மே 13 2009 முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த நிலைமை பகிர்வு!
PO வின் கவச வாகனத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட நானும் சுதாவும் நாங்கள் இறுதியாக தங்கியிருந்த இடத்திற்கு வந்தபோது அவ்விடத்திலும் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்திருந்தது. ஆனால் பாலகுமாரன் அண்ணை எங்களுக்காக காத்திருந்தார். ஆம்.
படுகாயமடைந்திருந்த மகளும் ( மகிழினியும்) மனைவி இந்திரா அன்ரியும் சிகிச்சைக்காக கப்பலில் செல்லும்போது "பாலாவை பாத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கோ " என்று அன்ரி கூறிச் சென்றிருந்தார். "நான் உயிருடன் இருந்தேன் என்றால் அவரும் பாதுகாப்பாக இருப்பார் நீங்கள் கவனமாக இருங்கோ" என்று தைரியமளித்தேன். அந்த வார்த்தைகளுக்கு அவசியம் இருந்தது. நான் உயிரோடு இருப்பதற்கு காரணமானவர்களுள் முக்கியமானவரான அன்ரிக்கு நான் பலவீனமாக இருந்தாலும் செய்யக்கூடிய நன்றியாகவும் போராளியின் கடமையாகவும் எனக்கு தோன்றியது.
போராளிகளின் அன்பான அன்னை அனுபவமிக்க மருத்துவ தாதி பாலகுமாரன் அவர்களுக்கும் முக்கிய பொறுப்பாளர்களும் போராளிகளுக்கும் அவர்கள் சோர்வுறும் வேளைகளில் எல்லாம் உடல் உள பலமளிக்கும் இந்திரா அன்ரியும் எம் நேசத்திற்குரிய மகிழினியும் ஓரிரு வாரம் முன்பதாகத் தான் ( சரியான நாள் நினைவில் இல்லை) மருத்துவப் பிரிவினரால் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்கள். மகிழினிக்கு வைத்தியத்திற்காக.
அதன் பின்னர் சிறிது நாட்களாக எங்களோடு ஒரே இடத்தில் அல்லது அவருக்கான பாதுகாப்பிடத்தில் நாங்களும் ஒன்றாக இருந்தோம்.
திடீரென்று நாங்கள் இருந்த வளவின் வாசலில் சிறிய ரக எறிகணை ஒன்று வீழ்ந்து வெடித்தது. அவ்விடம் முழுவதும் புழுதி மண்டலமாக மணல் சன்னங்களுடன் சேர்ந்து பறந்தன. நல்ல வேளையாக யாரும் காயப்பட்டிருக்க இருக்கவில்லை.
அப்போது எனது துப்பாக்கி புழுதியில் குளிப்பாட்டப்பட்டிருந்தது. நான் அதனை துப்பரவு செய்து கொண்டிருந்தேன் . அப்போது பாலகுமாரன் அண்ணை கரிசனையுடன் சிரித்துக்கொண்டே கூறினார்
" தப்பித் தவறி ஏதாவது அதிசயங்கள் நடந்து பிரபாகரன் வென்றுவிட்டார் என்றால் உனக்கு ஒரு மறமானி விருது கொடுக்கச்சொல்லி ரெக்கமன்ட் ( சிபாரிசு) பண்ணுவன்" என்றார்.
"என்ன அண்ணை எங்களுக்கு உளவுரண் ஊட்டுகிற நீங்களே இப்படி சொல்லுறீங்க' இழுத்தேன்.
" இல்லடா ப்பா ... கதைக்க வேண்டிய எல்லாரோடையும் கதைச்சிட்டன் இயக்கம் வெற்றி பெறுவதற்கான எந்த சாத்தியமும் இல்லை. உங்களில உள்ள அன்பில சொல்லுறன் உயிர் தப்பிக்கிற வேலையை பாருங்கோ உயிர்தப்பினால் அதன்பிறகு தொடர்ந்து கடமை செய்யலாம். எங்களைப் போன்றவர்கள் இங்கு இருந்து போய் உயிர் தப்ப ஏலாது அதனால்தான் உங்களைப் போன்றவர்களை தப்ப சொல்கிறேன் " என்றார்.
