ஆந்திராவில் கோவில் சுவர் இடிந்து விழுந்து 9 பேர் பலி !

ஆந்திராவில் கோவில் சுவர் இடிந்து விழுந்து 9 பேர் பலி !

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம கோவில் சுவர் இன்று புதன்கிழமை (30) அதிகாலை பலத்த மழைக்கு மத்தியில் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்மாசலம் மலையில் அமைந்திருக்கும் இந்த கோயிலின் சந்தனோத்சவம் திருவிழாவை முன்னிட்டு ஆலய தரிசனத்துக்காக பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை தந்திருந்த நிலையிலேயே ஆலயத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. 

புதிதாக கட்டப்பட்டு 20 நாட்களே ஆன அந்த 20 அடி சுவர் இடிந்து விழுந்ததில், வரிசையில் நின்றிருந்த பக்தர்கள் பலரும் இடிபாடுகளில் சிக்கினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு காயமடைந்த பலரும் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டிட விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர், பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.