தமிழீழத்திறவோர் நேர்காணலின் இறுதியும் சாரமும்

தேர்தல் ஈடுபட விரும்பாத சிவில்சமூக அமைப்புக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை மட்டுமேகொண்ட சிவில்சமூக வலையமைப்பு ஒன்றை வளர்த்தெடுத்து, தேர்தல் அரசியல் தலைமைகளையும், அரச நிர்வாகக் கட்டுமானங்களையும், தமிழ்த் தேசிய இருப்பையும், சமூக - பொருளாதார மேம்பாட்டை யும், உரிமைப் போராட்டங்களையும் பக்கச்சார்பின்றி தமிழ்த்தேசியச் சிந்தனையுடன் வழிநடத்த வல்ல கட்டுமானம் ஒன்றைச் செயற்திறன் பெறவைத்தல் வேண்டும்.

தமிழீழத்திறவோர் நேர்காணலின் இறுதியும் சாரமும்

கேள்வி: இலங்கையில் இந்தியா, சீனா, அமெரிக்கா என்ற முக்கோண பூகோள அரசியல் போட்டி நிகழ்கிறதே, இதற்குள் அரசு என்ற அதிகாரம் கொண்ட பௌத்த சிங்கள இனவாதம், இந்த வல்லரசுகளுக்கான களங்களை அவரவர்களுக்கேற்ப அமைத்துக்கொடுத்து அதற்கான பிரதி உபகாரமாக தமிழர் இருப்புக்கான போராட்டத்தையும் தமிழர் இருப்பையும் செயல் இழக்கச் செய்வதை இலக்காகக் கொண்டு செயற்படுகிறதே, இதில் இருந்து தமிழர்களால் மீள முடியுமா? அது சாத்தியம் என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: ஆம் முடியும். நிச்சயமாக இது சாத்தியம், தமிழர்களால் தமிழீழத்தில் தமது இருப்பைப் பாதுகாப்பதுடன் தமிழீழத் தனி அரசை இப் பூகோள போட்டி அரசியல் உலகில் உருவாக்க முடியும் என்பதும் சாத்தியமே.

இதற்கு முதலில் 

தமிழர்கள் எதிரியின், அதாவது நரித்தனம் கொண்ட பௌத்த சிங்கள ஆட்சியாளர்களின் செயற்பாடுகளை பார்த்துப் பயம்கொள்வதை நிறுத்த வேண்டும். 

இரண்டாவது அவர்களின் நரித்தனமான செயற்பாடுகளை உலகின்முன் அம்பலப்படுத்தி, அவர்களின் முகத்திரைகளைக் கிழித்து, அவர்களின் தீய செயல்களையும், கபடங்களையும், நம்பிக்கைத் துரோகங்களையும் உலகின்முன் மிகவும் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். 

அவர்களின் பலவீனங்களை அறிந்து அவற்றின் ஊடே எமது வெற்றியினை உறுதிப்படுத்திக்கொள்ளுதல் வேண்டும். 

இவை எல்லாவற்றையும் கடந்து அப்பாவிச் சிங்கள மக்களுடனும், பிராந்திய வல்லரசான இந்தியாவுடனும், உலக நாடுகளுடனும் உரியமுறையில் எமது உறவுகளைப் பலப்படுத்தும் விதத்திலான செயற்பாடுகளில் ஈடுபடுதல் வேண்டும்.

அந்தவகையில் இலங்கையின் கபட நோக்கங்களை உணரும் உலக மற்றும் பிராந்திய வல்லரசுகள் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டக் களம் ஒன்றை உருவாக்கி தமது நலன்களையும் தமிழீழத் தமிழர் நலன்களையும் பாதுகாக்க முயலலாம். இதில் உலக மற்றும் பிராந்திய வல்லரசுகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கலந்துகொள்ளலாம் இவற்றைவிடவும் தமிழீழ மக்கள் மீண்டும் ஒருமுறை ஆயுத விடுதலைப் போராட்டமே இறுதித்தீர்வை பெற்றுத் தருமெனக்கூறி ஆயுதவழிப்போராட்டத்தில் ஈடுபட ஆரம்பிக்கலாம், இவை நெருப்பின் மீது நடக்கும் போராட்ட வடிவங்களாக இருக்கும், இதில் எதிரியும் கருகிப்போகலாம், தமிழர்களும் அவர்களின் இருப்பிற்கான விடுதலைப் போராட்டமும் கூடக் கருகிப்போகலாம்.

