தமிழீழத்திற்கு தேவை தெளிவான பொருளாதார செயல்முறையே

தமிழர்களும் தமிழீழ தேசமும் பாதுகாக்கப்பட்டு, தமிழர்களும் தமிழீழ தேசமும் இவ்வுலகில் நிலைத்து வாழவேண்டும் என்றால் தமிழர்களுக்கான நடைமுறை ரீதியான செயல்திறன்கொண்ட தெளிவான பொருளாதார நிலைப்பாடு ஒன்றே அவசியமானது.

தமிழீழத்திற்கு தேவை தெளிவான பொருளாதார செயல்முறையே

சென்ற நேர்காணலின் தொடர்ச்சி

கேள்வி: அண்மையில் சடாமுடி, அழுக்கு ஆடைகளுடன் காணப்பட்ட ஒரு முன்னைநாள் போராளிபற்றிய செய்திகள் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டதே, அதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: அந்தச் செய்தியில் உண்மை இருக்கலாம் போய் இருக்கலாம் ஆனால் அந்தச் செய்தி போரின்பின்னான தமிழர்களின் பொருளாதார நிலையை அப்பழுக்கின்றி அடையாளமிட்டு நிற்கின்றது.

இன்று தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் இடத்திலும், விடுதலைபோராட்டம் அல்லாத தமிழர் உரிமைக்கான கட்சி அரசியல் நடத்துவார்கள் இடத்திலும், தமிழர்களின் பொருளாதார வாழ்வை எவ்வாறு கட்டி அமைப்பது என்ற தெளிவான பொருளாதார நிலைப்பாடு இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவாக வெளிக்காட்டி நிற்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எண்பதுகளில் இருந்தே தமக்கான தெளிவான பொருளாதார நிலைப்பாட்டை உருவாக்கி அவற்றை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்து அவற்றை தேவைக்கேற்ப செயல்முறை ரீதியாக சீர்செழுமை செய்தமையே அவர்களால் 2000ம் ஆண்டளவில் வலுவான நடைமுறை அரசு ஒன்றை நிர்வகிக்க வழிவகை செய்தது.

இன்றைய தலைமைகளிடம் தெளிவான பொருளாதார நிலைப்பாடுகள் என எவையும் வரையறுக்கப்படவில்லை என்பதும், அன்றாட அரசியல் இருப்பைத் தக்கவைப்பதற்கான துண்டு துண்டான பொருளாதார முன்னெடுப்புக்களாகவே அனைத்தும் அமையப்பெற்றிருக்கின்றன என்பதும், இன்றுவரை எந்த ஒரு அமைப்புபோ அல்லது கட்சியோ தமிழர்களின் நம்பிக்கை பெறமுடியாது வகையிலும், தம்மைத் தலைமையாக தகவமைத்துக்கொள்ள முடியாத வகையிலும் இருப்பதற்கான அவல நிலையை ஏற்படுத்தி நிற்கின்றது.

எனவே சிறிலங்காவின் நவீன தமிழின அழிப்பு மற்றும் சூழ்ச்சிப் பொறிமுறைகள் கொண்ட சமூக, பொருளாதார ஆக்கிரமிப்பிலும் இருந்து தமிழர்களும் தமிழீழ தேசமும் பாதுகாக்கப்பட்டு, தமிழர்களும் தமிழீழ தேசமும் இவ்வுலகில் நிலைத்து வாழவேண்டும் என்றால் தமிழர்களுக்கான நடைமுறை ரீதியான செயல்திறன்கொண்ட தெளிவான பொருளாதார நிலைப்பாடு ஒன்றே அவசியமானது.

கேள்வி: தமிழீழ மக்கள் இந்த உலகில் நிலைத்து வாழவேண்டும் என்றால் அவர்களுக்கான பொருளாதார நிலைப்பாடு மிகவும் அவசியம் என்கிறீர்களே அது எவ்வாறு அமையப்பெறுதல் வேண்டும்?

பதில்: தமிழினம் தமிழர் தாயகத்தில் நிலைத்து வாழ்வதற்கான பொருளாதார நிலைப்பாடென்பது நீண்ட தொடர்ச்சியான தேசிய ஒடுக்குமுறையின் அழுத்தங்கள் தமிழீழ மக்களின் பொருளாதார வாழ்வில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது என்பதில் இருந்து சிந்திக்கப்படவேண்டியது.

ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் 1948ம் ஆண்டிலிருந்து மாறி மாறி பதவி ஏறிய சிங்களப் பேரினவாத அரசுகள் தேசிய அபிவிருத்தித் திட்டங்களிலிருந்து தமிழர் தாயகத்தை பெரிதும் புறக்கணித்தன. தேசிய வருமானத்தால், தேசிய பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களால், கடனுதவிகளால் சிங்களப் பிரதேசம் செழிபுற்று வளர, தமிழீழம் கவனிப்பாரற்ற காலனிப் பிரதேசமாக ஒதுக்கப்பட்டு, வளர்ச்சிகுன்றி, சீர்குலைந்தது. தேசிய அபிவிருத்தியிலிருந்து தமிழீழத்தை புறக்கணித்தது மாத்திரமன்றி, தமிழீழ தாயகத்திற்கு எதிரான இன வன்முறைகளைத் தூண்டிவிட்டும், ஆயுதப் படைகளை ஏவிவிட்டும், திட்டமிட்ட தமிழின அழிப்பு நடவடிக்கைளை மேற்கொண்டும் வந்த நிலையில் இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து தமிழீழ மக்களைப் பாதுகாக்க தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமையில் தமிழீழ மக்கள் உருவாக்கிய தமிழீழ நடைமுறை அரசை அழிக்க மிகப்பெரும் யுத்த மீறலுடன் கூடிய தமிழின அழிப்பை நடத்திய சிங்கள அரசுகள் தமிழ் பேசும் மக்களின் சொத்துடைமைகளுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. அதன் பின்னரும் இன்று வரையான சிறிலங்காவின் தமிழின ஆக்கிரமிப்பு வடிவம் என்பது தமிழர்களின் பொருளாதார பலத்தை கூறுபோட்டு, சனநாயக ஆட்சிமுறை என்ற போர்வையில் சிங்களப் பெரும்பாண்மை இனத்தில் தங்கி வாழும் இரண்டாந்தரப் பொருளாதாரக் கட்டுமானமாக என்றும் அவர்களில் தங்கிநிற்கவேண்டிய விதத்தில் வடிவமைக்கப்பட்டே வருகின்றது. இது பொருளாதார வளர்ச்சி என்ற பேரிலான கூறுபோடும் இனஅழிப்பு வடிவத்துடன் கூடிய சிங்கள பௌத்தப் பேரினவாத ஆக்கிரமிப்பு வடிவமாகும்.

இவ்விதம் திட்டமிட்ட முறையில் தமிழீழ மக்களின் பொருளாதார வாழ்வு சீரழிக்கப்படுவதால் தமிழீழப் பொருளாதார புனர்நிர்மாணப் பணியானது பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

சுதந்திரத் தமிழீழத்தில்தான் எமது தேசிய பொருளாதாரப் புனர்நிர்மாணத்தை வெற்றிகரமாகச் சாதிக்கமுடியும் என்ற போதிலும் இன்றில் இருந்தே, இன்றைய இந்த இக்கட்டான நிலையில் இருந்தே தமிழீழ தேசம் தனது பொருளாதார நிலையைத் தகவமைக்கும் வடிவங்களை நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.

அதேநேரம், எமது எதிர்காலத்தை நாமே நிர்ணயிக்கக்கூடிய அரசியல் அதிகாரம் எம் வசமிருந்தால்தான் நாம் எமது தாயகத்தை செல்வம் கொழிக்கும் நாடாக மாற்றியமைப்பது சாத்தியம் என்பதையும். விவசாயத் துறையையும், தொழிற் துறையையும் செம்மையாக விருத்திசெய்து சுயதேவைப்பூர்த்தியுள்ள பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த நாடாக தமிழீழத்தை கட்டியமைக்க முடியும் என்பதை உலகிற்கு உரிய செயல்நெறிகளின் ஊடே எடுத்டுரைத்தல்வேண்டும். 

இன்றைய உலக வளர்ச்ச்சிக்கு ஏற்புடையதான தமிழீழ தேசத்தின் திறந்த சந்தைப் பொருளாதாரத் திட்டமானது பொருளாதாரச் செழிப்பு மிக்க, வறுமை நிலை ஒழிந்த வளர்ச்சி பெற்ற சமுதாயத்தை கட்டி எழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதையும். எமது தேசத்தின் பிரதான உற்பத்தி சாதனங்கள் அனைத்தையும் அறிவுசார் பொருளாதாரக் கட்டுமானமாக்கி, வளர்ச்சி பெற்ற சமூக மாற்றத்தை முன்னெடுக்க எமது போராட்டம் தீர்மனித்திருக்கிறது என்பதையும் உலகின் முன் இன்றைய இக்கட்டான, இறுக்கமான சூழ்நிலையிலும் செயல்முறை ரீதியில் எடுத்துரைத்தல்வேண்டும்.