நான் இவ்வாறான வார்த்தையை முதன்முதலாக கேட்கிறேன். உடனே " இல்லை அண்ணை அண்ணையிட்ட ஆட்கள் இருக்கு எஸ் ஓ பி உள்ள இறங்கீற்றினம் அதோட BT இருக்கினம். ஹெவி வெப்பன்களும் இன்னும் பாவிக்கேல்ல. அண்ணை விடமாட்டார்" திடமாக சொன்னேன்.
"உன்ரை நம்பிக்கை வெல்லட்டும். இந்த இடம் செல் ரேஞ்சுக்கு வந்திட்டு இப்போது நாங்கள் கொஞ்சம் பின்னால் போய் மக்களுக்கு அருகாமையில் இருப்போம்" என்றார். " "நாங்கள் உடனே வரேல்லை நீங்கள் போங்கோ நாங்கள் பிறகு வருகிறோம்" என்ற எனக்கு ஏனோ உயிர்தப்ப வேண்டும் என்ற எண்ணம் குறையத் தொடங்கியிருந்தது. கலைக்குட்டியின் இறப்பும் அண்மைய உயிர் இழப்புக்களும் நிறைய விடயங்களை எனக்கு புகட்டியிருந்தது.
ஆனாலும் எனக்கு வீணாக சாக மனம் ஒப்பவில்லை.
மே 12 திரு. பாலகுமாரன் அண்ணாவும் மகன் தீபனும் அவர்களின் பாதுகாவலர் ஐங்கரனும் இருந்த இடத்திலிருந்து சற்று பின் நகர்ந்து சென்றார்கள்.
நெஞ்சில் கோள்சர் காயத்தை அழுத்த அழுத்த இரத்த மீண்டும் கசிந்து கொண்டிருந்தது. சாப்பிடுவது என்பதை மறந்துவிட்டிருந்தோம். அது ஒரு பிரச்சனையான விடயமே இல்லை. வெறுமனே அதை மறந்து விட்டால் சரி பசிக்காது. மலங் கழிப்பதும் குளிப்பதும் கூட அவ்வாறே .
எல்லாவற்றையும் உடல் பழகிவிட்டிருந்தது. அங்கு இருந்த அத்தனை உயிர்களும் தன்னை சுற்றி மட்டுமே இயங்கக்கூடிய பௌதிக சூழமைவு உருவாக்கப்பட்டுவிட்டிருந்தது.
பணம் பெறுமதியிழந்து பண்டமாற்று முறைக்கும் முன் ஏதாவது இருந்திருந்தால் அதை நோக்கி அங்கிருந்த மனிதர்கள் உலகின் பாரா முகத்தால் நகர்த்தப்பட்டுக்கொண்டிருந்தார்கள்
மனித நாகரிக வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களையும் தாண்டி போய்க் கொண்டிருந்தோம். இன்னும் ஓரிரு தினங்கள் தாக்குப்பிடித்தாலே அதிசயம்தான். ஒருவரிடமும் உணவில்லை. குடிநீர் கூட சரியாக கிடைக்கவில்லை. நாங்கள் சாகத் தொடங்கி இருந்தோம்.
நான்கு நாட்களுக்கு மேலாக குகா அக்காவைப் பார்க்கவில்லை அவவைத் தேடிப்பிடித்து சுதாவை அவவோட விட்டுவிட்டால் நான் சுதந்திரமாக நடமாடலாம். என்கிற எண்ணம். பாலா அங்கிள் கூறியதை சுதாவிடம் நான் கூறவில்லை என்று நினைக்கிறேன்.
