தலைவர் இருக்கிறாரா இல்லையா என்ற கவலை தேவையில்லை..!!
18 மே 2009 வரைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில், விடுதலைப் போராளியாகச் செயலாற்றிய ஒருவருடனான சிறப்பு நேர்காணல்.
கேள்வி: நீங்கள் யார்? எவ்வாறு உங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்கள்?
பதில்: நான் ஒரு விடுதலைப் போராளி. ஆனால், இன்று என்னால் அதனை அழுத்தமாகக் கூற முடியவில்லை.
கேள்வி: போராளி என்ற நிலையில் இருந்து நீங்கள் விலகி உள்ளீர்களா? அல்லது, விலத்தப்பட்டு உள்ளீர்களா?
பதில்: (மௌனம்) காலம்தான் தீர்மானிக்க வேண்டும். (சிறிய இடை வெளியின் பின்) 2009 வரை உறுதியான தலைமை ஒன்றின் கீழ் நேரடித் தொடர்புடன் செயலாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது என்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி என உறுதியாகக் கூற முடிந்தது. ஆனால், இன்று அவ்வாறு இல்லை.
கேள்வி: உங்களை நான் முன்னை நாள் போராளி என அடையாளப் படுத்திக் கொள்ள முடியுமா?
பதில்: மௌனமாகச் சிலநொடிகள் என்னை நிதானித்தவர் ஒருவித மனச் சோர்வுடன் தலையை நிமிர்த்தி "உங்கள் விருப்பம்" என்றார்.
கேள்வி: தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டு தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை அல்லது வேறு விதமான வாழ்வினை நோக்கிச் சென்று விட்டீர்களா?
பதில்: இல்லை (பதில் உறுதியாக இருந்தது). இதுவரையில், என் மனம் எந்தவொரு மாற்று முடிவிற்கும் செல்ல விரும்பவில்லை.
கேள்வி: நீங்கள் உங்களை ஒரு புனிதமான போராளியாகக் கருதுகிறீர்களா?
பதில்: தமிழீழத்தில் சுய கட்டுப்பாடும், சூழல் கட்டுப்பாடும் இருந்தது. ஆனால், இன்று அவ்வாறு இல்லை, இன்று நான் வாழும் சூழல் என்பது சுயத்தின் மீது நியாயப்படுத்த முடியாத களங்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
இவ்வாறு சூழல் கட்டுப்பாட்டைக் காரணம் கூறுவதன் மூலம் நான் இளைக்கும் அலட்சியமான, சுயநலம் கொண்ட தவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள விரும்பவில்லை. இயற்கையின் நியதியில் நான் தவறு செய்திருந்தால் தவறுகள் என்னுடையதே.
விடுதலையின் மேல் உள்ள பற்றின் விளைவாக போராட விரும்புகிறேன். என் கருத்துக்களை ஏற்பதும், ஏற்காது விடுவதும், உங்கள் விருப்பம். Tநான் போராளியா, இல்லையா என்ற கேள்விக்கான பதிலை நான் சொல்வதைக் காட்டிலும் எனது சமூகம் ஏற்றுக் கொள்வதிலேயே தங்கியுள்ளது.
கேள்வி: உங்கள் வாழ்வின் நிலையினை தமிழ்ச் சமூகம் தீர்மானிக்கட்டும். உங்களது அனுபவத்தில், தனித் தமிழீழம் இன்னும் சாத்தியம் என்று கருது கிறீர்களா?
பதில்: (எடுத்த எடுப்பிலேயே உறுதியான தொனியில்) நிச்சயமாகச் சாத்தியம்.
எமது இனம் அதைநோக்கி திடமாக நகர்ந்து செல்கிறது. எனினும், இன்னும் அது தன்னைச் சீர்படுத்திக் கொள்ளவேண்டும். இல்லாவிடின் நாம் அழிந்து விடுவோம்.
கேள்வி: நீங்கள் இவ்வாறு சொல்கிறீர்கள். ஆனால், உண்மை அப்படி அல்ல, தமிழீழத் தமிழினம் உறுதியான தலைமை இல்லாமல், அவர்களுக்கான பாதுகாப்பு பொறிமுறை ஒன்று இல்லாமல், கடந்த பனிரெண்டு ஆண்டுகளாகப் படிப்படியாகத் தமிழின அழிப்பிற்கு உள்ளாகி வருகின்றது என்பதே, இன்றைய உண்மைக் கள நிலவரம்.