எனவே தமிழீழத்தின் ஆயுத விடுதலைப் போராட்ட வெற்றி என்பது தமிழீழத்திற்கும் பிராந்திய, உலக வல்லரசுகளுக்குமான உறவுத் தளத்தில் அமையப்பெறபோகும் நிகழ்வாகவே அதிகம் அது இருக்கமுடியும். 

இத்தகைய ஆயுத விடுதலைப் போராட்டத்திற்கும் தடையில்லாத வகையில் கடந்த பதின்மூன்று ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர்கள் பின்பற்றிவரும் சாத்வீக வழியிலான அரசியல் விடுதலைப் போராட்ட வடிவங்களை தமிழர்கள் ஒரு சீரானமுறையில் செயல்நெறிப்படுத்திக் கொள்வதே இன்றைய மற்றும் எதிர்கால விடுதலைப் போராட்ட வெற்றிக்கு வழிவகைசெய்யும்.

அந்தவகையில் தமிழின அழிப்பை சர்வதேச மயப்படுத்தி மனித உரிமைச் சபை, சர்வதேச நீதிமன்றங்கள், உலகநாடுகள் என அனைத்துப் பொறிமுனைகளுக்கும் முறையே எடுத்துச் சென்று ஐக்கிய நாடுகள் சபையின் நான்காவது குழுப் பொறிமுறை அல்லது மூன்றாவது குழுப் பொறிமுறைகளின் ஊடாக தமிழீழத் தனிநாட்டை நிறுவும்வரையிலான முன்நகர்வுகள் மற்றும் அனைத்து நீதிப் பொறிமுறைகளின் ஊடகவும் தமிழின அழிப்பில் பாதிக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கான சமரசம் அற்ற நீதிகிடைக்கும் வகையிலான நீதிகோரும் போராட்டப் பொறிமுறைகளையும் இடையறாது தனித்துவமாகக் கட்டமைக்கப்பட்ட போராட்ட வடிவமாக்கி தொடர்ந்தும் செயல்நெறிப்படுத்துதல் அவசியமானது.

மேற் கூறப்பட்ட நீதிக்கான பொறிமுறை ஒரு வடிவம் என்றால் இனொரு வடிவமாக இன்றும், எதிர்காலத்திலும் தமிழின அழிப்பில் இருந்து தமிழீழத்தைப் பாதுகாப்பதற்கான அரசியல் இராசதந்திர முன்நகர்வுகள் இன்னொருவடிவில் செயல்நெறிப் படுத்தப்படவேண்டிய மிகமுக்கியமான சமகால அரசியற் செயற்பாட்டு வடிவமாகும்.

அந்தவகையில் நல்லவர்கள் என்ற நாடகமாடி உலகை ஏமாற்ற நினைக்கும் பௌத்த சிக்களப் பேரினவாத அரசின் அரசியல் முன்னெடுப்புக்களின் கபடநோக்கம் கொண்ட செயற்பாடுகளையும், போலிப் பேச்சுவார்த்தை நாடகங்களையும் அவற்றில் பங்குபற்றவேண்டிய இடங்களில் பங்குபற்றியும், அவற்றை உலகின் முன் தோலுரிக்கவேண்டிய இடத்தில் எதிர்த்தும், வெளியேறியும், பங்குபற்றாமலும் தமிழர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளின் மூலமாகவும் உலகிற்கு எடுத்துரைத்தல் மிகவும் அவசியமானது. 

இந்த அரசியல் இராசதந்திர அணுகுமுறையில் தமிழத்தை தமிழர் தேசமாக அங்கீகரிக்கக் கூடிய விதமான சிங்கள தேசத்தின் மன மாற்றத்திற்கு உழைத்தல் இன்னொருவிதத்தில் சிங்கள தேச தமிழீழ நீண்ட நிலையான நட்புறவுக்கு அவசியமானது. இங்கே சிங்கப்பூர் போன்ற ஸ்ரீலங்காவை உருவாக்குவது என்ற ஆசை வார்த்தைகளின் ஊடக தமிழீழம் அழிக்கப்படுகின்றது என்ற ஆபத்தையும் ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து இவ் விடயத்தில் மிகவும் கருத்துணர்வுடன் செயலாற்றுதல் அவசியமானது.

