேசங்களில் பணியாற்றிய பொறுப்பாளர் ஒருவருக்கு ஆணை பிறப்பித்துக்கொண்டிருந்தார். 

தப்பி வாற போராளிகளைக் கைவிடாது அவர்களுக்கான வாழ்வாதாரங்களை ஒழுங்குபடுத்தி கொடுங்கோ. தலைவரை நம்பி நின்றவர்களை தமிழினம் கைவிட்டதாக இருக்கக் கூடாது. இந்தச் சொற்கள் ஏனோ என் காதுகளிலும் ஆழமாக விழுந்தன. சோர்ந்திருந்த உடல் மீண்டும் புத்துணர்வு பெற்றது 

 

நேரம் 6 மணி. மாவீரரை மனதில் நினைத்துக் கொண்டே தலைவரது அம்மாவைத் துாக்கி அவரது சக்கர நாற்காலியில் இருத்தினேன். அப்பாவை எனது மனைவி சுதா கைதாங்கலாக பிடித்துக் கொண்டாள். சுபா அக்காவையும் இவர்களது ஒரு பையையும் ஜெகன்  அங்கிள் பிடித்துக்கொண்டார். நின்ற அனைவாிடமும் சொல்லிவிட்டு வீதியை நோக்கி காலெடுத்து வைத்தேன். 

ஒருகரம் என் காலைப் பற்றி  ‘ அண்ணா என்னையும் கொண்டு போங்கோ’  என்றது ஒரு கரம். திரும்பிப் பார்த்தேன். அங்கே செயலிழந்து போன உழவியந்திரம் ஒன்றின் அடியில் ஒரு பெண்போராளி . அவளது இரண்டு கால்களும் துண்டாடப்பட்டிருந்தன. 

நான் ஒருகணம் நிலைகுலைந்து போனேன். உடனே அவளிடம் “கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் காயக்காரரை ஏற்றிக்கொண்டு வருகிறார்கள் இவ்விடத்தால் வரும்போது கூப்பிடுங்கள் வருவார்கள் என்றுவிட்டு அங்கிருந்து வீதியால் வட்டுவாகல் பக்கமாக நகரும் மக்களோடும் காயக்காரா்களோடும் சக்கர நாற்காலியைத் தள்ளிக் கொண்டு சென்றேன். பாதை முழுவதும் மக்கள் நொிசலும் சிதறிய மரங்களும் குண்டுச் சிதறல்களும் ஒவ்வொரு அடியாக சில வேளைகளில அரை அடிகளாக நகர்ந்து நகர்ந்து சென்றுகொண்டிருந்தோம். அப்போது கூட தமிழீழத் தேசத்தின் காவலர்கள் காயக்காரரை தூக்கி சென்றுகொணடிருந்தார்கள்.

 எறிகணைச் சிதறல்களும் துப்பாக்கி ரவைகளும் பட்டு மக்கள் காயமடைந்துகொண்டே இருந்தார்கள். 

நாங்கள் வட்டுவாகலை அடைய முன்பதாகவே எம்மைக் கடந்து இராணுவத்தினர் 50 கலிபர் துப்பாக்கிகளை துாக்கிச்சென்று எங்களைக் கடந்து நிறுத்தி தப்பி வந்து கொண்டிருந்த மக்கள் மீது சரமாாியாக சுடத்தொடங்கினார்கள். எங்குமே மரண ஓலங்கள். 

அடுத்தது நானாக இருக்கலாம் என்கிற எண்ணம் மட்டுமே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. 

 

எனது கையிலிருந்த இயக்கம் திருமணப்பாிசாகத் தந்திருந்த மணிக்கூடு இருந்தது. வலது கைப் பெருவிரைல பட்டியினுள் விட்டுத் திருப்பினேன் அது அறுந்து விழுந்தது.  அப்படியே நகர்ந்து வட்டுவாகல் பாலத்திற்கு வந்தோம். 