பதில்: நீங்கள் சொல்வதை நான் மறுக்கவில்லை. இன்றைய கள நிலமை அவ்வாறுதான் உள்ளது. இதை விரைந்து மாற்றுவதற்கு நாம் கூர்ந்து செயலாற்ற வேண்டும்.
கேள்வி: கூர்ந்து என்பதன் பொருள் என்ன?
பதில்: இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னர் உலகம் ஐக்கிய நாடுகள் சபையை மையமாகக் கொண்டு, ஒருவிதமான உலக ஒழுங்கினுள் நகர்ந்து வருகிறது. எனவே, இன்றைய உலக அரசியல் மாறுதல் நிலைகளுக்கு ஏற்ப அதனைச் சரிவரக் கையாளும் தகுதியைத் தமிழர்கள் உருவாக்கிக் கொள்ளவேண்டும். இல்லையேல், தமிழீழ நாடு சிங்கள நாடக மாற்றப்படுவதைத் தவிர்க்க முடியாது போய்விடும்.
கேள்வி: தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் சிந்தனைக்கு அமைவாகத் தமிழீழ நாட்டினை உருவாக்க வேண்டும் என்று ஒரு சாராரும். இல்லை மாறுபட்ட முறையில் உருவாக்கப்பட வேண்டுமென இனொரு சாராரும் செயலாற்றுவதைக் காணமுடிகிறதே, அதில் நீங்கள் எந்த ரகம்?
பதில்: தலைவரின் சிந்தனைகளை உள்வாங்கி கால மாற்றங்களுக்கு ஏற்ப புதிய கொள்கைகளை உருவாக்கி தலைவரின் சிந்தனைகளுக்குக் காலத்திற்கேற்ப புதுவடிவம் கொடுத்து, விடுதலையை சாத்தியம் ஆக்க விரும்புகிறேன்.
இதுவே மாவீரர்களினதும், தலைவரினதும் கனவை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.
கேள்வி: இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னர் உலகம் ஐக்கிய நாடுகள் சபையை மையமாகக் கொண்டு, ஒருவிதமான உலக ஒழுங்கினுள் நகர்ந்து வருகிறது. எனவே, இன்றைய உலக அரசியல் மாறுதல் நிலைகளுக்கேற்ப அதனைச் சரிவரக் கையாளும் தகுதியைத் தமிழர்கள் உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்று நீங்கள் கூறுவதன் பொருள் தமிழீழத் தேசியத் தலைவரின் போராட்டம் தொடர்பான செயற்பாட்டில் இருந்து மாறுபாடுகொண்டதா?
பதில்: தமிழீழ தேசியத் தலைவரின் போராட்டம் என்பது 1970 களின் ஆரம்பத்தில் தமிழின அழிப்பில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க, தமிழர்கள் நடத்திய அமைதிவழிப் போராட்டங்கள், ஆயுதவழியில் அடக்கப்படும்போது, ஆயுதவழியில் விடுதலையை வென்றெடுக்க எழுந்த சத்திய இலட்சியப் போராட்டமாகும்.
அது, அதன் வழியே பயணித்து, தமிழீழ நடைமுறை அரசை கட்டி ஆண்டு, எதிரிக்கு எதிராக தமிழர்களின் படைவலுச் சமநிலையை உலகின்முன் நிறுவி மிகப்பெரும் வலிமை மிக்க வரலாறு படைத்த விடுதலைப் போராட்டம்.
நாடுகளின் நலன்கள் என்ற அடிப்படையில் இயங்கும் இன்றைய ஐக்கிய நாடுகள் சபை தலைமையிலான உலகம், மேற்கொள்ளும் உலக ஒழுங்கில், வெற்றிகரமான எமது ஆயுத விடுதலைப் போராட்டம் சரணடைவதைக் காட்டிலும் அடிபணியாது மரணிப்பதே எமது மக்கள் நிரந்தரமான விடுதலையை வென்றெடுக்க வழிவகுக்கும் என்ற தெளிந்த சிந்தனையின் செயல் வடிவாய், விடுதலைப் பற்றுடன் வலிகளைத்தாங்கிய அதி உயர்ந்த அர்பணிப்புக்கள் நிறைந்த போராட்ட வடிவமாகவே அதுதன்னை வரலாற்றில் நிலைநிறுத்தியுள்ளது.
