டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்த அமலாக்கத்துறையினர்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்த அமலாக்கத்துறையினர்!

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடைகோரி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக நடத்தப்பட்டு வரும் விசாரணைக்கு முன்னிலையாகும் படி  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. 

ஆனால் அவர் தொடர்ந்தும்   முன்னிலையாகாத  நிலையில், கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ஆம் திகதி  டெல்லி உயர்நீதிமன்றம் பிணை  வழங்கி உத்தரவிட்டது. 

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தான் விசாரணைக்கு முன்னிலையானால்  கைதுசெய்ய மாட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்தார். கெஜ்ரிவால் கோரிக்கையின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனவும் நீதிபதி கூறினார்

இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு பிடியாணையுடன்  அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். இதனையறிந்து ஆம் ஆத்மி தொண்டர்கள், நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது.

இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்றனர்.