தமிழீழமே இந்து சமுத்திரத்தை அமைதி வலயமாக்கும்!

சென்ற நேர்காணலின் தொடர்ச்சி.

தமிழீழமே இந்து சமுத்திரத்தை அமைதி வலயமாக்கும்!

கேள்வி: நெடுமாறன் ஐயா அவர்கள் 13.02.2023 அன்று வெளியிட்ட அரசியல் அறிவித்தல் தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?அது சரியானதா? தவறானதா?

பதில்: நெடுமாறன் ஐயா அவர்கள் செய்திருக்கும் இவ்விடயம் என்பது ஒரு அரசியல் அறிவித்தல் இதில் உண்மையிருக்கலாம், பொய் இருக்கலாம் இதில் சரி, பிழை சொல்வதைக்காட்டிலும் இந்த அறிவித்தலைச் செய்த நெடுமாறன் ஐயாவும், காசி ஆனந்தன் ஐயாவும் இன்று போராட்டத்தை வழிநடத்தும் இரண்டு இயக்கங்களின் தலைவர்களாக, தமிழீழ தேசியத்தலைவர் தலைமையிலான புதிய விடுதலைப் போராட்ட வடிவம் ஒன்றை வெகுவிரைவில் அறிவிக்க இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். அதைத் தலைவர் சொல்லச் சொன்னதாகவும் சொல்கிறார்கள். எனவே அவர்கள் முதலில் அந்தத் திட்டத்தை அறிவிக்கவேண்டும், அந்தத்திட்டம் துண்டு துண்டாகப் பிரிந்துகிடக்கும் எமது போராட்டத்தை ஒன்றாக்க முயற்சி செய்யவேண்டும் .

இந்திய மத்திய அரசுடனும் தமிழ்நாட்டு அரசுடனும் ஆரோக்கியமான ஏற்றத்தாழ்வற்ற உரிய உறவைப்பேண முயற்சிக்கவேண்டும், அதுபோலவே உலக நாடுகளுடனும் உரியமுறையில் உறவைப்பேன முயற்சிக்கவேண்டும், உங்களுக்கு அதிமுகவையும், BJPயையும் பிடிக்கும், திமுகவையும், காங்கிஸ் கட்சியையும் பிடிக்காது என்பதற்காக தலைவருக்கும் பிடிக்காது என்ற முடிவைத் திணிக்காதீர்கள், அது தலைவர் நேரடியாகச் சொல்லவேண்டியது. இது உங்களின் விடுதலைப் போராட்ட அணுகுமுறை இருத்தலும் தமிழீழ விடுதலையின் மீது கொண்ட அக்கறையின் காரணமாக எல்லோருடனும் ஆரோக்கியமான உறவைப்பேணி, இந்திய உள்விடயங்களில் பெரிதும் தலையிடாது ஒட்டுமொத்த இந்தியாவும் நட்புக்கொள்ளக்கூடிய விதத்திலான உறவுமுறைகளை உருவாக்குங்கள் என்பதே எனது வேண்டுகோள். 

தலைவர் இருக்கின்றார் என்று சொல்பவர்கள் தியாகிகள், தலைவர் வீரச்சாவு என்று சொல்பவர்கள் துரோகிகள் என்றோ அல்லது மாறித் தலைவர் வீரச்சாவு என்று சொல்பவர்கள் தியாகிகள் தலைவர் இருக்கின்றார் என்று சொல்பவர்கள் துரோகிகள் என்றோ சொல்பவை தவிர்க்கப்பட வேண்டியவை. இவ்வாறான கருத்துக்கள் தலைவரின் மீதும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் பற்றுக்கொண்டவர்களின் அறிவியல் மற்றும் உணர்வுசார் மன நம்பிக்கை, இந்த வழிமுறையில் அணுகினால்தான் விடுதலையை வெல்லமுடியும் என்ற அவர்களின் அரசியல் அணுகுமுறையின் வெளிப்பாடு. 

