அவுஸ்திரேலியாவுக்கு செல்ல விண்ணப்பம் கோருபவர்களுக்கான அறிவிப்பு!
அவுஸ்திரேலிய நுழைவு அனுமதி கோரும் வெளிநாட்டவர்களின் விண்ணப்பங்கள் இன்று முதல் கடுமையாக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறிப்பாக சர்வதேச மாணவர்கள் மற்றும் குறைந்த திறன்கொண்ட தொழிலாளர்களுக்கான நுழைவு அனுமதிக்கான சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்படும் என உள்துறை அமைச்சர் Clare O'Neil அறிவித்துள்ளார்.
புதிய கொள்கைகளின் படி சர்வதேச மாணவர்கள் ஆங்கிலத் தேர்வுகளில் அதிக மதிப்பீடுகளை பெறுவது மிக அவசியமானதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, நுழைவு அனுமதி மறுக்கப்பட்டவர்கள், இரண்டாவது விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான காலம் நீடிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
நுழைவு அனுமதி தொடர்பான அவுஸ்திரேலியாவின் திட்டம் தோல்வியடைந்துள்ளதால், நுழைவு அனுமதி கோருவோரின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என பிரதமர் Anthony Albanese தெரிவித்துள்ளார்.
அதிக அளவிலான வெளிநாட்டவர்கள் குடியேறுவதன் காரணமாக அவுஸ்திரேலியாவின் உட்கட்டமைப்பு பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னர் நுழைவு அனுமதி 50 சதவீதத்தால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, தற்போதைய தரவுகளுக்கு அமைய அவுஸ்திரேலியாவில் 6 இலட்சம் வெளிநாட்டு மாணவர்கள், கல்வி பெறும் வாய்ப்பினை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.