விடுதலைப் போராட்டத்திற்கு புதியதொரு திட்டத்தின் அவசியம்

சென்ற வார கேள்வி பதிலின் தொடர்ச்சி

விடுதலைப் போராட்டத்திற்கு புதியதொரு  திட்டத்தின் அவசியம்

*சென்ற நேர்காணலின் தொடர்ச்சி:*

*கேள்வி:* தலைவர் இருக்கின்றார் இல்லை என்ற விவாதத்தை விடுத்து புதியதொரு கொள்கைத் திட்டத்தை உருவாக்கி தமிழர்கள் விடுதலையை முன்னெடுக்கவேண்டும் என்று சொல்கிறீர்களே, அவை முற்றிலும் புதியனவாக இருக்குமா?

*பதில்:* விடுதலைப் போராட்ட வரலாறு என்பது நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சியைக்கொண்டது எனவே அந்த வரலாற்றின் வழியில் தோற்றம்பெற்ற அடிப்படைகளை, அடிப்படையாகக்கொண்டதாக இருப்பது மிக முக்கியமானது.

*கேள்வி:* எதிர்கால விடுதலைப் போராட்டம் பின்பற்றவேண்டிய வரலாற்று அடிப்படைகள் பற்றிய உங்களின் கருத்து என்ன?

*பதில்:* இதற்கான பதில் சற்று விரிவானதாக இருக்கும்.

அந்த வகையில், தமிழின அழிப்பில் இருந்து தமிழீழதைப் பாதுகாக்க நடைபெற்று வரும் நீண்ட நெடிய தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் அடிப்படை நோக்கங்களையும், தேவைகளையும், தமிழர் வரலாற்றின் வலிமைமிக்க சீரிய பாரம்பரிய வழிகாட்டுதல்களையும் உள்வாங்குவதுடன்; 1976ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனம் மற்றும் தமிழீழ நடைமுறை அரசை உருவாக்கி நிர்வகிக்க உருவாக்கப்பட்ட சோஷலிச தமிழீழம் என்ற அரசியல் வேலைத்திட்டக் கையேடையும், அதன் நீட்சியாக கால மாறுதல்களுக்கு ஏற்பத் தமிழீழ நடைமுறை அரசு மேற்கொண்ட கொள்கை விளக்கங்கள் மற்றும் தமிழீழ நடைமுறை அரசு உருவாக்கிய சட்டக் கோவைகளையும் அடிப்படைகளாக்கொண்டே எமது எதிர்காலத் தமிழீழ அரசும், அதற்கான எமது விடுதலைப் போராட்டப் பாதையும் முன்நகர்த்தப்படவேண்டும். அதே வேளை கால மாறுதல்களுக்கும், உலக இயக்கத்திற்கும் ஏற்ப தமிழீழத் தாய்நாட்டின் இருப்பையும், வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு ஆரோக்கியமான மாற்றங்களுடன் விடுதலைப் போராட்டம் தொடர்ந்தும் செயல் நெறிப்படுத்தப்படவேண்டும்.

பல ஆயிரம் மாவீரர்களினதும், மக்களினதும் அர்ப்பணிப்பில் உருவாகித் தமிழீழ நடைமுறை அரசில் பயன்படுத்தப்பட்ட தமிழீழத் தேசியக் கொடி, தமிழீழ அரச இலைச்சினை, தமிழீழத் தேசியக்கொடிப் பாடல் மற்றும் தமிழீழத் தேசிய அடையாளங்கள் என அனைத்தும் எமது தேசத்தின் அடையாளங்களாக தொடர்ந்தும் எம்மையும், எமது தேசத்தையும் அடையாளப் படுத்தி நிற்கவேண்டும்.

தமிழீழ நடைமுறை அரசை உருவாக்கி, நிர்வகித்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை தமிழீழத்தின் வழிகாட்டியாக என்றும் கௌரவிப்பதுடன், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராகவும் சமூகம், பொருளாதாரம், அரசியல், இராணுவம் மற்றும் இராசதந்திரம் என அனைத்துச் செயல்நெறிப்படுத்தகளிலும் புனிதமான தத்துவ வடிவமெனக் கொண்டதாகவும் தமிழீழ தேசத்தின் இயங்குநிலை தொடரப்படவேண்டும். மேலும் இது கட்டளை அல்லாது எமது இனத்தின் வலிமையின் அடையாளக் குறியீடாகவே அடையாளப் படுத்தப்படவேண்டும்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு அடுத்தபடியாக அவருக்கு முன்னர் தமிழீழத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்த தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயம் அவர்களைத் தமிழீழத்தின் முன்னோடி என முன்னிறுத்தி தமிழீழ தேசத்தின் இயங்குநிலை தொடரப்படடுதல்வேண்டும்.

