வெளிச்சம் கருணா(கரனின்) கருமை

வெளிச்சம் கருணா(கரனின்) கருமை

புலிகளின் தியாகம் புலிகளின் ஈகம் புரியாத ஆனால் அவர்களோடு வாழ்ந்து தன் சாவை பற்றிய அச்சமில்லாமல் வெளிச்சம் இதழோடு குப்பை கொட்டிய கருணாகரன் 
 கருணாவின் துரோகத்தை விடக் கொடிய துரோகத்தை செய்திருக்கிறார் தமிழினத்துக்கு. 
தம்மை ஒரு நடுநிலை வாதியாக இந்த உலகத்துக்கு காட்டி தன் எஞ்சிய காலத்தையும் சுகமாக வாழ முயல்கிறார். 
தலைவர் தனிமனிதராக அனைத்தையும் சாதிக்கவில்லை. அங்கே போராளிகளதும் மாவீர்களதும் மக்களதும் அர்ப்பணிப்பின் வடிவம்தான் பிரபாகரன். 
சிங்களவனும் உலக ஏகாதிபத்தியமும் தலைவரையும் தமிழினத்தின் வீரியமிக்க புலிகளையும் மக்களையும் கொன்றார்கள்.  நீர் தமிழினத்தின் போராடும் குணத்தையே கொன்றுவிட்டீர். 

போராளியாக வாழ்வதென்பது எவ்வளவு அற்புதமான வாழ்வு தெரியுமா உமக்கு. அவ்வளவு ஆத்மார்த்தமான வாழ்வு வாழ்ந்த தலைவரையும் போராளிகளையும் மக்களையும் இழிவுபடுத்தி எழுத உமக்கு எப்படி முடிந்தது? முப்பத்தெட்டு வருடங்கள் நீர் எதை சாப்பிட வேண்டும் எதை எழுத வேண்டும் எங்கே சென்று வரவேண்டும் என்று நீரே தீர்மானிக்கும் அதிகாரத்தை உமக்கு தெரியாமலே தந்திருந்தவர் பிரபாகரன். தமிழைத் தெரியாதவனுக்கு எல்லாம் அவரை தெரியும்.

இன்று தமிழர்களின் முடக்கத்துக்கு உம் போன்ற துரோகிகளது எழுத்துக்கள்தான் காரணம். நீர் சொல்லுவது போல பிரபாகரன் ஒரு சாதாரண மனிதனாக இருந்திருந்தால் அப்படி ஒரு சொல் சொல்லி இருந்தால் இன்று இலங்கை என்ற தேசமே இல்லாமல் போயிருக்கும் .
தனக்கு பின்கூட தன் இனம் விழுமியங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில்  அவர் எல்லாரையும் கட்டிப்போட்டு விட்டார். இன்றுவரை அதை யாரும் மீறவில்லை. அவரை யாரும் புகழத்தேவையில்லை. இகழாதீர். எனக்கு எவ்வளவோ எழுதத் தோன்றுகிறது . உம்மை நினைத்து வரும் கோபத்தை விட. தலைவரை எண்ணி அழுகைதான் வருகிறது. நீர் பார்த்த அந்தச் சூழலில் தான் நாம் வாழ்ந்தோம். உம்மைவிட அதிகம் நாங்கள் போராளிகளாக வாழ்ந்தோம். நீர் இழந்ததை விட நாங்கள் அதிகம் இழந்தோம். எங்களுக்கு சிங்கள சிறைக்குள்ளும் சிக்கி சீரழிந்தோம்.உம்மளவுக்கு தரங்கெட்டுப்போகவில்லை. எந்தவொரு இடத்திலும் தலைவரை நாங்கள் தரங்குறைத்ததில்லை. நீர் கொடுமைப்படுத்தப்பட்டதாக எழுதிய மக்கள்தான் இன்னும் புலிகளைப் பூசிக்கிறார்கள். 
அரசியலில் நீங்கள் இருந்து கிழிச்சதால்தான் இன்று தமிழருக்கு இந்த நிலை. நீங்கள் எழுதி எழுதி உருவாக்கிய அரசியல் புரட்சிதான் காலம் எமக்கு தந்த தலைவனை இழக்கச் செய்தது. அவர் உங்களை எல்லாம் நம்பி தந்ததை நீங்கள் புடுங்காமல் விட்டுவிட்டு இப்போது புலமை காட்டுகிறீர்களா? புலிகளின் போராட்டத்தால் கட்டியெழுப்பிய ஈழ சாம்ராஜ்யத்தின் பிரசைகளை அரசறிவியலில் இராஜதந்திர நகர்வுகளில் வளர்த்து எடுக்க வேண்டிய நீங்கள் என்ன புடுங்கினீர்கள்.  அவருக்கும் இயற்கை இருபத்துநான்கு மணித்தியாலங்கள் தான் கொடுத்திருந்தது. அவர் எவ்வளவு சுமைகளை தாங்குவது. 
2007 இல் எங்களுக்கு அவர் கூறி வருந்தியது " சமாதான காலத்தில் தனக்கு திறமையானவர்களை யாரும் இனங்காட்டவில்லை. நான் என்னிடமிருப்பவர்களை எல்லா இடங்களுக்கும் அனுப்புவதால் எனது வேலைகள் தேங்கிக் கிடக்கின்றன என்று. ஒரு போராடும் இனத்தை சகல நாடுகளின் எதிர்ப்பிலும் பொருளாதார தடைகளின் மத்தியிலும் வழிநடத்துவது எவ்வளவு கடினமான விடயம் என்பது உமது மண்டைக்கு விளங்கவில்லையா? அங்கே அருகில் இருந்த நீங்களே இவ்வளவு பன்னாடைகளாக புரிந்து கொண்டு இருந்தால் அந்த புரிதலில் இருந்து நீங்கள் எழுதிக் கிழிச்சதை வாசித்து உணர்வு பெற்ற புலம்பெயர் நிர்வாகிகளை நோவது எங்கனம்?

