பொது சிவில் சட்டத்தை, பொதுமக்கள் மீது திணிக்க முடியாது - ப.சிதம்பரம்
இந்தியாவில் கொள்கையால் வழிநடத்தப்படும் பெரும்பான்மை அரசு, பொது சிவில் சட்டத்தை, பொதுமக்கள் மீது திணிக்க முடியாது என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொள்கையால் வழிநடத்தப்படும் பெரும்பான்மை அரசு, பொது சிவில் சட்டத்தை, பொதுமக்கள் மீது திணிக்க முடியாது என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அது மக்களிடம் பிரிவினையை அதிகரிக்கும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் பொதுவான சட்டங்களை வகுக்கும் நோக்கில், பொது சிவில் சட்டத்தை அமுலாக்குவதற்கான நடவடிக்கைகளை பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்துக்கு வழிவகுக்கும் பொது சிவில் சட்டத்தை உயர்நீதிமன்றம் ஆதரிப்பதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சட்டம் இருந்தால், அந்த வீட்டை ஒழுங்காக நிர்வகிக்க முடியுமா?
அதுபோல், இரண்டு வகையான சட்டங்கள் இருந்தால் நாட்டை எவ்வாறு நிர்வகிக்க முடியும்? என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தநிலையில், காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள், பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பாரதிய ஜனதாக் கட்சியின் சொல்லாலும் செயலாலும் நாடு பிளவுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது, அந்தப் பிரிவு மேலும் அதிகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆம் ஆத்மி கட்சி பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.