தமிழீழத் தேசியத் தலைவர் விரும்பியது போன்று பிராந்திய வல்லரசான இந்தியாவுடன் தமிழீழத்தின் இணைபிரியா நட்புறவைக் கட்டிவளர்ப்பது இன்று மட்டுமல்ல என்றும் அவசியமானது. இதில் இந்தியாவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் 1987இல் ஏற்பட்டது போன்றதொரு முரண்நிலை மீண்டும் வரலாற்றில் மீள நிகழாமை என்ற அடித்தளத்தில் உறவுகள் கட்டி அமைக்கப்படுத்தல் வேண்டும். இதை இருதரப்பும் புரிந்து செயலாற்றுவதே இந்திய உபகண்ட ஒருமைப்பட்டிற்கும் வளர்ச்ச்சிக்கும் நீண்டகால வரலாற்று நல்உறவிற்கும் அவசியமானது.

இந்தவகையில் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளுடனும், இந்தியப் பிராந்திய வல்லரசுடனும் விரிவான அரசியல் இராசதந்திர உறவுத்தளத்தில் அரசியல் உறவுகளை ஏற்படுத்தும் தமிழீழம், தனக்கான சிறப்பான வெளிவிவகாரக் கொள்கையின் வெளிப்பாடுகளின் ஊடக தனித்துவமான அரசியல் இராசதந்திரக் கட்டுமான வடிவத்தினை உருவாக்கி உலக நாடுகளின் உறவையும் பேணி தமிழீழத் தனி அரசுக்கான அங்கீகாரத்தைப் பெறுதல் வேண்டும்.

மேற் கூறப்பட்ட தமிழின அழிப்பை சர்வதேச மயப்படுத்தி அதற்கான பரிகாரநீதி என்ற போராட்ட வடிவமும், அரசியல் இராசதந்திர சமகால, எதிர்கால உறவுகள் என்ற அடிப்படையிலான அரசியல் விடுதலைப் போராட்ட அணுகுமுறை வடிவமும் மிக முக்கியமான செயற்பாடுகளாக இருக்கின்ற அதேவேளை தமிழர்கள் என்றால் யார் தமிழர்கள் ஏன் போராட ஆரம்பித்தனர், தமிழர்களின் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலான போராட்ட வரலாற்றில் உள்ள நியாயப்பாடுகள் என்ன என்பவற்றையும் இவ்வுலகிற்கு எடுத்துச் சொல்லி. இதில் அவர்கள் எங்கே தமிழர்களின் நியாயப்பாடுகளை புரியத் தவறினார் என்பதையும் தமிழர்களால் ஏன் அவர்களுக்கு அதனை அன்று புரியவைக்க முடியவில்லை என்ற நியாயப்பாட்டினையும் எடுத்துரைத்து பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் தமிழருக்கு எதிரான போலிப் பரப்புரைகளை அப்பாவிச் சிங்கள மக்கள் இடத்திலும், பிராந்திய உலக வல்லரசுகள் இடத்திலும், ஏனைய உலகநாடுகள் இடத்திலும் ஒரு தொடர் கட்டமைப்பு வடிவமாக எடுத்துரைத்தல் மிகவும் அவசியமானது.

மேற் கூறப்பட்ட விடயங்களை இன்று தமிழீழத்தின் விடுதலைக்காகவோ அல்லது நிரந்தர இருப்பிற்காகவோ போராடும் தமிழ் அமைப்புக்களோ அல்லது தனிமனிதர்களோ கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ஒழுங்குமுறைப்படுத்திச் செயலாற்றினால் தமிழீழ விடுதலை என்பது இவ்வுலகில் சாத்தியமே.

கேள்வி: ஒன்பது பகுதிகளைக் கொண்ட இத்தொடர் நேர்காணலை இத்துடன் நிறைவு செய்ய விரும்புகிறேன். அந்தவகையில் இதன் இறுதிக் கேள்வியாக இன்றைய அரசியல் கொதிகளத்தில் தமிழர் தாயகத்தின் இருப்பைப் பாதுகாக்கும் நோக்குடன் அனைத்துத் தமிழ்த் தரப்பினரும் செய்ய வேண்டிய பிரதானமான, சம முக்கியத்துவம் கொண்ட விடயங்களென நீங்கள் எவற்றைக் கருதுகின்றீர்கள்?