இரண்டு தரப்பினருமே மாற்றுக்கருத்தினரின் கருத்துக்களில் உள்ள ஆரோக்கியமான பக்கங்களைச் சீர்துக்கிப்பாருங்கள். இதற்கான கருத்தியல் பரிமாற்றங்களுக்குத்தயார் ஆகுங்கள். அவர்கள் இருந்தால் வரும்போது வரட்டும். முதலில் நீங்கள் ஒவ்வருவரும் உங்களது ஆரோக்கியமான வெளிவிவகார நிலைப்பாடுகளை மக்கள் முன் தெரியப்படுத்துங்கள். 

அவர்கள் வந்து அதில் மாற்றம் செய்ய விரும்பும்போதோ அல்ல எவரேனும் வந்து இதில் இப்படி மாற்றம் செய்தால் நல்லது என்று சொல்லும்போது அதைச் செவிமடுத்து அதில் மாற்றம் செய்யக்கூடிய மனோநிலையிலும் இருக்க முயற்சிசெய்யுங்கள். 

கேள்வி: சரி இது தொடர்பான கேள்வியை நான் உங்களிடமே முன்வைக்க விரும்புகின்றேன். தமிழீழத்தின் வெளிவிவகார நிலைப்பாடு எப்படி இருக்கவேண்டும் என நினைக்கின்றீர்கள்? 

பதில்: இது பற்றிய எனது பார்வையை சற்று விரிவாகப் பார்க்க விரும்புகின்றேன். Tஅந்தவகையில், உலகில் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்படும் மக்கள் சமூகங்களும், தேசிய இனங்களும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள நிகழ்த்தி வரும் சர்வதேசப் போராட்டத்தில் எமது தேசிய சுதந்திரப் போராட்டமும் ஒரு இணைபிரியாத அங்கமாக உள்ளது. இந்த வகையில், இன அழிப்பிற்கு உள்ளாக்கப்படும் உலக மக்களின் பொது எதிரியான இனவாத ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிராகப் போராடுவதற்கு எமது விடுதலைப் போராட்டம் உறுதிபூண்டிருக்கிறது. 

இனவாத ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிரான ஒரு விடுதலை சக்தி என்ற ரீதியில் தமிழீழ விடுதலைப் போராட்டமானது உலக தேசிய விடுதலைப் போராட்டங்கள் அனைத்திற்கும் தனது பரிபூரண ஆதரவை தெரிவிக்கிறது. இன அழிவில் இருந்து மனித குலத்தைப் பாதுகாக்க விரும்பும் அமைப்புக்கள், உலக நாடுகள், புரட்சிகர அரசியல் இயக்கங்கள், தொழில் ஸ்தாபனங்கள் மற்றும் சமாதானத்தை விரும்பும் சக்திகள் ஆகியனவற்றுடன் நேச உறவை வளர்த்து வலுப்படுத்துவதே எமது விடுதலைப் போராட்டத்தின் வெளியுறவு நிலைப்பாக இருக்கும் அதே வேளை, சர்வதேச உறவுகளில் உலக ஒற்றுமையை விரும்பிநிற்கும் எமது விடுதலைப் போராட்டம் இந்திய சார்புக் கொள்கையையே கடைப்பிடிக்கும். சர்வதேச பூகோள – அரசியல் அரங்கைப் பொறுத்தமட்டில் எமது வெளிவிவகார நிலைப்பாடென்பது இந்து மா சமுத்திரத்தை சமாதானப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தும் கொள்கையையே ஆதரிக்கவேண்டும். 

இன முரண்பாடுகளைத் தீர்ப்பதில் ஸ்ரீலங்கா ஒரு தோல்வியடைந்த நாடு என்ற அடிப்படையில்: தமிழீழத்தைத் தாயகமாகக் கொண்டு வாழும் தமிழ்த் தேசிய இனமக்கள் – தமிழின அழிப்பில் இருந்து தம்மைப் பாதுகாக்க - தமது தாயகத்தில் சுதந்திரமாக வாழக் கூடிய தீர்வொன்றை உருவாக்கி - தமிழர் தாயகம் பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்ப ஒன்றை நடாத்தித் தீர்வை அடைவதே சிறந்தவழி என்ற அடிப்படையில் எமது விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்படுதல் வேண்டும். அதேநேரம் இதனை விடவும் சிறந்த வேறு வழிகள் இருப்பின் ஆராயத் தயராகவும் இருத்தல் வேண்டும். 

