வெற்றி பெறுமா சென்னை அணி? பஞ்சாப்புடன் இன்று மோதல்

18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஒப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இன்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 49ஆவது லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
5 முறை சம்பியனான சென்னை அணி இந்த சீசனில் வழக்கத்துக்கு மாறாக தள்ளாடுகிறது. 9 போட்டிகளில் 2 வெற்றி (மும்பை, லக்னோவுக்கு எதிராக) 7 தோல்வி கண்டு கடைசி இடத்தில் இருக்கும் சென்னை அணி ஏறக்குறைய அடுத்த சுற்று (பிளே-ஒப்) வாய்ப்பை இழந்து விட்டது. முதலாவது மற்றும் 7ஆவது போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற சென்னை அணி மற்ற போட்டிகள் அனைத்திலும் சறுக்கலை சந்தித்தது. இதுவரை 21 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் சரியான கலவையை கண்டறிய முடியாமல் தவிக்கிறது. சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் சென்னை அணி நடப்பு தொடரில் இதுவரை இல்லாத நிகழ்வாக தொடர்ச்சியாக 4 தோல்வியை தழுவியிருக்கிறது.
சென்னை அணியின் துடுப்பாட்டம் பலவீனமாக காணப்படுகிறது. ஆக்ரோஷமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தும் அந்த அணி ஒரே ஒரு முறை மட்டுமே 180 ரன்களை கடந்து இருக்கிறது. ஷிவம் துபே (242 ரன்), ரச்சின் ரவீந்திரா ஓரளவு நன்றாக செயல்படுகின்றனர். மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. கடந்த 2 போட்டிகளில் களம் கண்ட ஆயுஷ் மாத்ரே, முந்தைய போட்டியில் அறிமுகமான டிவால்ட் பிரேவிஸ் துரிதமாக ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். ஆனால் அவர்களாலும் நிலைத்து நிற்க முடியவில்லை. பந்து வீச்சும் மெச்சும் வகையில் இல்லை.
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை (கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 11 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் இருக்கிறது.
பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் பிரியான்ஷ் ஆர்யா (323 ரன்), பிரப்சிம்ரன் சிங் (292), கெப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், நேஹல் வதேரா, ஷசாங் சிங் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், மார்கோ யான்சென் மிரட்டுகிறார்கள்.
முல்லாப்பூரில் நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 18 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி அதற்கு பதிலடி கொடுத்து 3ஆவது வெற்றியை பெற முயற்சிக்கும். அதே நேரத்தில் புள்ளிபட்டியலில் வலுப்படுத்திக் கொள்ள பஞ்சாப் அணி எல்லா வகையிலும் தீவிரம் காட்டும். எனவே களத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16 போட்டிகளில் சென்னையும், 15 போட்டிகளில் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன. மெதுவான தன்மை கொண்ட சேப்பாக்கம் ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சென்னை: ஷேக் ரதீஷ், ஆயுஷ் மாத்ரே, சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, தீபக் ஹூடா அல்லது வன்ஷ் பேடி, டோனி (கேப்டன்), அன்ஷூல் கம்போஜ் அல்லது ஆர்.அஸ்வின், நூர் அகமது, கலீல் அகமது, பதிரான.
பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), மேக்ஸ்வெல், மார்கோ யான்சென், ஜோஷ் இங்லிஸ் அல்லது மார்கஸ் ஸ்டோனிஸ், ஷசாங் சிங், நேஹல் வதேரா, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீத் பிரார்.
இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கும்