எலான் மஸ்க்கின் அரசியல் விமர்சனங்களால் டெஸ்லா விற்பனையில் சரிவு

எலான் மஸ்க்கின் அரசியல் விமர்சனங்களால் டெஸ்லா விற்பனையில் சரிவு

உலகின் மிகப் பெரும் செல்வந்தரும், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்கின் அரசியல் விமர்சனங்களால், ஐரோப்பாவின் மூன்று முக்கிய சந்தைகளில் டெஸ்லா கார்களின் ஜனவரி மாத விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.

குறிப்பாக , பிரான்சில் 63 சதவீதமும், ஜேர்மனியில் 59.50 சதவீதமும், பிரித்தானியாவில் 12 சதவீதமும் வீழ்ச்சியைக் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடுகளின் அரசியல் விவகாரங்களில் எலான் மஸ்க் தலையிடுவதாலும், அந்நாட்டு அரச தலைவர்கள் மற்றும் கொள்கைகளை விமர்சனம் செய்வதாலும் அந்நாடுகளைச் சேர்ந்த மக்கள், டெஸ்லா கார்களை வாங்க மறுப்பு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக அண்மையில் ஜேர்மனியின் சான்சிலர் ஓலாப் ஷோல்ஸை முட்டாள் என்றும், ஜனாதிபதி வால்டர் ஸ்டெய்ன்மியரை சர்வாதிகாரி என்றும் மஸ்க் சாடியிருந்தார்.

அதேபோல், ஜேர்மனியின் வலதுசாரி கட்சியான ஏ.எப்.டி.இ கட்சிக்கு மஸ்க் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், இவரை ஐரோப்பிய அரசியலில் தலையிடுவதாக விமர்சனம் செய்திருந்தார்.

மேலும் பிரித்தானியாவிலும், அந்நாட்டு ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தமான கொள்கைகள் மற்றும் பிரக்சிட் தொடர்பாகவும் மஸ்க் விமர்சனம் செய்தார்.

இதுபோன்ற விமர்சனங்கள், இந்த நாடுகளின் மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியதன் காரணமாக, டெஸ்லா கார்களை மக்கள் புறக்கணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்சார வாகன சந்தையில், சீன நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களின் போட்டி, மின்சார வாகனங்களுக்கான மானியம் குறைப்பு ஆகியவையும் இந்நாடுகளில் டெஸ்லா கார்களின் விற்பனை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன.

இதனால், டெஸ்லா கார்களுக்கு பதிலாக, போக்ஸ்வேகன், பி.எம்.டபிள்யூ.இ ஜாகுவார் மற்றும் மினி மின்சார கார்களை வாங்குவதில் ஐரோப்பிய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.