அவர் போராளிகளுக்கு தனி மனித ஒழுக்கங்களில் போட்ட கட்டுப்பாடுகளை விட வேறு எதில் கட்டுப்படுத்தினார்? அவர் என்ன கடவுளா ? 
நீங்கள் உங்கள் கடமைகளை செய்யாமல் விட்டதால் தானே உண்மை வீரர்களை தமிழ்த்தாய் இழந்திருக்கிறா. அந்த மனிதருள் மாணிக்கம் இள வயதில் இருந்து எவ்வளவை உருவாக்கி தந்திருந்தார். 
ஒவ்வொன்றும் நீங்கள் அமைதியாக இருந்து யோசித்து பாருங்கள். அங்கு நடந்தவைகள் உங்கள் எழுத்துக்களில் உங்களை கள் வடிக்கும் பன்னாடை எழுதியது . உங்கள் ஆழ்மனதில் உங்கள் உண்மையில் இருந்து கவனியுங்கள். அதன்படி மீண்டும் எழுதுங்கள். இவையே நேரெதிராக எழுதுவீர்கள். உங்கள் மீது கோபம் வரவில்லை. இறந்தழிந்த அத்தனை ஆன்மாக்களின் சாட்சியாக அழுதுகொண்டே எழுதுகிறேன். தமிழர்களை நீங்கள் வஞ்சிக்காதீர்கள். புலிகளைக் கொச்சைப்படுத்தாதீர்கள். நாங்களும் இரண்டரை வருடங்கள் சிறையில் இருந்திருக்கிறோம். எமக்கு புலிகளையோ தலைவரையோ தவறாக கூற எந்த அவசியமும் எழவில்லை. சிங்களவர்களே அவரைப் புகழ்ந்தார்கள். நானே றொகான் குணரட்ணவிடம் நேரடியாகவே கூறியிருக்கிறேன். அவரை நாங்கள் மட்டும் அல்ல நீங்களும் இழந்து விட்டீர்கள் என்று. 
ஒன்றை மட்டுமே மனதில் இருத்திக் கொள்ளுங்கள். நீங்கள் நாங்கள் எல்லோரும் இன்னும் உயிர்வாழ்வது அங்கு இறந்துபோனவர்கள் எமக்கு அளித்த பிச்சை. அவர்கள் இங்கிருந்து தப்பிச் சென்று நடந்த உண்மைகளை தியாகங்களை வீரத்தை சொல்லுங்கள் உலகத்திடம் இல்லை. எம்மை நம்பியிருந்த தமிழர்களுக்கு சொல்லுங்கள் என்றே எம்மை அனுப்பி வைத்தார்கள். எம்மை அவர்கள் நம்ப மாட்டார்கள் என்று எங்களுக்கும் தெரியும். ஆனாலும் நாங்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். நீங்கள் நிறையவே விடயங்களை எழுதியிருக்கிறீர்கள். ஆனால் எமது தர்மத்தோடு இல்லை. 

போரின் முடிவில் சிறைக்குள் எனக்கு இருந்த கேள்வி ஒன்றே. எமது போராட்டம் வீரம் தர்மம் அர்ப்பணிப்பு தியாகம் எல்லாமே நிறைந்தது ஆனாலும் ஏன் தோற்றது என்றது மட்டுமே. இரண்டரை வருடங்களாக அதன் விடையை மட்டுமே தேடினேன். 
சிறையில் தேடி தேடி நான் கண்டுபிடித்தது. ஒன்றே. எங்கும் எல்லாம் பிரபாகரன் பிரவாகம் மட்டுமே. தமிழினம் முழுவதும் அவருக்கு துரோகம் இழைத்து விட்டது. பிரபாகரனை தலைவனாக ஏற்க தமிழினத்துக்கு தகுதி இல்லை. அதனால் இயற்கை அவரை மீண்டும் தன்னோடு அழைத்துக்கொண்டது. 
அவரை மீண்டும் எம்மிடம் தமிழன்னை தரக்கூடிய அனைத்தையும் தமிழன் செய்தாக வேண்டும். அதற்கு முன் அந்தத் தலைவனின் எஞ்சிய கதிர் களை தமிழர்கள் பாதுகாத்து அவர்களிடமிருந்து எதையெல்லாம் கற்றுக்கொள்ள முடியுமோ அவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் முள்ளிவாய்க்காலில் நடேசன் அவர்களிடம் தலைவர் கூறியிருக்கிறார். 
புதிய ஆட்களை வைத்து சண்டையை செய்யுங்கள் பழையவர்களுக்கு வேறு வேலை இருக்கிறது அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று. இதுதான் அண்ணை. அவர் உங்களை எல்லாம் பாதுகாத்தது எதற்காக என்பதை புரிந்து செயற்படுங்கள்.

சிவனந்தன்