அண்ணாமலை வருகையும் உறவும் முரணும்

அண்ணாமலை வருகையும்  உறவும் முரணும்

கேள்வி: 24 ஜுன் 2023 இல் பிருத்தானியா வரும் அண்ணாமலை அவர்களின் வருகை பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: தற்போது இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் ஒருவர் தமிழ் அமைப்புக்களால் பிருத்தானிய அழைக்கப்படுவது ஆரோக்யமானதே. ஆனால் அவர் பிருத்தானியா வந்து என்ன செய்யப் போகின்றார் என்பதிலேயே அவர்சார்ந்த விமர்சனங்களை முன்வைக்க முடியும்.

வேண்டும் என்றால் அவர் பிரித்தானியா வந்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சில அறிவுரைகள் கூறலாம். ஆனால் அவை அவரை அழைக்கும் அனுபவம்மிக்க தமிழ் அமைப்புக்களின் நோக்கத்தை பதிப்படையச் செய்யலாம் எனவே தமிழீழத்திற்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும், அண்ணாமலைக்கும், அவரது கட்சிக்கும், அவரை அழைப்பவர்களுக்கும் நன்மை தர வேண்டும் என விரும்புகிறேன்.

இது அவருக்கான வரவேற்பு மட்டும் அல்ல தமிழ்நாட்டில் இருந்து எந்தக் கட்சித் தலைவர்களை தமிழீழத்தை நேசிக்கும் எந்தவொரு அமைப்பினர் அழைத்தாலும் எனது வரவேற்பு இப்படியானதாகவே இருக்கும்.

ஏன் என்றால் கட்சி பேதங்களைக் கடந்து தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சியினர் இடத்திலும் தமிழீழ அமைப்புக்கள் நல்லுறவைக்கொண்டிருத்தல் வேண்டும். இதுவே தமிழ்நாட்டின் ஆதரவைத் தமிழீழ மக்களுக்கு என்றும் பெற்றுத்தரும் என்பது எனது நம்பிக்கை.

கேள்வி: நீங்கள் இந்தியாவை கண்முடித் தனமாக நம்புகிறீர்களா?

பதில்: இல்லை, இந்தியா மீண்டும் ஒருமுறை எங்களை ஏமாற்றக் கூடாது என்பதை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதிலும் அதே நேரம் இந்தியாவுடன் பகையுணர்வை மாற்றி நல்லதோர் நட்பு நாடாக, தமிழீழத்தின் இணைபிரியா பங்காளியாக, பாதுகாவலனாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதிலும் விருப்பம் கொண்டுள்ளேன்.

இது ஒருதரப்பு நினைத்து ஒருபோதும் வரப்போவதில்லை அண்ணாமையின் வருகை இதற்கு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தினால் மிக்க மகிழ்ச்சியே.

கேள்வி: ஸ்ரீலங்கா அரசாங்கம் 13 ஆம் திருத்தச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப் படுத்தி, வடக்கு, கிழக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி, மாகாண சபைகளை காணி, காவல்த்துறை அதிகாரம் கொண்ட வலுவான மக்கள் ஆட்சி அதிகாரக் கட்டமைப்புக்களாக உருவாக்க வேண்டும் என்று ஒரு சாரார் இந்தியாவிடமும், ஸ்ரீலங்காவிடமும், உலகிடமும் கோரிக்கை வைக்கின்றனரே இது சார்ந்து உங்கள் கருத்து என்ன?

பதில்: நல்ல விடயம் நடைமுறைப் படுத்தச் சொல்லுங்கள்.

கேள்வி: தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் ஏற்கமறுத்து எதிர்த்துப் போராடிய அரைகுறைத் தீர்வான - இந்தியாவின் நலனுக்காக ஈழத் தமிழர்களை தமிழீழத்தில் இருந்து படிப்படியாக இன அழிப்புச் செய்யும் சதி நடவடிக்கையான 13 ஆம் திருத்தச் சட்டத்தை நீங்கள் ஏற்க்கொள்ள விரும்புகிறீர்களா?