எனது அம்மாவையும் அப்பாவையும் ஒருமுறை பார்க்க வேண்டும் போலிருந்தது. எங்கே தேடுவது அவர்களை? இருக்கிறார்களா இல்லையா எதுவுமே தெரியாது. (இப்போதும் கூட ) பிறந்ததிலிருந்து அவர்களுக்காக நான் எதையுமே செய்ததில்லை.
அண்ணாவையும் கூட . அவன் ஒன்றைக் கையுடன் தன்னையும் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் அம்மா அப்பா இவர்களைச் சுமந்து திரிகிறான். அப்படி ஒருவன் இருப்பதையே நான் மறந்து விட்டிருந்தேனே. மன்னித்து விடு. உங்கள் அனைவரதும் பாசங்களைப் பகிர்ந்து கொள்ள மீண்டும் பிறந்து வருவேன்.
தம்பியை மட்டும் இடையிடையே காண முடியும். இரண்டு நாட்களுக்கு முன்தான் இங்கு இனியும் இருந்தால் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க முடியாது இரண்டு பிள்ளைகளையும் மனைவியையும் கூட்டிக்கொண்டு நந்திக்கடலால் கடந்து உயிரைக் காத்துக் கொள்ளப் போவதாக கூறி ரக்டர் ரியூப் வாங்கி கயிறு பின்னி கடலைக் கடக்கும் எண்ணம் அவனுக்கு.
ரியூப் வாங்க பத்தாயிரம் ரூபா தேவை . சுதாவிடம் அவரது அக்கா அனுப்பிய பணம் சிறிதளவு இருந்தது. அதிலிருந்து பத்தாயிரம் கொடுத்து கவனமாக இருங்கோ அவனிடமிருந்து இறுதியாக விடைபெற்றேன். என்னிடம் எந்த நெகடிவான எண்ணங்களும் எழவில்லை. மனம் இல்லாமல் போயிருந்தது. அப்போது எனக்கு தெரியாது அதுதான் இறுதி சந்திப்பு என்பது.
ஆம் இரண்டு தடவைகள் முயன்றும் ஆமியின் ரவை டியூப்பில் பட்டு காற்று போனதால் தப்பிச் செல்லும் முயற்சியைக் கைவிட்டு எல்லோருக்கும் நடப்பதை ஏற்கத் தயாராக அங்கேயே தங்கிவிட்டான். என்பதும். அதன் பின்னர் 14 ஆம் திகதி (இன்று) எதிரியின் மிலேச்சத்தனமான மல்ரிபரல் மற்றும் கொத்து குண்டு பறாஜ் இல் கழுத்தறுந்து. இறந்து போனான் என்பதுவும் எனக்கு இரண்டு நாட்கள் பிந்தைய செய்தியாக 16 காலையே கிடைத்திருந்தது.
அந்த நேரம் அழக்கூட முடியாத சூழ்நிலையில் நாம் இருந்தோம். அதை பின்னர் அறியலாம்.
எம்மிடம் இருந்த தனிப்பட்ட அல்பங்களை குழி ஒன்றைத் தோண்டி புதைத்தோம். பின்னர் இரண்டு உடுப்பு பைகள் அவரவரதை ஒழுங்கு படுத்திக்கொண்டோம். ஒவ்வொரு லெமன் பஃப் பிரித்துக்கொண்டோம். இருந்த 12000 ரூபாவை பிரித்துக்கொண்டோம். நடப்பதை ஏற்றுக்கொள்வது என்கிற முடிவுக்கு வந்தோம்.
உண்டியல் பிள்ளையார் சந்நிதிக்கு அருகில் இருந்த வடலிப்பனங் கூடலுக்குள் ஓரிடத்தில் குகா அக்காவையும் குருவி அக்கா பிள்ளைகளைக் கண்டு நலம் விசாரித்துக் கொண்டு திரும்பினோம். வரும் வழியில் பொட்டு அண்ணை இருந்த வீட்டைக் கடந்தே வந்தோம். ஆனால் கலைக்கண்ணன் இறந்தபின் அவர்களைப் பார்க்கும் மனோதிடம் எம்மிடம் இருக்கவில்லை.