எனவே எமது போராட்ட வடிவம் என்பது, தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளை தாங்கியது மட்டும் அன்றி அவை எம்முள் இரண்டறக் கலந்திருக்கும் போராட்ட வடிவமாக ஒன்றித்து விட்டது என்பதே வரலாறு.
இனி எவர் நினைத்தாலும் தமிழர் வாழ்வியலில் இருந்து தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளை இல்லாது அழித்துவிட முடியாது.
கேள்வி: தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் சோசலிச தமிழீழம் என்ற இலக்கை புதிய வடிவில் அடைய விரும்புகிறீர்களா?
பதில்: தலைவர்(தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்) தமிழீழத்தில் தமிழர்கள் நின்மதியாக வாழவேண்டும் என்ற, அடித்தளத்திலேயே போரட்டத்தை ஆரபித்தார்.
அவர் போராட்டத்தை ஆரம்பித்த காலப் பகுதியில், உலகம் சோசலிசம் அல்லது கொம்யூனிசம் என்ற பொருளாதாரக் கொள்கை வழியிலும் முதலாளித்துவக் கொள்கை வழியிலும் பிரிந்து கிடந்தது.
அவ்வேளையில், சோசலிசக் கொள்கையில் உள்ள நற்பண்புகள் காரணமாகத் தலைவர் அதனைப் பின்பற்றினார். திருத்தம், பின்பற்றினார் என்றே நான் கருதுகின்றேன்.
இன்று உலகில் திறந்த பொருளாதாரக் கொள்கையே அனைவராலும் பின்பற்றப் படுகிறது. எனவே, தமிழீழம் என்ற நாடு உருவானால், சோசலிசக் கொள்கைக்கு புத்துயிர்ப்பு ஊட்டும் என்ற, சந்தேகம் தேவையற்றது.
கேள்வி: அப்போது சோசலிச தமிழீழம் ஒன்றே அமையுமெனச் சத்தியநாதன் சங்கர், சீலன்(சாள்ஸ் அன்ரனி), தியாகதீபம் திலீபன், போன்ற மாவீரர்கள் கண்ட கனவிற்கு முற்றுப் புள்ளிவைத்து, அதனைப் புதைகுழியில் தள்ளிவிட்டீர்களா?
பதில்: இல்லை, அவர்கள் உயிருடன் இருந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள். அல்லது, தலைவரைப் போன்று, அடிபணிய விரும்பாது தங்களையும் மௌனித்து இருப்பார்கள் என்றே கருதுகின்றேன்.
தவறு இருப்பின் திருத்திக்கொள்ளத் தயாராக உள்ளேன்.
கேள்வி: தமிழீழம் உருவானால் அதனது பொருளாதாரக் கொள்கை என்னவாக இருக்கும்?
பதில்: திறந்த பொருளாதாரக் கொள்கை.
கேள்வி: தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடடைந்து விட்டாரா?
பதில்: இல்லை, மௌனித்துவிட்டார்.
கேள்வி: உங்களைப் போன்று, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவை ஏற்காத பலரினால்தான் சர்வதேசத் தளத்தில் தமிழர்களின் விடுலை பின்னோக்கித் தள்ளப்படுகின்றது. அதை உங்களால் உணர முடிகிறதா?
பதில்: உங்களின் கேள்வியை என்னால் ஊகிப்பின்றி உணர்ந்து கொள்ள முடிகிறது.
இது சர்வதேசம் கூறும் காரணமா? அல்லது, எம்மவர்களில் சிலர் கூறும் காரணமா? என்பதனை முதலில் அறியவேண்டும்.
அதன்பின்னர் சர்வதேசத்தின் சில தரப்புக்கள் அவ்வாறு கூறினால், அதற்கான விளக்கத்தைக் கேட்டு அறிய வேண்டும். அதன்பின்னர், அதற்கான விளக்கத்தை சரியான முறையில் கொடுக்கவேண்டும்.
அதே போன்று, எம்மவர்கள் கூறினால், அவர்கள் ஏன் அவ்வாறு கூறுகின்றனர் என்பதனை அறிந்து, அவர்களுக்கு உரிய பதிலினைக் கூற முடியும் என்ற நம்பிக்கை, எனக்கு உள்ளது.