பதில்: தமிழீழத் தேசியத் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் நான் இந்தத் தீர்வை நடைமுறைப் படுத்துமாறு கூறியிருக்க மாட்டேன்.

கேள்வி: தலைவர் வீரச்சாவு அடைந்து விட்டார் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்: நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைத்துமே விதண்டாவாதம் ஆனவை.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தமிழீழ மக்கள் மத்தியில், உலகத் தமிழர்கள் மத்தியில், இன்னும் உறுதியாகச் சொல்வதாயின் விடுதலைக்காகப் போராடும் ஒவ்வொரு மானிடர் மத்தியில் - சாவில்லாமல் வாழும் விடுதலை வழிகாட்டியாக இருப்பார் அல்லது இருக்கிறார் என்பதே எனது நம்பிக்கை.

கேள்வி: தலைவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கை கொண்டிருக்கும் நீங்கள் 13 ஆம் திருத்தச் சட்டதை நடைமுறைப் படுத்துமாறு கோரலாமா?

பதில்: தமிழீழத் தேசியத் தலைவர் நடத்தியது ஆயுத விடுதலைப் போராட்டம். கடந்த பதினான்கு ஆண்டுகளாக நாங்கள் நடத்துவது சாத்வீக அரசியல் போராட்டம்.

அன்று இந்திய - இலங்கை ஒப்பந்தமும் 13 ஆம் திருத்தச் சட்டமும் எழுச்சிக்கொண்ட எமது ஆயுத விடுதலைப் போராட்டத்தை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலை இருப்பை இல்லாது அழிக்கும் நடவடிக்கையாகவே அது இருந்தது எனவே தான் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அதனை எதிர்த்தார்.

இன்று நாம் நடத்துவது சாத்வீக அரசியல் விடுதலைப் போராட்டம் எனவே 13 ஆம் திருத்தச் சட்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கூறுவது இனவாத ஸ்ரீலங்கா அரசின் செயற்பாடுகளின் மத்தியில் படிமுறை படிமுறையான அரசியல் போராட்ட வளர்ச்சிவடிவமாகவே அது இருக்கும்.

கேள்வி: தமிழர்களில் ஒருசாரார் இதனை இடைக்காலத் தீர்வு என்கின்றனர், இன்னொரு சாரார் ஆரபத் தீர்வு என்கின்றனர், வேறு சில சாரார் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் சவக்குழி இது தீர்வே இல்லை சதிச் செயல் என்று சொல்கின்றனரே இதில் நீங்கள் எந்தரகம்?

பதில்: நண்பனோ, பகைவனோ எனக்கு பிடிக்காத அல்லது எனது வாழ்வைப் பாதிக்கக் கூடிய செயலை என்னுடன் உரையாடமல், எனது உடன்பாடு இல்லாமல் மேற்கொள்ளும்போது அவன் நடைமுறை எதிரி ஆகின்றான். அந்தவகையில் நாங்கள் நண்பனாக நம்பிய இந்திய 1987இல் எமது எதிரியாகியது.

இந்தியாவே எங்கள் எதிரியா? அன்றைய இராஜீவ்காந்தி அரசு தான் எங்கள் எதிரியா என்றால் இராஜீவ்காந்தி அரசே எங்கள் எதிரி ஆகியது.

இராஜீவ்காந்தியின் சாவில் தமிழீழத் தேசியத் தலைவர் பெருமிதம் கொண்டாரா என்றால்? அதனை ஒரு துன்பியல் நிகழ்வு என்பதன் மூலம் அதனை அவர் வரவேற்கவில்லை என்பதை உணர முடிகிறது.

இராஜீவ்காந்தியின் இறப்பின் பின்னரும் அவரது இழப்பால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய மக்களுடனும், இந்திய ஆட்சியாளர்களுடனும், அவரது கட்சியான காங்கிரஸ் கட்சியினருடனும், சோனியகாந்தி உட்பட அவரது குடும்பத்தினருடனும் எதிர்ப்புணர்வு இல்லாத உறவை ஏற்படுத்தவே தமிழீழத் தேசியத் தலைவர் விரும்பினார் என்பது வரலாறு.

