பிரதமர் மோடி பதவியேற்பு விழா LIVE: அமைச்சரவையில் ஜெபி நட்டா? தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு!
லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இன்று பிரதமராக மோடி பொறுப்பேற்கிறார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் 240 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைக்கிறது.
பாஜக கூட்டணி கட்சிகளுக்கு 52 எம்பிக்கள் உள்ளனர். இதன்மூலம் பாஜகவுக்கு ஆட்சியமைக்க தேவையான 272 எம்பிக்களை விட கூடுதலாக 20 எம்பிக்கள் உள்ளனர்.
ஆந்திராவில் செயல்பட்டு வரும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்பிக்கள், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 12 எம்பிக்கள், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு 7 எம்பிக்கள், சிராக் பஸ்வானின் லோக் ஜன கட்சிக்கு 5 எம்பிக்கள், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ்க்கு 2 எம்பிக்கள் உள்பட வேறு சிறுசிறு கட்சிகளுக்கு என்று மொத்தம் 52 எம்பிக்கள் உள்ளனர்.
இன்று முதல் கட்ட அமைச்சரவை பதவியேற்பும் இருக்கும். இன்று கிட்டத்தட்ட 30 அமைச்சர்கள் பதவியேற்பார்கள். பாஜகவிற்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு 18 அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட உள்ளன.
இன்று முழு அமைச்சர்களும் பதவியேற்க மாட்டார்கள். கிட்டத்தட்ட 30 அமைச்சர்கள் பதவியேற்பார்கள். முழு அமைச்சர்களின் பலம் 78 முதல் 81 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவையொட்டி டெல்லி ஜனாதிபதி மாளிகையை சுற்றி 2500 போலீசார் மற்றும் 5 கம்பெனி துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சர் பதவியை ஏற்க முடியாது என மகாராஷ்டிராவின் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபுல் பட்டேல் பாஜக தலைமைக்கு தெரிவித்து விட்டதாக கூறியுள்ளார்.