பதில்: நல்லது இதுவரையில் கடந்த சில தொடர்களாக என்னிடம் பல கேள்விகளைக் கேட்டுள்ளீர்கள் அதற்கான எனது கருத்துக்களை ஒளிவுமறைவின்றி இன்றைய நிலையில் நான் எவற்றை கருதுகின்றேனோ அவற்றை அவ்வாறே கூறியுள்ளேன்.

அந்தவகையில் இந்தக் கேள்விக்கான பதிலாக இதற்கு முதற் கேள்வியில் கூறிய பதில் உட்பட ஒரு நான்கு விடயங்களை பதிலாகப் பதிவாக்க விரும்புகிறேன்.

1. தேர்தல் அரசியலில் ஈடுபடும் அனைத்துத் தமிழ்தேசியக் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் எனத் தேர்தலில் போட்டியிடும் அனைவருக்கும், தமிழர்களாகிய நாம் அனைவரும் அவரவர் கொள்கைப்பற்றுக்கு ஏற்ப, அவர்களின் வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் வாக்களித்து ஊக்குவிப்பு வழங்குவதுடன், தமிழ்த் தேசியக் கட்சிகளும், கட்சிகளின் செயற்பாடுகளும் வலுப்பெற ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும். 

ஏனெனில், தமிழர் தாயகம் எங்கிலும் சரியான மற்றும் பலமான கட்சி அரசியல் கட்டுமானங்களும், அவற்றின் வலுவான வலையமைப்புக்களும் விரிவாக்கம் பெறுவதே தமிழர் தாயகத்தின் இருப்பிற்கு அவசியமானது.

2. தேர்தல் மற்றும் கட்சி அரசியல் முரண்பாடுகளைக்கடந்து, இன்றைய சிங்கள, இந்திய, உலக அரசுகளுடனான பேச்சு வார்த்தைகளில் அனைத்துத் தமிழ்த் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்களும், ஏனைய தேர்தல் வழி மக்கள் பிரதிநிதிகளும், ஏனையோரும் தமிழ்த் தேசியப் பற்றுடன், புரிந்துணர்வுகொண்டு பங்குபற்ற ஊக்குவிப்புவழங்குதல் வேண்டும்.

ஏன் எனில், சாத்வீக அரசியல் விடுதலைப் போராட்டம் என்பது சட்டங்களின் அடிப்படையிலான நீதிகோரல்களாகவும், உரிமைகளின் அடிப்படையிலான போராட்டவடிவங்களாகவும் விளங்குகின்றன. இத்தகைய விளைவுகளால் ஏற்படும் பேச்சுவார்த்தைகளே அரசியல் வெற்றிக்கு இறுதிவடிவம் கொடுக்கின்றது. எனவே பேச்சு வார்த்தைக்கான சூழல்கள் ஏற்படும் போதெல்லாம் அதனை எமக்குச் சாதகமாக ஆக்குவதன்மூலம் எமக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். பேச்சுவார்த்தைகள் எமக்கான சூழ்ச்சிப்பொறிகளாக அமையும்போது அதனை மக்கள்முன் தோலுரித்து அதில் இருந்து வெளியேறுவதோ அல்லது அவ்வாறான பொறிகளில் சிக்கிவிடாது தோலுரித்து, பேச்சு வார்த்தைகளில் தொடர்ந்தும் வீட்டுக்கொடுப்பற்ற தீர்வுகளைக்கான முயல்வதோதான் அரசியல் வெற்றியின் இறுதிவடிவம்.

3. தேர்தல் அரசியலில் ஈடுபட விரும்பாத சிவில்சமூக அமைப்புக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை மட்டுமேகொண்ட சிவில்சமூக வலையமைப்பு ஒன்றை வளர்த்தெடுத்து, தேர்தல் அரசியல் தலைமைகளையும், அரச நிர்வாகக் கட்டுமானங்களையும், தமிழ்த் தேசிய இருப்பையும், சமூக - பொருளாதார மேம்பாட்டை யும், உரிமைப் போராட்டங்களையும் பக்கச்சார்பின்றி தமிழ்த்தேசியச் சிந்தனையுடன் வழிநடத்த வல்ல கட்டுமானம் ஒன்றைச் செயற்திறன் பெறவைத்தல் வேண்டும்.

