போப் பிரான்சிஸ்ஸின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வத்திகான் புறப்பட்டார் திரௌபதி முர்மு!

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசரின் நல்லடக்க ஆராதனைகளில் கலந்து கொள்வதற்காக இந்தியா சார்பில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் மற்றும் கோவா துணை சபாநாயகர் ஜோசுவா பீட்டர் டி சௌசா ஆகியோர் 2நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலியின் வத்திகான் நகருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
மேலும் நாளை அவர்கள் போப் பிரான்சிஸ்ஸின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு இந்தியா சார்பில் அஞ்சலி செலுத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21 அன்று காலை தனது 88 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
நாளை அவரின் இறுதிச் சடங்கு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் வத்திகானுக்கு வருகை தரவுள்ளனர்.
தற்போது போப் பிரான்சிஸ் உடல் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும், நாளையும் உலக நாடுகளின் தலைவர்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.