இலங்கை அகதிகள் முகாம் அருகே நாட்டு வெடிகுண்டுகள்!
தமிழகம் - பெரம்பலூர் நகரில் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் நேற்று மாலை வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
அகதிகள் முகாமுக்கு வடக்கில் தமிழக அரசுக்கு சொந்தமான கைவிடப்பட்ட நிலத்தின் ஒற்றையடி பாதையில் கிடைக்கப்பெற்ற கைப்பையில் இருந்து குறித்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைப்பையை அகதிகள் முகாகை சேர்ந்த சண்முகராஜா கீர்த்திபன் (31) என்பவர் திறந்து பார்த்தபோது அதில் காகிதத்தால் சுற்றப்பட்டு 10க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக பெரம்பலூர் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற பொலிஸார் பழைய கைப்பையை சோதனை செய்தனர். அது நாட்டு வெடிகுண்டுகள் என தெரியவந்தது.
இதையடுத்து அங்கு வந்த திருச்சி மண்டல வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க செய்தல் பிரிவு ஆய்வாளர் எட்வர்ட் தலைமையிலான குழுவினர் வெடிகுண்டுகளை கைப்பற்றி அரசு அங்கீகரிக்கப்பட்ட வெடிமருந்து கிடங்கிற்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.
குறித்த கைப்பை ஒரு மாதத்திற்கு மேலாக முகாம் பகுதியில் கிடந்தது என்றும் இந்த நாட்டு வெடிகுண்டுகள் புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.