 

வட்டுவாகல் பாலத்தடியிலிருந்த ஆலமரம் பிளந்து கிடந்தது. அதன் சிதைக்கப்பட்ட கிளைகள் சிதறிக்கிடந்தன. விமானப்படையின் தாக்குதல் எவ்வகையில் கொடியது என்பதற்கு அந்த ஆலமரம் சாட்சி. உடைந்து கிடந்த கிளைகளுக்கூடாக சக்கர நாற்காலிச் சில்லுகள்  உருள மறுத்தன. ஒருவாறு தம்பிடித்து தள்ளி தள்ளி மரத்தைக் கடந்தேன் விமானத்தின் ஆயிரம் கிலோ குண்டொன்று நிலத்தினுள் ஊடுருவி வெடித்திருந்த மிகப் பொிய கிடங்கு ஒன்று குறுக்கே கிடந்தது. அதனை உள்ளே இறங்கி ஏறினாலே மறு பக்கத்திற்கு வர முடியும். சக்கரங்கள் ஈர மணலினுள் புதைய தள்ளித் தள்ளி சில இடங்களில் அருகிலிருப்பவர்களினதும் ஜெகன் அங்கிளின் உதவியுடனும் அந்தப் பள்ளத்தைத் தாண்டி வட்டு வாகல் பாலத்தில் ஏறிய போதே சற்று நிம்மதிப் பெருமூச்சொன்று என்னையறியாமலே வந்து போனது. செல் மற்றும் துப்பாக்கி ரவைகளின் தாக்குதல் எல்லைக்குள் நாங்கள் தப்பிவிட்டோம். ஆனால் எதிாியின் அகன்ற கொலைக் களத்திற்குள் நாங்கள் நுழைந்திருக்கிறோம் என்பதும் இனி என்ன நடக்கும் என்பதும் மிகவும் அச்சத்தை தந்து கொண்டிருந்தது. எனினும் மிகவும் இயல்பாக நடந்து  சென்றோம். 

திடீரென்று எமக்கு பின்னால் இருந்து விலகுங்கோ விலகுங்கோ என்ற குரல் உச்ச ஸ்தாயியில் கேட்டது . எம்மைக் கடந்து பெருந்தொகையான காயக்காரர்களை துமந்தபடி பலரும் ஓடிக்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பெண்ணின் கைகள் துண்டாடப்பட்டு தோலில் தொங்கிக்கொண்டிருந்தது. 

பாலம் எங்கும் இரத்த வெள்ளம். 

அப்போது யாரோ என்னை அழைத்து உங்கடை தம்பி கரன் இறந்தது உங்களுக்குத் தொியுமா என்றார். என்னால் அதை நம்ப முடியவில்லை. எல்லாம் நடந்து முடிந்த போதில் அவனும் எம்மோடு இல்லை என்பதை மனம் ஏற்க முடியவில்லை. எனது தம்பி எனது நம்பிக்கை. நாங்கள் அவனைத் தொலைத்துவிட்டோம். அவனது உடலைக்கூட பார்க்கவில்லை என்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. ஓவென்று கத்தி அழ வேண்டும் போலிருந்தது. நான் துவண்டு போனேன் என்கால்கள் நகர மறுத்தன. எனது மனைவிக்கும் அவனை நன்றாகப் பிடிக்கும்.

 

 நான் சண்டைகளில் நின்ற போது அவன்தான் அவர்களுக்கு உதவியாக இருந்தவன். 

நான் காயமடைந்து பின்வாங்கி இருந்த போது எனக்கு உணவு தந்து பராமாித்தவன். பல தடவைகள் யுத்தப் பிரதேசத்திலிருந்து வெளியேறக்கூடிய வாய்ப்பிருந்தும் வெளியேறாதிருந்து தற்போது வெளியேற விரும்பியபோதில் கொல்லப்பட்டுவிட்டான். கடந்த மூன்று நாட்களுக்கு முன்  14.05.2009 அன்று  மேற்கொள்ளப்பட்டிருந்த பலகுழல் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டிருக்கிறான். நுாறு மீற்றர் அருகாமையில் அவர் இறந்து போனது என் காதில் விழாமல் இருந்திருக்கிறது. 

 

டே அம்மா இப்ப அழாதேயுங்கோ. உங்கடை கஸ்டம் விளங்குது. இப்ப நீங்கள் அழுதால் அவங்கள் உங்களை கவனிப்பாங்கள் . அதனால் எல்லோருக்கும் பிரச்சனை வரும் . அதனாலை தாங்கிக்கொள்ளுங்கோ என்ற சுதாவின் கலங்கிய கண்கள் என்னை அழவிடாமல் சிறிது தடுத்திருந்தன. மீண்டும் நகர்ந்தோம். நினைவுகள் முழுவதும் தம்பியைச் சுற்ற ஆரம்பித்து அவனது குடும்பம் எனது அம்மா அப்பா மற்றும் அண்ணாவின் குடும்பத்தினரது நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருந்தன. என்ன ஆகியிருப்பார்கள். 

