இலங்கையின் ஆட்களை பதிவு செய்யும் சட்டத்திற்கும் உள்ளூராட்சி சபைகள் தேர்தல்கள் சட்டத்திற்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகளும் குறைபாடுகளும்
பொ. சிந்துயன் இறுதியாண்டு சட்டத்துறை மாணவன் இங்கிலாந்து இலங்கையை பொருத்தவரையில் வாரந்தோறும் சரி மாதந்தோறும் சரி பல்வேறு வகையான சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.ஆனால் உருவாக்கப்படும் சட்டங்கள் அனைத்தும் சட்டத்தில் கூறப்பட்ட முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.ஏனெனில் சட்டங்களை உருவாக்கும் போது அச்சட்டமானது நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்புடையதா? அல்லது அதனுடன் முரண்படக்கூடிய சட்டங்கள் எவை எனவும் அவற்றுக்கிடையிலான முரண்பாட்டைத் தீர்த்து எவ்வாறு சட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று கூட இலங்கையின் அரசாங்கம் நினைப்பதுமில்லை>வெறுமனே பெயருக்கு ஏற்றால் போலும் தாம் நினைத்தபடியும் சட்டத்தினை உருவாக்குகின்றது இலங்கை அரசு. இவ்வாறு உருவாக்கப்படும் சட்டங்களால் மக்களும் மக்களுடைய எதிர்காலமும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அந்த வகையில் தான் இலங்கையின் ஆட்பதிவு சட்டம் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் சட்டம் என்பவற்றுக்கிடையிலான முரண்பாடுகள் மக்களின் வாழ்வை எவ்வாறு கேள்விக்குட்படுத்தியுள்ளது என்பதை ஆய்வு செய்கின்றது இந்த கட்டுரை....

தேசிய அடையாள அட்டை என்பது இலங்கையில் பாவிக்கப்படும் அடையாளப்படுத்தலுக்கான ஒரு ஆவணமாகும். இலங்கை குடியுரிமை பெற்ற 15 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது கட்டாயமானதொரு விடயமாகும். தேசிய அடையாள அட்டையானது 2016 ம் ஆண்டின் 8ம் இலக்க ஆட்களை பதிவு செய்யும் (திருத்தப்பட்ட) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 1968 ம் ஆண்டின் 32ம்இலக்க ஆட்களைபதிவு செய்யும் திணைக்களத்தால் வழங்கப்படுகிறது.
தற்போது இலங்கையை பொறுத்தவரையில் தேசிய அடையாள அட்டையை எப்போதும் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரிவினருக்கு சோதனை மற்றும் பிற சந்தர்ப்பங்களில் இது காட்டப்படல் வேண்டும். அதுமட்டுமல்லாது அரச மற்றும் ஏனைய பரீட்சைகளில் தோற்றுவதற்கும;; கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போதும் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கும் தேர்தலில் வாக்களிப்பதற்கும் மற்றும் தேர்தல் ஒன்றில் போட்டியிடுவதற்கான வேட்புமனு சமர்ப்பிக்கும் போதும் தேசிய அடையாள அட்டை இன்றியமையாத ஒன்றாகும்.
இலங்கையை பொறுத்தவரையில் தேசிய அடையாள அட்டையின் பரிணாமமானது பல வளர்ச்சிக் கட்டங்களை கடந்து வந்துள்ளது என்றே கூறமுடியும். பதிவேடுகள் மூலம் இருந்த அடையாள அட்டை முறையானது இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை முறையை அடைந்துள்ளது. பல ஐரேப்பிய நாடுகளில் உள்ளது போன்று இலங்கையின் தேசிய அடையாள அட்டை முறைமை காணப்படுகிறது. உலகளாவிய ஹென்லி கடவுச்சீட்டு தரவரிசையின் படி இலங்கையின் கடவுச்சீட்டானது 91 வது இடத்தை பெற்றுள்ளது. அடையாள அட்டையின்றி கடவுச்சீட்டு பெறடுடியாது என்பது நிதர்சனமான உண்மையாகும். எனவே இலங்கைக் கடவுச்சீட்டு பெற்ற நிலை என்பது இலங்கை தேசிய அடையாள அட்டை பெற்ற நிலை என்றே கூற வேண்டும்.
தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படை தகுதியாக இலங்கை பிரஜையாக இருக்கும் 15 வயதை எட்டிய அல்லது அடையும் ஒவ்வொரு நபரும் தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்பதாகும். அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தினை பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதிபர் அல்லது பிரிவெனாதிபதி மூலமும் தோட்டகுடியிருப்பாளர்கள் தோட்ட அதிகாரிகள் மூலமும் அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்த ஏனைய விண்ணப்பதாரர்கள் வசிக்கும் பகுதியின் கிராம அலுவலர் மூலம் பிரதேச செயலாளரின் மேலொப்பம் கட்டாயம் இடப்பட்டு விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.
சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் மேலதிக மாவட்ட பதிவாளரால் சான்றளிக்கப்பட்ட பிறப்புச்சான்றிதழ் அல்லது பிறப்பு பதிவேட்டில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட குறிப்பு மற்றும் 06 மாத காலத்திற்குள் பெற்றுக்கொள்ளப்பட்ட தரமுடைய புகைப்படம் மற்றும் விண்ணப்பக்கட்டணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு என்பனவும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
2017ம் ஆண்டின் 16 ம் உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தல்கள் (திருத்தப்பட்ட) சட்டத்தில் குறிப்பிடப்பட்டபடி அங்கீகரிக்கப்பட்ட அரசியற்கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுதற்கான காரணங்களாக அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிக்குரிய வேட்புமனுவில் கட்சி செயலாளரும் சுயேச்சை குழுவுக்குரிய வேட்புமனுவில் குழுத்தலைவரும் கையொப்பம் இட்டு வேட்புமனுவை சமர்ப்பிக்காதிருத்தலும் சமர்ப்பிக்கப்படுகின்ற வேட்புமனுவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி செயலாளரது அல்லது சுயேச்சை குழு தலைவரது கையொப்பத்தினை சமாதான நீதவான் ஒருவரால் உறுதிப்படுத்தப்படாமல் இருத்தலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியொன்றின் வேட்பு மனுவை அக்கட்சிச் செயலாளரால் அல்லது அதிகாரம் பெற்ற முகவராலும் சுயேச்சைக் குழுவொன்றின் வேட்புமனுவை அக்குழுவின் தலைவராலும் கையளிக்காதிருத்தலும்
வேட்புமனுக்கள் தொடர்பான விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு உள்ளடக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை வேட்பு மனுக்களில் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாமலிருத்தலலும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு உரிய மொத்த வைப்புப் பணமும் செலுத்தப்படாதிருத்தலும் வேட்புமனுவில் பெயர் குறிப்பிடப்பட்டு உட்படுத்தப்பட வேண்டிய பெண்அபேட்சகர்களின் எண்ணிக்கை வேட்புமனுவில் பூர்த்தி செய்யப்படாமல் இருத்தலும (2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க திருத்தப்பட்ட சட்டத்தின் விதிகளுக்கமைய)வேட்பு மனுவில் தமது பெயரை அபேட்சகராக உட்படுத்துவதற்கு சகல அபேட்சகர்களும் தமது விருப்பத்தைத் தெரிவித்து கையொப்பமிட வேண்டியுள்ளதுடன் எவரேனும் ஒரு அபேட்சகர் கையொப்பமிடாதவிடத்து குறித்த அபேட்சகரின் பெயர் மாத்திரம் நிராகரிக்கப்பட்டு வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் என்பதுடன் ஒவ்வொரு அபேட்சகரும் அரசியல் யாப்பின் ஏழாம் உப பிரிவிற்கினங்க தமது உறுதியுரை இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் எவரேனும் ஒரு அபேட்சகர் அவ்வாறு செய்யத் தவறுமிடத்து குறித்த அபேட்சகரின் பெயர் மாத்திரம் நிராகரிக்கப்பட்டு வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும்ஒவ்வொரு இளைஞர் அபேட்சகரும் தனது வயதினை உறுதிப்படுத்தும் பொருட்டு தமது பிறப்புச் அத்தாட்சிப் பத்திரத்தின் பிரதியை அல்லது பிறந்த திகதியை உறுதிப்படுத்துகின்ற சத்தியக் கடதாசி ஒன்றின் பிரதியை வேட்பு மனுவுடன் இணைத்திருத்தல் வேண்டும் என்பதுடன் எவரேனும் ஒரு அபேட்சகர் அவ்வாறு செய்யத் தவறுமிடத்து குறித்த அபேட்சகரின் பெயர் மாத்திரம் நிராகரிக்கப்பட்டு வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் என்பனவாகும்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட சில கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணமாக மனுதாரர்களின் பிறப்புச்சான்றிதழ் மேலதிக மாவட்ட பதிவாளரால் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதாகும். 2017 ம் ஆண்டின் 16 ம் இலக்க உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தல்கள் (திருத்தப்பட்ட) சட்டத்தில் எந்தவொரு பகுதியிலும் பிறப்பு அத்தாட்சி பத்திரத்தினை மேலதிக மாவட்ட பதிவாளர் உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்படவில்லை மாறாக பிறப்பு திகதியை அல்லது பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தின் பிரதியை உறுதிப்படுத்துகின்ற சத்தியகடதாசி வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடுகின்றது. அவ்வாறு சட்டம் இருக்கையில் மேலதிக மாவட்டப்பதிவாளர் உறுதிப்படுத்தவில்லை என எவ்வாறு தேர்தல் திணைக்களம் வேட்புமனுவினை நிராகரிக்க முடியும்? இலங்கையில் சத்திய கடதாசி வழங்கும் அதிகாரம் சமாதான நீதவானுக்கு உள்ளது. அவ்வாறு சமாதான நீதவானால் உறுதிப்படுத்தப்பட்டு சத்தியகடதாசி வழங்கப்பட்ட வேட்பு மனுக்கள் எவ்வாறு நிராகரிக்கப்பட்டன? இவ்வாறு நிராகரிக்கப்பட்டதால் சமாதான நீதவான் எனும் பதவியே கேள்வியாக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கப்பால் இலங்கையிலுள்ள பிரதேச செயலகங்களிலும் மற்றும் மாவட்ட செயலகங்களிலும் வழங்கப்படும் அனைத்து பிறப்பு அத்தாட்சி பத்திரங்களும் மேலதிகமாவட்டபதிவாளரது கையொப்பமிடப்பட்டு இலட்சினை பொறிக்கப்பட்டே வழங்கப்படுகிறது. இவ்வாறு இருக்கும் நிலையில் தேர்தல் ஆணைக்குழுவில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் அரசாங்கத்தின் ஆணையின்படி நிராகரிக்கப்பட்டது என்றே பல அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைதேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிப்பில் சில மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவும் தேசிய அடையாள அட்டைக்கு முக்கியத்துவம் வழங்காமல் பிறப்பு அத்தாட்சி பத்திரத்தினையே நிராகரிப்பு மற்றும் ஏற்றுக்கொள்வதற்கான முக்கிய ஆவணமாக கருதினர்.
