14 மே2009 முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த நிலைமை பகிர்வு -!

14 மே2009 முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த நிலைமை பகிர்வு -!

எப்போது தூங்குகிறோம். எப்போது விழித்திருக்கிறோம் என்பது தெரியவில்லை. ஆனால் உடல் காயத்தின் வலி ஒருபுறம் மனதின் வலி மறுபுறமாய் அடுத்தது என்ன என்றறியும் அவசியம்.

அன்று மே பதினான்கு. மீண்டும் பாலா அங்கிளும் தீபனும் இருந்த இடத்தை தேடி போனோம். வழியில் அனைவருமே தெரிந்த முகங்களாய் உண்டியல் பிள்ளையார் தாண்டி நந்திக்கடல் பக்கமாக அதிகம் பேர் செறிவாக இருந்தார்கள். பனங்கூடல்களுக்குள் நிலத்தை வெட்ட முயன்று கொண்டிருந்தார்கள். மண்வெட்டிகளுக்குக் கூட தட்டுப்பாடு. கூர்செய்யப்பட்ட தடிகளால் பதுங்குகுழி அமைத்துக்கொண்டு இருந்தார்கள். அங்கு கஞ்சி வழங்கலுக்குக் கூட வழியற்ற நிலை . களமுனை மிக அருகில் உணவும் தீர்ந்தது போக வர மக்கள் பொறுமை இழக்கலானார்கள். பலர் பதுங்குகுழி அமைக்க முடியாமல் வெறுமனே ஆயிரக்கணக்கான மக்கள் அந்த வெளியில் வெயிலில் பரந்து கிடந்தார்கள். மணிக்கு ஒரு இடம் . சிறுநீர் கழிக்கக் கூட ஓரிடம் கிடைக்காது. கடந்த இரண்டு மாதங்களாக இதுதான் நிலை. மில்லில் நெல் குற்றி வெளியேற்றப்பட்ட வெற்று உமிக்குள்ளிருந்து தப்பிய கப்பி நெல்லை சேகரித்து குற்றி கஞ்சி காய்ச்சி குடித்த காலப்பகுதியுமிருக்கிறது. 

இங்கு நான் குறிப்பிடுபவை வெறும் ஒரு சதவீதத்துக்குள் கூட அடங்காது. ஆனால் வரலாற்றில் பதியப்பட வேண்டிய விடயங்கள். என்னுடன் தொடர்புடைய விடயங்கள் மட்டுமே என்னால் குறிப்பிடப்படுகின்றன. 

தங்கள் தலைவனையும் புலிகளையும் நேசித்த அந்த மக்கள் சாவின் இறுதி எல்லை வரைக்கும் வந்த அந்த மக்கள் அனைவரும் தமிழீழ வரலாற்று நாயகர்களே. அவர்களோடு வந்த ஒரு நாய் கூட பெருமையடையும் நான் வீரம் மிக்க ஈழப்போரின் இறுதி உயிர்களில் ஒன்றென்று. 

உணவு உடை உறையுள் கல்வி பொருளாதாரம் எல்லாம் இருந்த போதுதான் உரிமைக்கான போராட்டம் ஆரம்பமானது. 

33 வருடங்களாக பல பரிமாணங்கள் பெற்று உலகெங்கும் பரந்து விரிந்த எமது போராட்டமும் எமது நிழல் அரசும் இன்று மூன்று வருடங்களில் மூன்று சதுர கிலோ மீட்டர்களுக்குள் முடக்கப்பட்ட நிலை. தலைவர் எடுக்கின்ற முடிவுகள் அடுத்த பத்து நிமிடங்களில் தமிழ் உலகெங்கும் நடைமுறையிலிருந்த தமிழீழ அரசு அது. இன்று தலைவருக்கும் தம்பதிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் போராளிகளுக்கும் எந்தத் தொடர்புகளும் அற்ற நிலை. யாராவது ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் அது நடைமுறை சாத்தியம் அற்றதே. ஆனால் இத்தனைக்கு மத்தியிலும் அங்கு மறிப்புச் சண்டை நடைபெற்றுக் கொண்டேயிருந்தது. அந்தப் போராளிகளினதும் மாவீரர்களினதும் வீரத்திற்கு நிகர் ஏதுமில்லை. நேரடியாகவே வாய்மூலம் கட்டளை வழங்கி நடமுறைப்படுத்தப்படும். முற்றுகை உடைப்புக்கும் தயாராகிக் கொண்டிருந்தது குறுகிய வீரம் செறிந்த தமிழர் நிலம். 