ஏனெனில், தேர்தல் அரசியலின் ஊடே தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகளும், அரச ஊழியர்களும் ஸ்ரீலங்காவின் சட்ட விதிமுறைகளை அதிகம் மீற முடியாதவர்களாகவும் சிங்களப் பெரும்பான்மை இனத்தின் பாராளுமன்றச் சட்ட, திட்டங்களை அதிகம் நிறைவேற்றவேண்டிய கடப்பாடு கொண்டவர்களாகவும் இயங்கவேண்டி இருப்பதால், இவ்வாறான அழுத்தங்களுக்கு அதிகம் அடிபணியாது தமிழ்மக்களின் உரிமைக்குரலை ஸ்ரீலங்கா அரசிற்கும், சர்வதேச நாடுகளுக்கும் அழுத்திக்கூறக்கூடிய ஒரு மக்கள் கட்டுமானமாக இது இருக்கமுடியும் என்பதால், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிக்களுக்கும், அரச ஊழியர்களுக்கும் கூட இவ்வாறானதொரு சிவில்சமூகக் கட்டுமான வலையமைப்பொன்று அவசியம் ஆகின்றது.

4. தமிழின அழிப்பில் இருந்து தமிழர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச நீதிப்பொறிமுறை, நடந்துமுடிந்த ஆயுத ரிதியிலான விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை எடுத்துரைத்தல், பிராந்திய - சர்வதேச அரசியல் இராசதந்திர உறவுகளைக் கட்டிவளர்த்தல் போன்ற அணுகுமுறைகள் ஊடே உலகநாடுகள், பிராந்திய மற்றும் சர்வதேசக் கூட்டுக்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பொறிமுறைகள் என அனைத்து வழிகளையும் அணுகி தமிழர் தாயகத்தின் உரிமைகளை வென்றெடுத்தல் வேண்டும். 

ஏனெனில், தமிழர்களின் உரிமைப் போராட்டம் என்பது தமிழின அழிப்பில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்கவே உருவாக்கம் பெற்றது என்பதை இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா உட்பட உலகின் முன் நியாயப்படுத்தத் தவறும் வரை தமிழர்களின் விடுதலை சாத்தியம் இல்லை என்பதையும், அதுபோலவே தமிழின அழிப்பு தமிழருக்கு நடந்தது என்பதை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச் சமை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், பொதுச் சபை மற்றும் பாதுகாப்புச் சபை போன்றவற்றிக்கு கொண்டுசெல்லத் தவறும் வரை தமிழர்களின் விடுதலை சாத்தியம் இல்லை என்பதையும், அது மட்டும் அன்றித் தமிழர் தேசம் இந்திய தேசத்துடனும், பிராந்திய - சர்வதேசக் கூட்டுக்களுடனும், உலகநாடுகளுடனும் தமிழர் தேசத்தின் எதிர்கால உறவுநிலைகளைத் தமிழர் வரலாறு மற்றும் வாழ்வியல் ஊடாகவும், எதிர்காலம் சார்ந்த சொல் மற்றும் செயல்களின் ஊடாகவும் எடுத்தியம்பி, உலக நாடுகளின் ஆதரவைப் பெற்று, ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றாவது மற்றும் நான்காவது குழுக்களில் உள்ள பொறிமுறைகளின் ஊடகத் தமிழர் தேசத்தைப் பாதுகாக்கும் அரசியல் இராசதந்திர போராட்ட வழிமுறைகளில் நம்பிக்கைகொண்டு செயலாற்றுவதே தமிழர்களின் விடுதலை சாத்தியமாக்கும் என்பதைத் தமிழர்கள் உணர்ந்து செயலாற்றுதல் வேண்டும்.

நன்றி.

(ஒன்பது தொடர்களைக்கொண்ட நேர்காணல் இத்துடன் நிறைவடைகின்றது)

இத்தொடர் தொடர்பாக ஏதேனும் கருத்துக்கள் தெரிவிக்க விரும்புபவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளலாம். 

நன்றி.

(ஒன்பது தொடர்களைக்கொண்ட நேர்காணல் இத்துடன் நிறைவடைகின்றது)

இத்தொடர் தொடர்பாக ஏதேனும் கருத்துக்கள் தெரிவிக்க விரும்புபவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளலாம். 

tamilvisions2023@gmail.com