மேலும், பல தமிழீழ தேசத்தின் முன்னோடிகள், நிர்மாணிகள் போன்றோரின் நினைவுகளையும் வழிகாட்டுதல்களையும் தமிழீழ தேசம் தாங்கிநிற்றல் வேண்டும்.

தமிழீழத்தில் தமிழர் இருப்பைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட இடைக்கால மற்றும் நிரந்தர தீர்வுகளை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தைகள், முன் வரைபுகள், ஒப்பந்தங்கள், தீர்வுத் திட்டங்கள் போன்றவற்றின் அடிப்படையிலான அரசியல் முன்னகர்வுகளை சீரிய நெறிப்படுத்தலுடன் மேற்கொள்ள தமிழீழ தேசம் எப்போதும் பின்னிற்காது என்பதுடன், தமிழீழ மக்களின் வாழ்வின் தேவையாக உறுதிசெய்யப்பட்ட தமிழீழத் தனிநாட்டுச் செயல்நெறிக்கிப் பாதிப்பில்லாத அதற்கு நிகரான, நிரந்தரமான, நின்மதியான வாழ்வைத் தமிழீழ மக்களுக்குத் தரக்கூடிய புதிய தீர்வுகள்பற்றியும் சிந்திக்கவோ, செயலாற்றவோ தயங்காது எனக் கூறிநிற்பதுடன் - தமிழீழ தேசத்தின் சுதந்திர வாழ்வும், அமைதியும், பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்வரை சுதந்திர தமிழீழத் தனி அரசிற்கான எமது போராட்டம் தொடரும் என்பதைக் கூறிநிற்றல்வேண்டும்.

*கேள்வி:* எதிர்கால விடுதலைப் போராட்டம் எவ்வாறு வழிநடத்தப்பட்ட வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?

*பதில்:* எமது தேசிய விடுதலைப் போராட்டத்தில்; தேசிய விடுதலை, சமூக விடுதலை ஆகிய இரு குறிக்கோள்களுமே தமிழீழ விடுலைப் போராட்டத்தின் அடிப்படையான அசியல் இலட்சியங்களாகும். 

தமிழீழ மக்கள் ஒரு தேசிய இனமக்களாக அமையப்பெற்றுள்ளனர். ஒரு தனித்துவமான தேசிய இன அமைப்பிற்கு அத்தியாவசியமான சகல குணாதிசயங்களையும் எமது மக்கள் பெற்றுள்ளனர். எமக்கு ஒரு தாயகமுண்டு, வரலாற்று ரீதியாக அமையப்பெற்ற இத் தாயகப் பூமி, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த, வரையறுக்கப்பட்ட பிரதேசமாக அமையப்பெற்றிருக்கின்றது. எமக்கு ஒரு மகத்துவமான மொழியுண்டு. தனிச் சிறப்புடைய கலாச்சாரம் உண்டு. தனித்துவமான பொருளாதார வாழ்வுண்டு. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீண்டு செல்லும் வரலாறு உண்டு. 

ஒரு தேசிய இனம் என்ற ரீதியில் எமது மக்கள் தேசிய சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். இந்த தேசிய சுயநிர்ணய உரிமை எனப்படுவது எமது அரசியல் தலைவிதியை நாமே நிர்ணயிக்கும் உரிமை; அந்நிய ஆதிபத்தியத்திலிருந்து எம்மை விடுவித்துக்கொண்டு தனியரசை அமைக்கும் உரிமை. சர்வசன வாக்கெடுப்பாக நிகழ்ந்த 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில் எமது மக்கள் சுயநிர்ணய உரிமையை உறுதிப்பாடு செய்து, அந்த உரிமையின் அடிப்படையில் பிரிந்து சென்று தனியசு அமைக்கத் தீர்மானித்தனர். சுயநிர்ணய உரிமையை ஊர்ஜிதம் செய்து எமது மக்கள் வழங்கிய ஆணையை ஆதாரமாகக் கொண்டே சிங்கள இராணுவ அடக்குமுறையில் இருந்து தமிழீழ மக்களை பாதுகாக்கும் நோக்குடன் உருவான தமிழர்களின் ஆயுத விடுதலைப் போராட்டம் தமிழீழ நடைமுறை அரசை உருவாக்கி 18 மே 2009 வரையிலும் தமிழீழத்தை ஆட்சி செய்தது. அதன் தொடர்ச்சியாக எமது விடுதலையை வென்றெடுக்கும் நோக்குடன் தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

