அமெரிக்காவுக்கு எதிராக பிரிக்ஸ் பகிரங்க எச்சரிக்கை விடுப்பு

அமெரிக்காவுக்கு எதிராக பிரிக்ஸ் பகிரங்க எச்சரிக்கை விடுப்பு

அமெரிக்காவின் வரி உலக பொருளாதாரத்தை கடுமையாக பாதித்திருக்கிறது. இந்நிலையில், இனி வரும் காலத்திலும் இதே போல வரி தொடர்ந்தால், நிச்சயம் உலக பொருளாதாரம் துண்டிக்கப்படும் என்று பிரிக்ஸ் அமைப்பின் இந்த ஆண்டுக்கு தலைமைதாங்கும் பிரேசில் எச்சரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடுகள் பிரிக்ஸ் அமைப்புக்கு தலைமை வகிக்கும். இந்த முறை பிரேசில் வகித்திருக்கிறது. இந்த ஆண்டு பிரேசிலில் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

 இந்நிலையில் மாநாட்டுக்கு முன்னர் நேற்று (29) பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.

இதில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக வரி விவகாரம் தொடர்பாகவும், இதற்கு எதிராக எப்படி செயல்படுவது என்றும் பேசப்பட்டிருந்தது.

இக்கூட்டம் முடிந்த பின்னர் கூட்டு அறிக்கை ஒன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியான அறிக்கை ஏதும் வெளியாகவில்லை. மாறாக பிரரேசில் மட்டும் அறிக்கையை வெளியிட்டிருந்தது.

"வரி அச்சுறுத்தல் காரணமாக உலக பொருளாதாரம் துண்டிக்கப்பட்டு பல பகுதிகளாக பிரிய வாய்ப்பு இருக்கிறது. இதுபற்றி பிரிக்ஸ் அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள். வரி அச்சுறுத்தல் இத்துடன் நின்றுவிடவில்லை. மாறாக உலக பொருளாதார மந்த நிலையையை ஏற்படுத்தவும் வழி வகுத்திருக்கிறது.

இந்த பிரச்சனைக்கு எதிராக தீர்வு காண அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்தை எட்டியிருக்கின்றன. வரும் ஜூலை மாதம் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் இது தொடர்பாக கூட்டு அறிக்கை வெளியாகும்" என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா விதித்த வரி காரணமாக உலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.