தமிழீழ அரசியல்துறை பிரித்தானியாவில் மீள் உருவாக்கம்
தமிழீழ அரசியல்துறை பிரித்தானியாவில் மீள் உருவாக்கம்
பிரித்தானிய அரசை அதிரவைக்கும் புதிய திருப்புமுனை.
2009 மே 18 தமிழர் விடுதலை போராட்டத்தின் ஆயுத அமைதியின் பின்னர், தமிழ் மக்களுக்கான அரசியற்தலைமையாக செயற்பட்டு வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் செயற்பாடுகளும் முடக்கத்திற்கு போயிருந்தன.
தாயகத்தில் விடுதலைக்காக போராடியவர்கள் மீதான கைதுகளும், கடத்தல்களும், அச்சுறுத்தல்களும், புலனாய்வாளர்களின் கண்கானிப்புகளும் இன்று வரை தொடர்வதை நாம் அவதானிக்கின்றோம்.
புலம் பெயர் தேசங்களிலும் தமிழரின் அரசியல்துறை செயற்பாடுகள் பல்வேறுபட்ட அமைப்புகளாலும்,
தனி நபர்களாலும் முன்னெடுக்கப்பட்டுவரும் போதும், அவை ஒருங்கிணைந்த வகையில் பலம் பெற்ற தமிழர் அரசியல் சக்தியாக உணரப்பட முடியவில்லை.
மாறிவரும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கேற்ப தமிழினமும் தனது அரசியல் பரிணாமத்தை மீள் உறுதி செய்வதன் முலமே தமிழினத்தின் விடுதலையை வென்றெடுக்க முடியும்.
இதுவே இன்று பலராலும் முன்வைக்கப்பட்டுவரும் கருத்தாகும்.
இதனை நன்குணர்ந்தே தமிழீழ விடுதலைக்காக செயற்பாடுகளில் முன்னின்று உழைத்தவர்கள், அரசியல்துறையின் செயற்பாடுகளை விரிவாக்கம் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே கடந்த வெள்ளிக்கிழமை 07/04/2023 அன்று பிரித்தானிய நாட்டில் தமிழீழ அரசியல்துறையின் செயற்பாடு புது விரிவாக்கம் பெற்றுள்ளது.
பெருமளவான போராளிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் விடுதலைப் பற்றுறுதியாளர்கள் இணையவழி நேரமர்வில் ஒன்றுகூடி தமிழீழ அரசியல்துறையை வலுப்படுத்தியுள்ளனர். அதேவேளை அரசியல் பணிகளுக்கான புதிய பொறுப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழீழ அரசியல்துறையை வலுப்படுத்தி இணைந்து பணியாற்ற முன்வருமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழரின் நீதிகோரிய போராட்டங்களில் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழ் உறவுகளின் போராட்டம் எழுச்சிபெற்று வருவதானது
பன்னாட்டு அரச தரப்புகளிடம் தமிழரின் தேச விடுதலைக்கான அவசியத்தையும் நியாயத்தையும் வெளிப்படுத்தி நிற்கிறது.
தமிழீழ அரசியல்துறை பிரித்தானிய நாட்டில் வலுப்பெற்றுள்ளதால் இனி வரும் நாட்களில் பிரித்தானியாவில் இடம்பெறும் முக்கிய அரசியல் விவகாரங்களில் தமிழர் சார்பான திருப்பங்களை ஏற்படுத்த வல்ல தரப்பாக தமிழீழ அரசியல்துறை இயங்கும் எனும் புதிய நம்பிக்கை உதயமாகியுள்ளது.
தமிழீழ அரசியல்துறையின் பிரித்தானியாவுக்கான பொறுப்பாளராக போராளி வீரன் அவர்களும்
நிர்வாக பொறுப்பாளராக போராளி வீரப்பன் (தாஸ்) அவர்களும்
நியமிக்கப்பட்டு அவர்களுடன் இணைந்து அரசியல் பணிகளை முன்னெடுக்க பல போராளிகளும் தயாராகியுள்ளனர் என்பதனை தமிழீழ அரசியல்துறையின் சர்வதேச ஊடகப் பொறுப்பாளர் போராளி சங்கீதன் அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரித்தானிய தமிழ்மக்கள்
மற்றும் பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் உரிமைகளுக்காக போராடிவரும் அமைப்புகள்,குரல்கொடுத்துவரும் புத்திஜீவிகள் மற்றும் ஊடகத்தினர் அனைவரும் எதிர்வரும் காலங்களில் அலுவலக ரீதியாக தமிழீழ அரசியல்துறையினரை தொடர்புகொள்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுவருவதாக அறியமுடிகிறது.
“இலட்சிய வேங்கைகள் இறப்பதுமில்லை
விடுதலைப் புலிகள் வீழ்வதுமில்லை.”