ஒவ்வொன்றாக இழந்து இழந்து தனிமனிதனின் அடிப்படை தேவைகளையும் இழந்து மனித நாகரிகத்தின் தோற்றுவாய் நோக்கி வந்துவிட்ட நிலை. 

பாலகுமாரன் அண்ணையையும் மகன் தீபனையும் அவர்களிடத்தில் சென்று பார்த்தோம். அப்போது திடீரென்று மல்டி பரல் றொக்கட் கள் சரமாரியாக எம்மைச் சூழ வந்து வீழ்ந்து வெடிக்கின்றன. மக்களின் அவலக்குரலும் சேர்ந்து அவ்விடமே அதிர்ந்து கொண்டிருந்தது. 

அவர்கள் அமைத்திருந்த சிறிய பதுங்குகுழி எம்மையும் உயிர் காத்திருந்தது. 

பத்து பதினைந்து நிமிடங்கள் மிகவும் மிலேச்சத்தனமான செல் தாக்குதல் நடைபெற்றிருந்தது. 

உலக வரலாற்றில் இப்படி ஒரு இனப்படுகொலை நிகழ்ந்திருக்க முடியாது. 

உடனடியாக அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வந்த வழியாக நாங்கள் இருந்த இடத்தை நோக்கி நடந்தோம். ஓடினோம்.

ஐயகோ எம்மக்கள் என்ன பாவம் செய்தார்கள். ஏனிப்படி இவர்கள் அழிக்கப்பட்டார்கள் . ஏன் இப்படி கருக்கப்பட்டு உருக்குலைக்கப்பட்டார்கள்? 

பத்து நிமிட நடையில் வழியெங்கும் எரிந்து கருகிய பிணங்கள். கால்கள் பிணங்களில் தடக்கி விழுந்து விழுந்தே கடந்தோம். இன்னும் எரிந்து போன உடல்களில் இருந்து புகை வந்துகொண்டிருந்தது. 

அடுத்த தாக்குதல் நிகழ்த்தப்படமுன்னர் எங்காவது ஓரிடத்தில் நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் . பதினான்காம் நாளில் நிகழ்த்தப்பட்டதே அதுவரை நடந்த மிகப்பெரிய படுகொலையாக பதிவாகி இருக்கும். இந்தத் தாக்குதலில்தான் என்தம்பியின் கழுத்தும் அறுபட்டிருக்கிறது. 

மரணங்கள் மலிந்த பூமியில் நாங்கள் மரணித்தவர்களையும் காயமடைந்தவர்களையம் கண்முன்னே கை விடத் தொடங்கியிருந்த பரிணாம வீழ்ச்சிக்கு தள்ளப்பட்டிருந்தோம். 

அங்கிருந்தவர்கள் தமது நிச்சயமற்ற நிமிடங்களைக் கணங்களைக் கடந்து கொண்டிருந்தார்கள். 

இலக்கற்று சுடப்பட்ட ஒவ்வொரு ரவையும் துப்பாக்கியில் இருந்து புறப்பட்டு காற்றைத் கிழித்து வந்து விரும்பிய ஏதோ ஒன்றில் பட்டு திரும்பி வேறு ஓர் திசையில் ஓய்வுக்கு வரும் வரை ஒவ்வொரு மனிதனாலும் கவனிக்கப்படுமளவுக்கு விழிப்பு நிலை நிலவியது. 

இந்தியா தேர்தலை முன்னிட்டு இரண்டு நாட்கள் மோதல் தவிர்ப்பாக அறிவிக்கப்பட்டாலும் செல்களும் ரவைகளும் மக்களைக் காயப்படுத்திக் கொண்டேயிருந்தன. புலிகளின் குரல் வானொலி போர்க்கால அறிவிப்புக்களை வழங்கிக்கொண்டிருந்ததது. 

இறந்தவர்கள் காயமடைந்தவர்கள் என எல்லா நேரமும் இறைவன் எனும் தவபாலனின் குரலே ஒலித்துக்கொண்டிருக்கும். அது அனைவரையும் வழிப்பட வைத்துக்கொண்டு இருந்தது