தலைவர் வீரச்சாவு அடையவில்லை என்பது, எனது நம்பிக்கை, இந்த நம்பிக்கையானது எவருக்கும், எப்போதும், எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றே நம்புகிறேன்.
குறிப்பாக: தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கோ, அது சார்ந்த வேலைத்திட்ட முன் நகர்வுகளுக்கோ, எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது எனது ஆழமான அறிவார்ந்த நம்பிக்கை.
கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சர்வதேச நாடுகள் பலவற்றால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைவர் உயிருடன் இருப்பதாகச் சொல்வதும். அவர் வழியில் தொடர்ந்து போராடுவதாக் கூறுவதும். விடுதலைப் போராட்டத்தின் சர்வதேச அங்கீகாரத்திற்குப் பெரும் பாதிப்பையும், பின்னடைவையும் தானே ஏற்படுத்தும்.
பதில்: இலங்கை உட்பட, உலகநாடுகள் பலவுமே தலைவர் வீரச்சாவு அடைந்துவிட்டதாக நம்புகின்றன. ஆனால் தமிழர்களில் பெரும்பான்மை ஆனவர்கள், தலைவர் இன்னும் வாழ்வதாக நம்புகின்றனர் என்பதனையும் உலகம் நன்கறியும்.
எனவே, சர்வதேசப் பிரதிநிதி ஒருவரோ, அல்லது ஒருநாடோ, தலைவர் தொடர்பான உறுதியான உங்கள் முடிவு என்ன என்று கேட்டால். அல்லது, அவரது வீரச்சாவை உறுதிப்படுத்துமாறு விண்ணப்பித்தல். எனது பதில் மிகத் தெளிவானது.
18.05.2009 ஆம் ஆண்டின் பின்னர் இன்றுவரை தலைவர் அவர்களின் தொடர்பு எவருக்கும் கிடைக்கவில்லை. ஸ்ரீலங்கா அரசாங்கம் அவர் வீரச்சாவு அடைந்து விட்டதாக உறுதிப்படுத்தி உள்ளது. ஆனால், நானோ எமது மக்களோ இதனை ஏற்கத் தயாராக இல்லை. இது எமது விடுதலைக்காகப் போராடிய தலைவரின் இழப்பை ஏற்க முடியாத எமது மக்களின் ஆழமான நம்பிக்கை. எனவே, இது தொடர்பான எமது நம்பிக்கையை விளங்கி, எமது உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என்பது மட்டுமே எனது விண்ணப்பம்.
எனவே, தலைவர் மீண்டும் வருவார் அல்லது வரமாட்டார் என்ற வாதப் பிரதிவாத்தை விடுத்து இன்று உள்ள தமிழ்த் தலைவர்களுடன் பேசி, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வென்ரெடுக்கவல்ல, தமிழீழ மக்களைப் பாதுகாக்க வல்ல தமிழர்களுக்கான ஏகதலைமை ஒன்றை உருவாக்கி, தமிழர் பிரச்சினைக்கு ஆரோக்கியமான தீர்வினைக் காண முன்வாருங்கள் என்பதையே நாம் அனைவரிடத்திலும் கோரிநிற்கின்றோம்.
மேலும், இத்தியாவின் விடுதலைப் போராட்டத்தில், ஆயுதவழிப் போராட்டத்தில் நம்பிக்கைகொண்டு போராடிய தலைவரான நேதாயி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் இன்றுவரை உயிர் இழக்கவில்லை என்றே பலரும் நம்புகின்றனர்.
நோர்வே தலைமையிலான சர்வதேச மத்தியஸ்தத்துடன் கூடிய பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்ட பின்னரே, பல சர்வதேசநாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்தன. இந் நடவடிக்கையானது பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கான சர்வதேச அழுத்தமாகவே பயன்படுத்தப்பட்டது. எனவே, இன்றைய சர்வதேச அரசியற் சுழலும், எமது போராட்டக் களமும் மிகப்பெரிய மாறுதல்களைச் சந்தித்துள்ள - இன்றைய அரசியற் சூழமைவில், தலைவரின் இருப்புப் பற்றிய விவாதம் சர்வதேசத் தடைகளை அகற்றுவதில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதே அரசியல் யதார்த்தம்.
