சீனப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகள் 145% உயர்வு!

சீனப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகள் 145% உயர்வு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனப் பொருட்கள் மீதான வரிகளை கடுமையாக உயர்த்தியதால், பெரும்பாலான பொருட்கள் மீதான வொஷிங்டனின் மேலதிக வரி விகிதம் 145 சதவீதமாக உயர்ந்துள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (10) உறுதிப்படுத்தியுள்ளது.

புதன்கிழமை பல நாடுகள் மீதான புதிய வரிகளை 90 நாட்களுக்கு ட்ரம்ப் இடைநிறுத்தியிருந்தாலும், சீன இறக்குமதிகள் மீதான புதிய வரிகளை 125% ஆக உயர்த்தியதன் மூலமாக பீஜிங்கின் மீது அழுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 20% வரியை அடிப்படையாகக் கொண்டு இந்த எண்ணிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை சீனப் பொருட்களுக்கு 125 சதவீத வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார், ஆனால் பின்னர் வெள்ளை மாளிகை இது முந்தைய 20 சதவீத வரியுடன் கூடுதலாகும் என்று தெளிவுபடுத்தியது.

இதற்கு பதிலடியாக, சீனா வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு 84% வரிகளை விதித்துள்ளது.

இதற்கிடையில், வொஷிங்டனை வரிக் கொள்கையில் இருந்து பின்வாங்க கட்டாயப்படுத்தும் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்காகவும், பதிலடி கொடுக்கவும் சீனா சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்க வர்த்தகத் துறையின் கூற்றுப்படி, சீனா 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு 463 பில்லியன் டொலர் பெறுமியான பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்து.

அதேநேரம் சீனாவிற்கான அமெரிக்க ஏற்றுமதி கடந்த ஆண்டு சாதனை அளவாக 199 பில்லியன் டொலர்களையும் எட்டியுள்ளது.