பரந்தூரில் நடந்தது என்ன? விஜய்யின் உரை முதல் பொலிஸ் கெடுபிடி வரை!
“சட்டத்துக்கு உட்பட்டு பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு நானும், எனது கட்சியினரும் துணை நிற்போம்” என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த விமான நிலையத்துக்காக பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 13 கிராமங்களில் இருந்து 5300 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.
இதில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் கையகப்படுத்தப்பட உள்ளதால் அந்த கிராமத்தை மையமாக வைத்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
போராடும் பொதுமக்களுக்கு ஆதரவாக விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீர்மானம் நிறைவேற்றி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து போராடும் மக்களை சந்திக்கவும் முடிவு செய்தார்.
ஏகனாபுரம் அம்பேத்கர் திடல் அருகே உள்ள இடத்தில் கூட்டம் நடத்த போராட்ட குழுவினர் முடிவு செய்தனர்.
ஆனால், பொலிஸார் தரப்பில் பரந்தூர் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடத்த வலியுறுத்தினர்.
இதனை போராட்டக் குழுவினர் ஏற்காமல் அம்பேத்கர் சிலை முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் கூட்டத்தை நடத்த அனுமதி அளித்தனர்.
ஆனால், நள்ளிவு 12.30 மணி அளவில் கூட்டத்தை அம்பேத்கர் சிலை அருகே உள்ள திடல் முன் நடத்த அனுமதி இல்லை என்றும், பரந்தூர் திருமண மண்டபத்துக்கு அருகே உள்ள இடத்தில் நடத்தும்படியும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பொலிஸ் அனுமதி அளிக்காததால் இறுதியில் வேறு வழியில்லாமல் திருமண மண்டபத்தின் அருகில் உள்ள திடலில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தவிர வெளிநபர்கள் யாரும் உள்ளே வரக் கூடாது என பொலிஸார் தடை விதித்தனர்.
காஞ்சிபுத்தில் இருந்து பரந்தூர் நுழையும் பொன்னேரிக்கரை பகுதியில் வீதி சோதனைக்கு பிறகே உள்ளூர் மக்கள் கூட அந்தச் சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இடையில் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
சுமார் 100-க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பல்வேறு கெடுபிடிகளை தாண்டி சந்திப்புக் கூட்டம் நடைபெறும் இடத்தில் விமான நிலையத்தால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் குவிந்தனர்.
விமான நிலையத்தால் பாதிக்கப்படும் மக்கள் விஜய் பேசும் இடத்துக்கு அருகாமையில் இருக்கும்படியும், கட்சியினர் பின்னால் இருக்கும்படியும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் 2 மணி நேர காத்திருப்புக்குப் பிறகு கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசியது: “பரந்தூரில் விவசாயிகளிடம் இருந்து எனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளேன்.
போராடும் விவசாயிகளுக்கு நானும் எனது கட்சியினரும் எப்போதும் துணை நிற்போம்.
மதுரையில் டங்ஸ்டன் தொழிற்சாலை அமைவதை தமிழக அரசு எதிர்த்ததை நான் வரவேற்கிறேன்.
அதே நிலைப்பாட்டை ஏன் பரந்தூர் விவகாரத்தில் எடுக்கவில்லை.
இந்த பரந்தூர் விவகாரத்தில் அவர்களுக்கு விமான நிலையத்தையும் தாண்டி ஏதோ இலாபம் இருக்கிறது.
நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை. விமான நிலையம் வேண்டாம் என்று கூறவில்லை.
பரந்தூரில் வேண்டாம் என்றுதான் கூறுகிறேன். வேறு ஏதேனும் குறைவான பாதிப்பு உள்ள இடத்தில் இந்த விமான நிலையத்தை அமைக்கலாம்.
வளர்ச்சி என்ற பெயரில் நீர் நிலைகளையும், விவசாய நிலத்தையும் அழிப்பதை ஏற்க முடியாது.
சென்னையை சுற்றியுள்ள நீர் நிலைகள் அழிக்கப்பட்டதால்தான் சென்னையில் சிறு மழைக்கே வெள்ளம் வருகிறது.
பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்பட்டால் அது சென்னைக்கே பேராபத்தாக முடியும் வாய்ப்புள்ளது.
நான் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே உள்ள திடலில் மக்களை சந்திக்கவே திட்டமிட்டேன்.
ஆனால் பொலிஸார் அனுமதி அளிக்கவில்லை. நான் ஏன் அந்த ஊருக்கு செல்லக் கூடாது என்பது புரியவில்லை.
விரைவில் அந்த ஊருக்கு வந்து உங்களை மீண்டும் சந்திப்பேன்.
சட்ட நடவடிக்கை தேவைப்பாட்டாலும் பரந்தூர் மக்களுக்கான எடுப்பேன்,” என்று தெரிவித்தார்.
10 நிமிடத்தில் உரையை முடித்துக் கொண்ட விஜய்: பொலிஸார் காலை 10 மணியில் இருந்து 1 மணிக்குள் சந்திப்புக் கூட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தனர்.
அதேபோல் நள்ளிரவில் அம்பேத்கர் திடலில் அனுமதி மறுத்து திருமண மண்டபத்தில் நடத்தும்படி கூறினர்.
இதனால் பொலிஸார் கூறிய திருமண மண்டபத்துக்கு வெளிப்புறத்தில் கூட்டத்தை நடத்தினர்.
கூட்டம் நடைபெறும் இடத்துக்கு விஜய் வந்து சேரவே 12.40 ஆகிவிட்டது.
இதனால் 10 நிமிடத்தில் தனது பேச்சை முடித்துக் கொண்ட விஜய், “உங்களுடன் கூடுதல் நேரம் இருக்க வேண்டும் என்றுதான் விருப்பம். இப்போது சூழல் சரியில்லை.
மீண்டும் ஏகனாபுரம் வந்து உங்களை சந்திக்கிறேன்” என்றார்.
இந்தக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர், தமிழக வெற்றிக் கழகத்தினர் உள்பட பலர் பங்கேற்றனர்.