கேள்வி: அப்போது இன்னும் ஏன் பல சர்வதேச நாடுகள், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையினை எடுக்க முன்வரவில்லை?
பதில்: இது இன்று தமிழீழத் தேசியத்தலைவரின் கொள்கைகளைத் தாங்கித் தொடர்ந்தும் போராடுவோம் என்ற, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டக் காரர்களின் செயற்பாட்டின் பலவீனம் என்றே, கருதுகின்றேன்.
2009 இன் பின்னர் ஒரு சில ஆண்டுகளிலேயே இதற்கான சரியான வேலைத் திட்டங்களை ஆரம்பித்திருக்கவேண்டும்.
நான் நினைக்கின்றேன் அவ்வாறான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு, ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடைகள் அகற்றப்பட வேண்டுமென நீதிமன்றத்தின் ஊடான தீர்ப்புக்களையும் பெற்றிருந்தனர்.
எனினும், அவர்களால் அது தொடர்ந்தும் வெற்றிகரமான முறையில் முன் எடுக்கப் படவில்லை என்றே கருதுகிறேன். அதற்கான காரணம் என்ன என்பது, சரியான முறையில் தெரியாத நிலையில், என்னால் எவரையும் குறைகூற முடியவில்லை.
தலைவர் பிரபாகரன் என்பவர், ஒரு சிறந்த விடுதலைப் போராட்டத் தலைவர். சேகுவேராவைப் போல, யோச் வொசிங்டனைப் போல, மாசே துங்கைப் போல, ஒரு விடுதலைப் போராட்டத் தலைவர் என்பதை, உலகம் நன்கு அறியும். எனவே, இதனை நாம்தான், அவர்களுக்கு சந்தேகங்கள் வரும் போதெல்லாம் இடைவிடாது, உரியமுறையில் எடுத்து விளக்க வேண்டும்.
தலைவர் அவர்களின் போராட்டம் என்பது நடந்து முடிந்த வரலாறு, இன்று அவர் எதிர்கால வரலாற்றின் வளர்ச்சியை வழிநடத்தும் அடிப்படை ஆதாரம் - அவர் உயிருடன் இருக்கின்றார் என்பது எங்களது நம்பிக்கை.
தனிப்பட்ட ரீதியில், தமிழீழம் தனிநாடகத் தோன்றுவதைத் தடுக்க விரும்புவோர் இதனை ஒரு காரணமாக் கூறலாம். அவர்களுக்கு என்ன பதில் சொன்னாலும் தமிழீழத்தை தனிநாடாக உருவாக அனுமதிக்க மாட்டார்கள்.
உலக நாடுகளையோ, சர்வதேச உலக ஒழுங்கைத் தீர்மானிப்பவர்களையோ பொறுத்த மட்டில் உருவாகப்போகும் தமிழீழம் எவ்வாறு இருக்கும். அதை உருவாக்குவதற்காகப் போராடும் தற்போதைய புதிய தலைமைகள் எவ்வாறான கொள்கைகள் மற்றும் வழிமுறைகளின் ஊடாகப் போராட விரும்புகின்றனர். அவர்கைளின் சித்தாந்தம் என்ன, என்பது போன்றவையே பிரதானமானது.
மேலும், தலைவர் பின்பற்றிய சித்தாந்தங்கள் மற்றும் நடைமுறைகளில், காலத்திற்கு பொருந்தாதவை என உலகம் கருதும் செயல் முறை வடிவங்களை ஆராய்ந்து, அவை தமிழ்த் தேசிய உறுதிப்பாட்டிற்குப் பாதிப்பு இல்லை எனத் தீர்க்கமாகக் கருதும் இடத்தில், தற்போதைய தலைவர்கள் அதனை வரலாற்று பூர்வமாக சிந்தித்துச் செயலாற்ற தயாராக உள்ளர்களா? என்பது போன்ற, புதிய போராட்டக் காரர்களின் நெறிப்படுத்தப்பட்ட செயற்பாட்டுகளின் தன்மையிலேயே தங்கி உள்ளது.
கேள்வி: அப்படி என்றால் நீங்கள் தலைவரின் கொள்கைகளைக் கைவிடத் தயாராக உள்ளீர்களா?