13 ஆம் திருத்தம் தான் தமிழர்களின் இறுதித் தீர்வு என்றால் இன்றும் இது சவக்குழியே. அவ்வாறு இல்லாமல் இருக்கும் இடத்தில் இது ஒரு அரைகுறைத் தீர்வே.

கேள்வி: அரைகுறைத் தீர்வு என்றால் அதை எதிர்ப்பது தானே சரி?

பதில்: சிறையில் இருக்கும் ஒருவர் சிறையை உடைத்து வெளியேறும் போராட்ட முனைப்பு உள்ளவனாக இருந்தால் நீதி மன்றங்களின் ஊடக விடுதலையை வேண்டி நிற்கவேண்டிய அவசியம் இல்லை. சிறையை உடைத்து வெளியே வந்தபின் நான் சுதந்திரமான மனிதர் என்பதை நீதிச்சபையின் முன் உறுதிசெய்தல் போதுமானது.

குற்றமற்ற நான் சிறையை உடைத்து வெளியேறுவது என்பது நாங்களே எங்களுக்குப் பெற்றுக்கொள்ளும் நீதி. நீதி மன்றங்களின் ஊடே வெளியேறுவது என்பது பிறிதொருவர் எங்களுக்கு வழங்கும் நீதி.

இன்று நாம் எங்களுக்கான நீதியை பிராந்திய வல்லாதிக்க சக்தியான இந்தியாவிடமும் ஏனைய உலக நாடுகளிடமும் உலக நீதிச்சபைகளிடமும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

நீதிச்சபைகளின் முழுமையான விடுதலை என்ற தீர்ப்பு எப்போது கிடைக்கும் என எங்களுக்குத் தெரியாது. அதுவரை திறந்தவெளிச் சிறையில் உயிர் வாழ்வதற்கான சலுகைகளைப் பெறுவதே 13 ஆம் திருத்தச் சட்டம் போன்ற அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வது.

இது 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துமாறு கோருவது மட்டும் அல்ல பெளத்தமத ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டம், அரசியல் கைதிகள் விடுதலைக்கான போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரும் போராட்டம், போர்க்குற்றம் செய்த சிங்களப்படைகளுக்கு தண்டனை வழங்குவதற்கான போராட்டம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடைகளை அகற்றுவதற்கான போராட்டம் என அனைத்துமே தனித் தனியே பார்த்தல் அரைகுறை அரைகுறைத் தீர்வுகளை அடைவதற்கான போராட்டங்களே.

இவற்றுக்கான தீர்வுகளை ஸ்ரீலங்கா வழங்குபோது தமிழர்களின் இறைமைகொண்ட தமிழீழத்திற்கான கோரிக்கை உலக அரங்கிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் பலவீனப் படுத்தப் படுவதுடன் இறுதி அரசியல் தீர்வை சிதைக்கும் கோரிக்கை வடிவங்களாகவே அமையும்.

எனவே 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவது உட்பட மேலே கூறிய அனைத்துவிதமான கோரிக்கைகளும் கடந்த பதினான்கு ஆண்டுகளில் அதிகளவு சிங்கள அக்கிரமிப்பிற்குள் உள்ளாக்கப்பட்டுள்ள தமிழர்களைப் பாதுகாக்கவும் - தொடர்ந்தும் நீதிக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒரு சிறிய சுதந்திரமான வெளியை உருவாக்கவும் முடியும் என்பதால் இவற்றை எதிர்ப்பவர்களைக் காட்டிலும் இவற்றை தீர்வுகளாக நடைமுறைப் படுத்துமாறு கூறுபவர்களே அரசியல் விடுதலைப்போராட்டத்தின் படிமுறை வெற்றியின் அணுகுமுறை கொண்டவர்களாக இருக்க முடியும் என்பதே எனது கருத்து.