பிறப்பு அத்தாட்சி பத்திரம் இன்றி இலங்கையில் தேசிய அடையாள அட்டையை பெறமுடியாது என்பது அனைவரும் அறிந்ததொரு விடயமாகும் அவ்வாறு இருக்கையில் மக்களால் குறிப்பாக தமிழ் மக்கள் அதிகம் செறிந்து வாழும் பிரதேசங்களில் வெற்றி பெற்று உள்ளூராட்சி சபையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட முக்கிய சில தமிழ்கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் நிராகரிக்கப்பட்டமை அரசாங்கத்தின் நடவடிக்கையே என பல அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கமானது தமிழர் பிரதேங்களில் உள்ள மாநகர, நகர மற்றும் பிரதேசசபைகளை கைப்பற்றுவதற்காக அப்பிரதேசங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கும் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளை நிராகரித்துவிட்டு மக்களால் வெறுக்கப்படும் துணை ஆயுதக்குழுக்களை வழிநடத்திய டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியினையும் ஆயுதம் ஏந்தாமல் பலதமிழர்கள் 'அரசியல்கைதிகள்'எனும்பெயரில் சிறையில் வாடுவதற்கும் கடந்த 15ஆண்டுகளாக ஆட்சியமைக்கும் அரசாங்கங்களின் கைக்கூலியும்,இலங்கை அரசும் ஆயுதப்படைகளின் போர்க்குற்றத்தினை மேற்கொள்ளவில்லையென இலங்கையிலும் பல உலக அரங்கிலும் வெளிப்படையாக கூறியவரும் மற்றும் இலங்கையில் நடந்த போர்குற்றத்திற்கான சர்வதேச விசாரனணக்கான கதவினை முற்றுமுழுதாக மூடியதற்கு காரணமான எம்.ஏ.சுமந்திரனின் கட்சிகளின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள தேர்தல் திணைக்களத்தின் பின்னால் நின்று காய்நகர்த்தியாக உள்ளது என்றே கூறமுடியும்.
இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டுவரும் இலங்கையில் தனிநபர் ஒருவரின் தேசிய அடையாள அட்டையின் இலக்;கத்தினை கணினியில் உட்புகுத்;தினால் அந்நபர் தொடர்பான குறிப்பாக பிறந்ததிகதி முதல் அவர் வசசிக்;குகம்; முகவரி வரையான அனைத்து தகவல்களையும் பெறக்கூடியதாக உள்ளநிலையில் பிறப்;பு அத்தாட்சி பத்திரம் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதற்காக பலமக்களினதும்; பிரதேசங்களினதும் அபிவிருத்திக்கு காரணமாக வேண்டிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளை நிராகரித்தமை வேடிக்கையான ஒரு விடயமாகும்.
அவ்வாறெனின் இலங்கையின் அனைத்து பிரஜைகளும் எதிர்வரும் காலத்தில் தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக பிறப்பு அத்தாட்சி பத்திரத்தினை தான் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலை உருவாகுமெனும் கேள்வியினை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றது இலங்கையை விட பொருளாதாரத்திலும் சரி தொழில்நுட்பத்திலும் சரி குறைவாக உள்ள நாடுகள் காகிதத்திலிருந்து இலத்திரனியல் அட்டைக்கு மாறியுள்ள நிலையில் இலங்கையானது இலத்திரனியலில் இருந்து காகிதத்தினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
இலங்கையின் ஆட்களை பதிவு செய்யும் சட்டம் மற்றும் தேர்தல்கள் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் எப்போது சரி செய்யப்படும்? இது சரி செய்யப்படாவிட்டால் காலம் தோறும் ஆட்சியமைக்கும் பேரினவாத அரசாங்கங்கள் தமிழ் மக்களினதும் தமிழ் பிரதேசங்களினதும் அபிவிருத்தியினை ஏற்படுத்தாமலே சென்றுவிடும் என்றே கூறமுடியும்