 

வட்டு வாய்க்காலின் முடிவில் இராணுவத்தினர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

 

நான் சக்கர நாற்காலியை  நகர்த்துவதிலும் சுதா அப்பாவை நகர்த்துவதிலும் மட்டுமே கவனத்தை செலுத்துவது போல நடந்துகொண்டோம்.  அப்போது இராணுவத்தினர் வரும காயக்காரரை கவனிக்கவென்று சிறு மருத்துவ கொட்டகை ஒன்றை அமைத்து காயக்காரரை கையேற்றுக்கொண்டிருந்தார்கள். 

 

அம்மா சக்கர நாற்காலியுடன் வருவதைக்கண்டுவிட்ட இராணுவத்தினன் வந்து அம்மாவை கொண்டுசென்றான். நான் செய்வதறியாது நின்றேன். மீண்டும் அவனே நீங்க போங்க நாங்கள் அங்காலை கொண்டுவந்து தாறம் என்றான். 

வேறு வழியின்றி நகர்ந்து அவன் சொன்ன இடத்தில் காத்திருந்தோம்.  அப்பா நடந்து நடந்து களைத்துப் போய்விட்டார். எங்களுக்கும் மிகுந்த தாகம். தண்ணீரைத் தேடினேன். எங்குமே காணவில்லை. 

 

அப்போது அம்மா பார்வதியை கொண்டுவந்து வெளியே தள்ளிவிட்டான். உடனே ஓடிச்சென்று பிடித்துக்கொண்டேன்.  அவரது சக்கர நாற்காலி மாற்றப்பட்டிருந்தது. உடைந்துவேறுமிருந்தது. மீண்டும் கடினப்பட்டு தள்ளிக்கொண்டு நடந்தோம். 

 

வழியில் அப்பா என்னிடம் கேட்கிறார். உங்கடை தொப்பிக்காரர் வாறாரோ என்று பாருங்கோ என்றார். இல்லையப்பா அவர் இதாலை வரமாட்டார் என்றேன். எனக்கும் தொியும் என்பது போலப் பார்த்தார்.

நாங்கள் சிறிது நேரம் மறந்திருந்த களத்தை நினைவுபடுத்திவிட்டார். இப்போது அங்கு என்ன நடக்கும்? அண்ணையாக்கள் தப்பியிருப்பார்களா கஸ்ரோ அண்ணைக்கு என்ன நடந்திருக்கும்? யாரார் உயிருடன் இருப்பார்கள் இப்படி பலவாறான எண்ணங்கள் மனதில்.  

 

மிகுந்த தாகத்திலிருந்த எமக்கு அங்கிருந்த பனங்கூடலுக்குள் தேங்கி நின்ற தண்ணீர் தாகம் தீர்க்க உதவியது . அதற்காக கலைந்த மக்களை இராணுவம் பனை மட்டைகளால் அடித்து விரட்டியது. 

 

நடந்து நடந்து இறுதியாக ஒரு கம்பிகளால் வேலியிடப்பட்ட வயல் வெளி ஒன்றினுள் சிறைவைக்கப்பட்டிருந்தோம்.

 

அவர்களை ஓாிடத்தில் இருத்தி  விட்டு குடிப்பதற்கு நீரெடுக்க சென்றேன். அங்கு சிறிதளவு நீரை இராணுவத்தினர் பகிர்ந்தளித்துக்கொண்டிருந்தார்கள். அதுவும் பெண்களுக்கே முன்னுாிமை. எனவே நான் திரும்பிவந்து எனது மனைவியை அனுப்பினேன். அவள் சிறிது தண்ணீருடன் வந்தாள். அதிலிருந்த சிறிய மூடிகளில் ஆளுக்கொரு மூடி தண்ணீர் 5 மிலீ. வீதம். அப்போது எனக்கும் ஒரு மூடி தண்ணீர் தாங்கோ என்றபடி நித்தி சாஸ்திாியார் வந்தார். அவருக்கும் சிறிது தண்ணீர் கொடுத்துவிட்டு அம்மா அப்பாவிடம் வந்து அவர்களிடமிருந்த சமபோசாவைப்  பிசைந்து உண்ணக்கொடுத்தோம். நாமும் ஒரு உருண்டை விழுங்கி விட்டு அந்த வெறும் தரையில் மனைவியின் துப்பட்டாவை விரித்து அம்மாவையும் அப்பாவையும் படுக்கவைத்துவிட்டு இருபுறமும் நாங்கள் காவலாக படுத்து இருந்தோம். நித்திரை வரவில்லை. ஆங்காங்கே வெடிச்சத்தங்கள் கேட்டுக்கொண்டேயிருந்தன. 

 

தாெடரும்…