கேள்வி: மக்கள் ஆதரவு 13 ஆம் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு ஆதரவாகத் தானே உள்ளது ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தலைமையில் எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிப்புப் போராட்டத்தில் பெருமளவு மக்கள் பங்குபற்றியதும் இதைத்தானே காட்டுகின்றது?

பதில்: நிச்சயமாக உண்மை, இதற்கான காரணம் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அன்று தமிழீழத் தேசியத் தலைவர் எதிர்த்து சரி என்பதை செல்வம் அடைக்கலநாதன் தரப்பினர் அழுத்தமாகாக் கூறவில்லை என்பதுடன் நாங்கள் தமிழீழத் தேசியத் தலைவர் அளவுக்கு தூய்மையானவர் இல்லை என்பதையும் அன்று அவர் அதை எதிர்க்கும் பொது நாங்கள் அதை எதிர்க்கத் தவறியது எங்கள் தவறு என்பதையும் இன்று நாங்கள் உணர்கின்றோம், இன்று நாங்கள் இதை நடைமுறைப் படுத்துமாறு கோருவது சுதந்திர தமிழீழத் தனியரசே இந்தியாவிற்கும், உலகிற்கும், தமிழீழத்திற்கும் நன்மை தரும் என்பதை இந்தியாவிற்கும், உலகிற்கும் உணர்த்து வகையில் ஸ்ரீலங்கா அரசின் கபட முகத்திரையைக் கிழிப்பதற்கே என்றும் மக்கள் முன் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்து, அன்று சுதுமைலையில் மக்கள் வெள்ளம் திரண்டது போன்றதோர் மக்கள் ஆணைபெறும் நிகழ்வினை ஏற்படுத்த வேண்டும்.

அன்று இந்திய தமிழர்களுக்கு செய்தது தவறு என்பதையும், மீண்டும் ஒருமுறை இந்தியா இவ்வாறான தவறுகளைச் செய்யக் கூடாது என்பதையும் இந்தியாவிற்கு இடித்துரைக்க அல்லது எடுத்துரைக்க முன்வர வேண்டும்.

இந்தியா தமிழர்களின் காவலன், அன்று தமிழீழத் தேசியத் தலைவர் இந்தியாவுடன் இணங்கி இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்தியிருந்தால், அமிர்தலிங்கத்தை அங்கீகரித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உள்ள 'நான்காவது கொமிற்றி' ஊடக தனிநாட்டிற்கான அங்கீகாரத்தை கோரியிருந்தால் இந்தளவு அழிவுகளும் வந்திருக்காது என போய் உரைத்து இந்தியாவை காப்பாற்ற முயல்வதை நிறுத்த வேண்டும்.

மறுபுறத்தில் இந்தியாவை தமிழீழத் தேசியத் தலைவர் பகை சக்தியாகக் கருதவில்லை என்பதையும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இந்தியாவுடன் தமிழீழத் தேசியத் தலைவர் நட்புக் கொண்டாட விரும்பியதையும், இன்று இந்தியாவும், தமிழீழமும் பழைய பகையினைக் கடந்து மீள நிகழாமை என்ற அடிப்படையில் நெருங்கிய நட்புச் சக்திகளாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும்போது 13 ஆம் திருத்தச் சட்டத்தை அரைகுறைத் தீர்வாக இந்தியாவின் விருப்பிற்காக நடைமுறைப்படுத்தும் கோரிக்கையை தமிழர்கள் வெளிப்படையாகப் பெரிதும் ஆதரிப்பார்கள் என்பது எனது நம்பிக்கை.

இதன் பின்னும் இதனை எதிர்ப்பவர்கள் பச்சை இந்திய எதிர்ப்பு வாதிகளாக இருப்பார்களே அன்றி இந்திய எதிர்ப்புணர்வைக் கடந்து தமிழீழத் தேசியத் தலைவரையும், அவர் நடத்திய தூய்மையான விடுதலைப் போராட்டத்தையும் ஆதரிப்பவர்களாக இருக்கமாட்டார்கள்.

நன்றி.