நடிகர் சம்பத் ராம் சென்ற கார் விபத்து - சிறுகாயங்களுடன் உயிர்தப்பினார்!
சென்னையை சேர்ந்த, நடிகர் சம்பத் ராம் சென்ற கார் நேற்று (28) கிண்டி அருகே விபத்தில் சிக்கி நொறுக்கிய சம்பவம், திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பத் ராம் சென்ற கார் சென்னை கிண்டி அருகே விபத்துக்குள்ளாகி உள்ளது.
பின்னால் வந்த பாரவூர்தியொன்று மோதியதில் இவருடைய காரின் பின்பக்கம் பெரிதும் சேதமடைந்த நிலையில், காரில் பயணித்த சம்பத் ராம் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதைத்தொடர்ந்து சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் சம்பத் ராம்.
இவர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'எத்தனை மனிதர்கள்' என்கிற சீரியல் மூலம் தன்னுடைய நடிப்புத் துறையை ஆரம்பித்து, பின்னர் 1999 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'முதல்வன்' திரைப்படத்தில் உப பொலிஸ் அதிகாரி பாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து வல்லரசு, உன்னை கொடு என்னை தருவேன், பெண்ணின் மனதை தொட்டு, தீனா, தவசி, ரெட், ரமணா, ஆஞ்சநேயா, ஜனா, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், செல்லமே, திருப்பாச்சி, போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில்... பெரும்பாலும் வில்லன் மற்றும் பொலிஸ் பாத்திரங்களில் நடித்துள்ளார்.
பார்ப்பதற்கு ஆறடி உயரத்தில், முரட்டு தனமான தோற்றத்தில் இருந்தாலும் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடிய ஒருவர்.
எனவே தான் இவருக்கு சினிமாவில் அடுத்தடுத்த பல வாய்ப்புகள் கிடைத்தன. இதுவரை சுமார் 75க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள சம்பத் ராம், சமீபத்தில் தமிழில் வெளியான 'தங்கலான்' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தமிழ் மட்டும் இன்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான பப் கோவா என்கிற வெப் சீரிஸிலும் நடித்திருந்தார்.