எமது விடுதலையை வென்றடைய சிங்கள இனத்தவர், இந்தியப்பேரரசு, உலக சக்திகள் மத்தியில் தொடர்ச்சியான அமைதிவழி எதிர்ப்புப் போராட்டங்களின் ஊடாக உரிமைக்காகப் போராடுவது என்ற எமது விடுதலைப் போராட்டமானது, எமது சொந்தக் காலில் நிற்கும் அதேநேரம், உலகில் உள்ள அனைவரின் ஆதரவையும் பெறக்கூடிய விதத்தில் எமது போராட்ட வடிவங்களையும் உறவு முறைகளையும் அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். இவ் உலகில் இதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாகவே இருப்பதனால் தமிழீழத்தில் எமது மக்களையும், இந்தியப் பிராந்திய அமைதியையும், உலக அமைதியையும் பாதுகாக்க வல்ல, வலிமை மிகுந்த நட்பு சக்திகளை உருவாக்கிக் கொள்வதுடன், அதை நோக்கி உழைக்கும் நோக்கின் அடிப்படையில் பின்வரும் விதத்தில் எமது உறவுமுறைகளை அமைத்துக் கொள்ளும். 

தமிழர்களாகிய நாம் தென் இலங்கை தேசத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலைபெறச் சகல வழிகளிலும் போராடக்கூடிய தகுதி உடையவர்களாக இருப்பதுடன், அவர்கள் செய்யும் செயல்களுக்கு பதில் வினை ஆற்றக் கூடியவர்களாகவும் அவர்களிடமிருந்து எம்மை பாதுகாக்க வல்லவர்களாகவும் இருப்பற்கு தொடர்ந்தும் முயற்சிக்கவேண்டும். அதேநேரம் முடிந்தளவு சிங்கள இனத்தவர் மத்தியில் தமிழர்களின் நியாயமான விடுதலையின் தேவையினை புரியவைத்து, தனித் தனி நாடுகளாகப் பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழ வழி செய்யும் வகையிலான முன்நகர்வுகளையும் இடையறாது தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும். 

தென் இலங்கையில் வாழும் ஏனைய இனங்களின் மத்தியில் நம்பகத் தன்மையையும் நல்லுறவையும் பேணிவளர்க்க தொடர்ந்தும் முயற்சித்தல் வேண்டும். 

பெளத்தம், இந்து, இசுலாம், கிறிஸ்தவம் என அனைத்து மத மக்களிடையேயும் பாகுபாடுகளை ஊக்குவிக்காத நல்லுறவு நிலையினை மேம்படுத்த தொடர்ந்தும் முயற்சித்தல்வேண்டும். அதேநேரம், ஒருபோதும் மத வாதத்தில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது. Tஇந்தியப் பேரரசுடனான உள் முரண்பாடுகள் அனைத்தையும் கடந்து, நீண்ட கால வரலாற்றுத் தொடர்பின் அடித்தளத்தில், உலகில் இந்தியப் பேரரசின் இருப்பையும் அதன் தகுதி நிலையையும் குறையவிடாது பாதுகாக்க இணைந்து பயணிக்க எப்போதும் இடையறாது முயற்சிக்கவேண்டும். 

இந்திய அரசில் குறிப்பிட்ட சில அதிகாரம் படைத்தவர்கள் எமக்குப் பாராமுகம் காட்டினால், அல்லது முறையற்ற பிராந்திய ஆதிக்கச் செயற்பாட்டில் ஈடுபட்டால் இந்திய அரசை நோக்கி உலக அரங்கிலும் இந்தியாவிலும் அறவழிப் போராட்டம் நடத்தி, அவர்களைச் சரியான முறையில் செயலாற்ற வைக்க வேண்டிய கடப்பாடு உடையோராகவும் இருத்தல்வேண்டும். 

இந்திய, ஈழத்தமிழர் உறவில் ஏற்பட்டுள்ள கசப்புணர்வுகள் இரு தரப்பினராலும் தூய மனதுடன் கடக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்ற உறவின் பரிமாணத்தைப் புரிந்து, நட்புறவுகொண்ட - நல் மனதுடன் இணைபிரியாத அரசியல், சமூக, பொருளாதார, பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரம் என அனைத்து வாழ்வியல் நிலைகளிலும் ஒன்றித்து வாழ்ந்திட உறுதியுடன் செயலாற்றுதல்வேண்டும். 