பதில்: நான் உங்களுக்கு முன்பே சொன்னதுதான்.
தலைவர் அவர்கள் எவரும் குறை கூற முடியாதபடி உலக வரலாற்றுக்கே பல முன் உதாரணங்களைக் கற்பிக்கக் கூடிய போராட்ட வடிவம் ஒன்றை 18.05.2009 வரையில் நெறிப்படுத்திக் காட்டியுள்ளார்.
இதனை உலகம் இன்று கற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் தலைவரின் மகத்துவம் பற்றிப் பேச சிறிது காலம் எடுக்கும்.
எனவே, ஆபிரகாம் லிங்கனை போலவும், காந்தியைப் போலவும், கார்ல் மார்க்சைப் போலவும் தலைவரை உலகம் ஒரு நாள் அங்கீகரிக்கும்.
அவ்வாறான அங்கீகாரம், அதி உயர்ந்ததாக இல்லாவிட்டாலும் தமிழீழத்தின் விடுதலைப் போராட்டத் தலைவராக அங்கீகரிக்கப்படுவார்.
இதனை வென்றெடுக்க நாம் முழு மனதுடன் புத்தி பூர்வமாகச் செயலாற்றவேண்டும்.
தலைவர் பின்பற்றிய கொள்கைகளில் இன்றைய போராட்ட வடிவத்திற்குப் பொருத்தம் இல்லாதவற்றைக் கைவிடவேண்டும்.
அதேநேரம், இன்றைய கால சூழமைவுகளுக்கும், எதிர்காலத் தமிழர்களின் நின்மதியன நிரந்தர இருப்பிற்கும், பொருத்தமானவை எனவும், இன்றைய உலக ஒழுங்கிற்கு ஏற்றவை என்றும் கருதும்போது. அவை, ஒருபோதும் தலைவரின் சிந்தனைகளுக்கு மாறானதாக அமையாது.
உதாரணத்திற்கு: தலைவர் எப்போதுமே, ஆயுதப் போராட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டே போராட்டத்தை வழிநடத்தினார். ஆனால், நாம் இன்று ஆயுத வழிமுறை அற்ற போராட்ட வடிவம் ஒன்றையே பின்பற்ற வேண்டி உள்ளது.
ஸ்ரீலங்காவின், தமிழின அழிப்பு நடவடிக்கைகள் மற்றும் இன ஒடுக்குமுறைச் செயற்திட்டங்களை உலகிற்கு எடுத்துக் காட்டுவதுடன், எமது அரசியல், இராசதந்திர உறவின் அடிப்படையிலான செயற்பாடுகளின் ஊடாகவே, எமது விடுதைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
ஆயுதப் போராட்ட வழிமுறை தழுவாத, திறந்த பொருளாதாரக் கொள்கை அடிப்படையிலான, அதேநேரம் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட சோசலிச தமிழீழம் என்ற அரசியல் கையேட்டை அடிப்படையாகக் கொண்டதொரு புதிய கொள்கை விளக்க அரசியற் கையேடு ஒன்றே, இன்று அவசியமானது.
தலைவர் தலைமையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் வெற்றி என்பது, அவர் வகுத்துக்கொண்ட கொள்கை, அதனைத் தலைவர் நடைமுறைப்படுத்திய விதம் என்பவற்றிலேயே தங்கியிருந்தது.
படிப்படியாகப் போராட்டத்தை விரிவாக்கிய தலைவர், சோசலிச தமிழீழம் என்ற கையேட்டிடை ஓர் அடிப்படை ஆவணமாக உருவாக்கினார்.
அதே போன்று, விடுதலை இயக்கத்திற்கான சத்தியப் பிரமானத்தையும் உருவாக்கினார். இயக்கம் உருவாக்கிய சத்தியப் பிரமணத்திலேயே, ஒரு கால கட்டத்தில் 'பொது உடமைத் தன்னாட்சித் தமிழீழ விடுதலைக்காக' என்ற சொற்பதத்தை 'சமவுடைமைத் தன்னாட்சி தமிழீழ விடுதலைக்காக' என மாற்றி இருந்தார்.