சமூக விடுதலை எனும் பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்த, ஒடுக்கல் முறைகளும் சுறண்டல் முறைகளும் அகன்ற, ஒரு அறிவியல் பூர்வமான ஜனநாய விழியில், அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படக் கூடிய வளர்ச்சி மிக்க சமூதாய நிர்மாணதையே குறிக்கிறது. எமது சமுதாய மேம்பாட்டிற்கு ஒரு சாபக்கேடாகவும் சமூக சமத்துவத்திற்கு ஒரு முட்டுக்கட்டையாகவும் இருந்துவருவது சாதியக் கொடுமையாகும். சாதிய அமைப்பு எமது கிராமியப் பொருளாதார வாழ்வுடன் ஒன்று கலந்திருக்கிறது. வர்க்க அமைப்புடன் இணையப்பெற்றிருக்கிறது. தொழிற் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட பொருள் உற்பத்தி உறவுகளுடன் பின்னிப்பிணைந்து இருக்கிறது. மத சித்தாந்த உலகிலிருந்து வேரூன்றி வளர்ந்திருக்கிறது. தொழிலின் மகத்துவத்தை இழிவுபடுத்தி, மனிதனை மனிதன் வேறுபடுத்தும் இந்த மூட வழக்குமுறையை முற்றாக ஒழித்துக்கட்ட விடுதலைப் போராட்டம் திடசங்கற்பம் பூண்டிருக்க வேண்டும். சாதியத்தின் பெயரால் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து நசுக்கப்பட்டுவரும் மக்களின் விடிவிற்காக எமது போராட்டம் அயராது உழைக்கவேண்டும். மனித சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக மாண்பை அமுலாக்குவதன் மூலமும், அறிவியல் பூர்வமான கல்விமுறை வாயிலாகவும் இந்த சமூக தீமையை எமது போராட்டம் ஒழித்துக் கட்டவேண்டும்.

தேசிய விடுதலைப் போராட்டத்தையும் சமூக விடுதலைப் போராட்டத்தையும் ஒன்று சேர்த்ததாக, தேச சுதந்திரத்தையும் சமூகப் புரட்சியையும் ஒன்றிணைத்ததாக அமையப்பெற்றிருக்கும் எமது அரசியல் இலட்சியங்கள் எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுப்பதோடு அல்லாமல் எமது சமூகத்தில் நிலவும் ஒடுக்கு முறைகளிலிருந்தும் எமது மக்களுக்கு சுபீட்சமளிப்பதை குறிக்கோளாகக் கொண்டிருக்கவேண்டும். இந்த அரசியல் இலட்சியங்களை அடைவதற்காக எமது போராட்டம் கீழ்க் கண்ட நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்ளவேண்டும்.

*தேசிய, சமூக விடுதலை என்ற பொது இலட்சியத்தில் தமிழீழ மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி, அவர்களை ஒருங்கிணைந்த தேசிய மக்கள் சக்தியாக தொடர்ந்தும் அணி திரட்டுவது. 

*தேசிய - சமூக விடுதலை என்ற இலட்சியத்தை முனைப்புறச் செய்து துரிதப்படுத்தும் நோக்குடன் மக்கள் மத்தியில் தேசியப் பற்றுணர்வை தட்டி எழுப்பி தொடர்ந்தும் கட்டி வளர்ப்பது.

*வெகுசன அரசியல் போராட்டத்தை வலுப்படுத்தி தீவிரப்படுத்துவதுடன் பரந்துபட்ட பொது மக்களை தேசிய விடுதலைப் போராட்டத்தில் நேரடிப் பங்குதாரர்களாக தொடர்ந்தும் மாற்றுவது.

*தமிழின அழிப்பை சர்வதேச மயப்படுத்தி, உலக நீதிச் சபையின் பொறிமுறைகளுக்கு அமைவான பரிகார நீதியாகத் தமிழீழத் தனியரசை நிறுவுவது.

*தமிழீழ மக்கள் தனிநாட்டிற்கு உரித்துடையவர்கள் என்ற அடிப்படையில் சர்வதேச உறவை விரிவாக்கித் தமிழீழத் தனிநாட்டை நிறுவுவது.

*தமிழீழ நடைமுறை அரசின் நெறிமுறைகளை அடித்தளமாகக் கொண்டு உலக நியதிகளின் மாறுதல்களுக்கு ஏற்ப தமிழர்களின் சுதந்திர வாழ்வையும் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக்கூடிய ஆரோக்கியமான சுதந்திர தமிழீழத் தனியரசிற்கான கட்டுமானத்தை நிறுவுவது.

தொடரும்...

Files