இந்திய உபகாண்டத்தின் பூர்விக, நீண்ட வரலாறு கொண்ட குடிகளாக வசிக்கும் ஆரிய, திராவிட, மொங்கோலிய மற்றும் ஏனைய இன முரண்பாடுகள் களைந்த, ஒருமைப்பாடும் உறுதிப்பாடும் மிக்க, ஒன்றுபட்ட மக்கள் சமூகமாக இந்திய உபகாண்டத்தை உருவாக்கத் தொடர்ந்தும் இடையறாது உழைத்தல் வேண்டும். 

தமிழர்கள் சர்வதேச உறவை ஏற்படுத்தக் கூடிய இனக் குழுமம் என்பதை ஐக்கிய நாடுகள் சபை வரையறை செய்கிறது. இதனை தாழ்வுச்சிக்கல் மற்றும் தலைக்கனம் இன்றிப் புரிந்து இவ் அழகிய உலகில் செயலாற்றுதல்வேண்டும். 

தமிழர் சுதந்திர வாழ்விற்காகப் போராடும் இந்த நிலையில் அல்லது தனி நாடாக சுதந்திரம் அடைந்த பின்னரும் சரி, சிங்கள மக்கள் வாழும் தென் இலங்கை தேசத்துடனும் அங்கு வாழும் ஏனைய இன மக்களுடனும் நல்லுறவைப் பேணி வாழ முயற்சிப்போம். இதனைத் தென் இலங்கை தேசம் உணர மறுத்தால், அதன் தாற்பரியங்களைத் தென் இலங்கை தேசம் உணரும் விதமான சர்வதேச உறவு முறைகளை உருவாக்கி அதனைச் சீரமைக்க தொடர்ந்தும் முயற்சிப்போம் என்ற அடிப்படையில் செயலாற்றுதல்வேண்டும். 

இந்திய அரசின் இராணுவ, பொருளுதார பிராந்திய நலன்களுக்கு முரண்பாடான விதத்தில் தமிழர்களின் சர்வதேச உறவு அமையப் பெற்றால் அது தமிழர் வாழ்வில் நிரந்தர நின்மதியை தோற்றுவிக்காது என்ற அடிப்படையினை விளங்கியே எமது சர்வதேச உறவுகளை நெறிமுறைப் படுத்துதல்வேண்டும். 

தென் இலங்கை தேசமோ அல்லது இந்திய நாடோ எம்மைப் புறக்கணிக்கும் போது அல்லது அவ்வாறு ஏதுமின்றி நல் எண்ணத்துடன் சர்வதேச நாடுகள், அமைப்புக்கள் ஆதரவு வழங்கவோ, நட்புக் கொண்டாடவோ விரும்பும் போது ஆதரவையோ, நட்பையோ பெற்றுக்கொள்வோம், ஆனால் அவ்வாறான உறவு பிராந்திய அமைதியைக் குழப்பாதபடியே என்றும் பேணிக்கொள்வோம். மேலும் நாம் எந்த ஒரு சர்வதேச உதவியினைப் பெற விரும்பினாலும் அது இந்தியாவின் ஒத்துழைப்புடனேயே எம்மை வந்தடையவேண்டும் என்பதனை அத்தகைய நாடுகளிடம் முன்கூட்டியே உறுதிப்படுத்திக் கொள்வோம் என்பதுடன் அவ்வாறு அமையப் பெற்றால் மாத்திரமே எமது நாட்டிலும் பிராந்தியத்திலும் நிலையான அமைதியை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்ற கள யதார்த்தத்தையும் அனைவருக்கும் எடுத்துரைத்தல்வேண்டும். 

எமது தேச ஒற்றுமை, இலங்கைத் தீவின் ஒற்றுமை, இந்தியப் பிராந்திய ஒற்றுமை மற்றும் அதனுடன் கூடிய உலக ஒற்றுமை, அமைதி மற்றும் பாதுகாப்பு என்ற அடித்தளத்தில் எமது சர்வதேச உறவு அமையப்பெறுதல் வேண்டும். 

(தொடரும்......)