அதே போன்று, சோசலிச தமிழீழம் என்ற அரசியல் கையேட்டிலே, யனநாயக சோசலிச நாடாகவே தமிழீழம் நிறுவப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமன்றி உலக பொருளாதார மாற்றங்களுக்கேற்ப பல நடைமுறை மாற்றங்ககளையும் செய்துகொண்டார்.
இதன் விளைவாகவே மேற்கு நாடுகளில் வாழ்ந்த பெருமளவு தமிழ் மக்களின் நிதிப் பங்களிப்பினை, அந்த நாடுகலின் மறைமுக அனுமதியுடன் பெற்று, ஆயுதங்களைக் கொள்வனவுசெய்து, போராடி, சிங்கள தேசத்திற்கு நிகரான படைவலுச் சமநிலையை நிறுவ முடிந்தது.
இதன் விளைவாக முதலாளித்துவ சிந்தனையில் இயங்கிய மேற்கு நாடுகளின் பாரிய எதிர்ப்பையோ, எதிர்த் துருவ அரசியல் கொண்ட சீனா, ரஷியா போன்ற நாடுகளின் எதிப்பையோ, பெரியளவில் சந்திக்கவில்லை.
ஆனால், 2000 ஆம் ஆண்டின் பின்னரான காலப் பகுதியில், ஆயுத விடுதலைப் போராட்டத்தில் வெற்றி பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள், ஒரு நாடாக விடுதலை அடைவதை மேற்கு நாடுகள் விரும்பவில்லை. அதேபோன்று, தமிழீழத்தை தனிநாடாக்கவும் விரும்பவில்லை என்பதே, 2009 இல் ஏற்பட்ட பின்னடைவிற்குக் காரணம் ஆகியது.
அதுவரை, தனது அரசியல் இராசதந்திர உத்திகளைக் கையாண்டு, நடைமுறை அரசை எமது சொந்த பலத்தில் நிறுவிக்காட்டிய தலைவர். தமிழீழத்திக்கு மாற்றான தீர்வு எதனையும் அடைய விரும்பவில்லை.
அதேநேரம், தமிழீழத்திற்க்கு மாற்றுத் தீவொன்றை விரும்பாது இருந்தபோதும் தலைவர், தனது அரசியல் இராசதந்திர நுணுக்கங்களால், அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாட்டுப் படைகளுடன் நேரடியாக மோதாது தவிர்த்து, எதிர்கால அரசியல் இராசதந்திர வெற்றிக்கான கதவினையும் திறந்து விட்டே மௌனித்து உள்ளார்.
இவ்வாறானதோர் சூழமையிலேயே. அன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத சிறிலங்காவைத் தம்பக்கம் வளைத்துவிட விரும்பிய சீன மற்றும் இசுலாமிய நாடுகளுடன் மேற்கு உலக நாடுகளும் சிறிலங்காவிற்கு ஆதரவாகக் கிட்டியது.
இதனாலேயே, ஸ்ரீலங்காவின் 2009 யுத்தவெற்றியை பலதரப்பட்ட உலக நாடுகளும் ஐ.நா வில் புகழ்ந்துரைத்து நின்றன.
எனவே, அன்றைய உலக அரசியல் இராசதந்திரக் களம் என்பது வேறு, இன்றைய உலக அரசியல் இராசதந்திரக் களம் என்பது வேறு என்பதனைப்புரிந்து, அடுத்த தலைமுறை பயன்படுத்தக் கூடிய விதத்தில், தலைவர் திறந்து விட்டுள்ள கதவினைச் சரியானமுறையில் பயன்படுத்த வேண்டும் என்பதே, எனது கருத்தாகும்.
தலைவரின் கொள்கைகளை எவரும் முழுமையாக்கக் கைவிடவும் தேவையில்லை, பின் பற்றவில்லையே எனக் கவலை கொள்ளவும் தேவையில்லை.
எனவே, இன்றைய விடுதலைப் போராட்டத்தை வரலாற்றின் வழிக்காட்டலில், காலமிட்ட கட்டளைப்படி முன்னெடுப்பதே தமிழீழ விடுதலைக்கும், தலைவரின் இருப்பிற்கும், அவரது சிந்தனைகளின் வழிகாட்டலுக்கும், அவரது சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுக்க வீரகாவியம் படைத்த மவீரர்களினது சிந்தனைகளுக்கும் செயல்வடிவம் கொடுக்கும். (தொடரும்………………)