உணவு உற்பத்தியில் தமிழீழத்தை சுயபூர்த்தி அடையச்செய்யும் நோக்கில் விவசாய அபிவிருத்தி திட்டங்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிப்போம் என்பதையும். அதே வேளை, எமது தேசிய வளங்களை செம்மையாகப் பயன்படுத்தி, எமது மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும்வகையில் தொழிற் துறையையும் விருத்திசெய்வோம் என்பதையும். வளர்ச்சி பெற்ற விவசாயத் திட்டங்களை அமுலுக்கு கொண்டுவந்து, காணி நிலமற்றவர்களுக்கு காணி வழங்கவும், தொழில் தேர்ச்சி பெற்ற மக்கள் சமூகத்தை உருவாக்கவும் எமது போராட்டம் முடிவுசெய்திருக்கிறது என்பதையும் உலகின் முன் இன்றைய இக்கட்டான, இறுக்கமான சூழ்நிலையிலும் செயல்முறை ரீதியில் எடுத்துரைத்தல்வேண்டும்.

எதிர்காலத்தில் தமிழீழ தேசத்தின் மத்திய அரசின் குறுகிய வட்டத்திற்குள் அல்லாது சனநாயக ரீதியில் சுயாதீனமான முறையில் தேசிய பொருளாதாரத் திட்டம் வகுக்கப்படுவதையும் செயல் படுத்தப்படுவதையும் விடுதலைப் போராட்டம் ஊக்குவிக்கும் என்பதையும். தமிழீழத்தின் சமூக - பொருளாதார புனரமைப்பில் பொதுமக்கள் சகல மட்டத்திலும் பங்கு கொள்ள எமது விடுதலைப் போராட்டம் வாய்ப்பளிக்கும் என்பதையும். தேசிய செல்வம் தேவைக்கேற்ப சரியான முறையில் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்பதை உறுதியளிக்கும் அதேவேளை, தேசிய பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் முயற்சிகளில் வெளிநாடுகளில் வதியும் தமிழீழத் தேசாபிமானிகளுக்கும் சகல சந்தர்ப்பங்களும் கொடுக்க எமது போராட்டம் தீர்மானித்திருக்கிறது என்பதையும் உலகின் முன் இன்றைய இக்கட்டான, இறுக்கமான சூழ்நிலையிலும் செயல்முறை ரீதியில் எடுத்துரைத்தல்வேண்டும்.

சர்வதேச பொருளாதார உறவுகளில் - உலக பொருளாதார வளர்ச்சியில் பரிபூரண பங்கெடுக்கும் அதேவேளை, எமது விடுதலைப் போராட்டம் இந்திய சார்புகொண்ட பொருளாதாரக் கொள்கையையே கடைப்பிடிக்கும் என்பதையும். எமது சூழல் சர்வதேச பூகோள – அரசியல் அரங்கைப் பொறுத்தமட்டில், இந்து மா சமுத்திரத்தை ஸ்திரத்தன்மை கொண்ட சிறந்த பொருளாதாரப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தும் கொள்கையை எமது விடுதலைப் போராட்டம் ஆதரிக்கும் என்பதையும் உலகிற்கு செயல்முறை ரீதியாக எடுத்துரைத்தல்வேண்டும்.

தமிழீழத்தின் வளத்தை விருத்திசெய்து, பலம்வாய்ந்த ஒரு பொருளாதார அடித்தளத்தை அமைப்பதாயின் தமிழர் தேசம் உலக நாடுகளுடன் ஒத்து இயங்கக்கூடியதும் தன்னில் தானே தங்கியிருக்கக் கூடியதுமான அறிவுசார் பொருளாதார அமைப்பிணைக் கொண்ட திறந்தசந்தைப் பொருளாதார முறைமையினைக் கொண்டிருத்தல் வேண்டும். இந்தக் கோட்பாட்டை செயற்படுத்தும் வகையில் எமது பொருளுற்பத்தி வடிவம் இன்றில் இருந்தே நெறிப்படுத்தப்படுதல்வேண்டும்.

(தொடரும்…)