இந்தியாவை விட்டுச் செல்லும் மாலைதீவு - சீனாவின் ஆதிக்கத்தால் நேர்ந்த கதி!
இந்தியாவிடமிருந்து விலகியிருக்கும் (No to India) கொள்கையை மாலைதீவுகள் அரசாங்கம் பின்பற்றப் போவதாக புதிய ஜனாதிபதி முகமது முய்சு தெரிவித்துள்ளார்.
பொதுவாக மாலைதீவுகளில் புதிய ஜனாதிபதியொருவர் பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் செய்வார்.
ஆனால் மாலைதீவுகளின் தற்போதைய ஜனாதிபதி முகமது முய்சு இந்த பாரம்பரியத்தை உடைத்துள்ளார். நவம்பரில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முய்சு இந்தியாவுக்கு செல்வதற்கு துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சீனாவுக்குச் சென்றார்.
முய்சுவின் ஐந்து நாள் சீனப் பயணம் மாலைதீவுகளின் வெளியுறவுக் கொள்கை மாறுவதைக் காட்டுகிறது என்று வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் கருதுகின்றனர்.
தனது நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் இந்த மாற்றத்தை ஜனாதிபதியே மீண்டும் வலியுறுத்தினார். 'எங்கள் நாடு சிறிதாக இருக்கலாம்.
ஆனால் இதனை வைத்து எங்களை யாரும் மிரட்ட அனுமதியில்லை,’ என்று சீனாவுக்கு சென்று திரும்பிய பின்னர் அவர் ட்வீட் செய்துள்ளார்.
ஜனாதிபதி முகமது முய்சு சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது இந்தியாவிற்கும் மாலைதீவுகளுக்கும் இடையில் யாரும் எதிர்பார்க்காத ஒரு தூதாண்மை மோதல் ஏற்பட்டது.
ஜனவரி 4 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி தனது லட்சத்தீவுகள் பயணத்தின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த போது இது தொடங்கியது.
லட்சத்தீவுகளில் மோடி செலவழித்த நேரத்தை மாலைதீவுகளுடன் ஒப்பிட்டு பல சமூக வலைதளப் பயனர்கள் கருத்து தெரிவித்தனர்.
மாலைதீவுகள் அரசு சீனாவுடன் நட்புறவை வளர்த்து வருவதால் இந்த விடயம் இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பிரதமர் லட்சத்தீவுகளுக்கு 'ஊக்கம்' அளித்ததைக் கண்டித்து மாலைதீவுகளின் மூன்று துணை அமைச்சர்கள் சமூக ஊடகங்களில் விமர்சன கருத்துகளை வெளியிட்டனர்.
பின்னர் அந்த அமைச்சர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டனர். ஆனால் அதற்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துவிட்டன.
மாலைதீவுகளுக்கு சுற்றுலா செல்வது பற்றி சிந்திக்குமாறு இந்தியாவின் பல பிரபலங்கள் தங்கள் ரசிகர்களை கேட்டுக் கொண்டனர்.
மாலைதீவுக்குச் செல்ல நினைப்பவர்களுக்கு லட்சத்தீவுகளுக்குச் செல்வது ஒரு மாற்று தேர்வாக அமையக்கூடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அதன் பின்னர் நிலைமை மேலும் மோசமாகிவிட்டதாக தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், 2019இல் இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட கடல் ஆய்வு (ஹைட்ரோகிராஃபி) ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை புதுப்பிக்க கூடாது என்று மாலைதீவுகள் அமைச்சரவை முடிவு செய்தது.
இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டில் (2024) முடிவடைகிறது. முன்னதாக தான் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் மாலைதீவில் தற்போது நிலைகொண்டுள்ள இந்திய வீரர்களை திருப்பி அனுப்ப ஜனாதிபதி முகமது முய்சு உறுதியளித்திருந்தார்.
முய்சுவின் இந்த நடவடிக்கை அவருக்கு முந்தைய இப்ராஹிம் சோலி அரசின் 'இந்தியா ஃபர்ஸ்ட் கொள்கை'யை மாற்றியமைக்கும் நோக்கத்தின் மற்றொரு அறிகுறியாகும்.
கடந்த மாதம் மொரீஷியஸில் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் மாலைதீவுகளின் எந்தப் பிரதிநிதியும் கலந்து கொள்ளவில்லை.
இதன் மூலம் இந்தியாவுடனான பாதுகாப்பு உறவுகளைத் தொடர முய்சு அரசாங்கம் காட்டும் தயக்கம் மேலும் தெளிவாகியுள்ளது.
கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2011இல் ஆரம்பிக்கப்பட்டது. பாதுகாப்பான மற்றும் நிலையான இந்திய பெருங்கடல் என்ற கருத்தை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
இந்தியா மற்றும் மாலைதீவுகளுடன் கூடவே இலங்கை மற்றும் மொரீஷியஸும் இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ளன.