மாமனிதராக மதிப்பளிக்கப்பட்டார் திரு. மகாலிங்கம் நாராயணசாமி அவர்கள்

மாமனிதராக மதிப்பளிக்கப்பட்டார்  திரு. மகாலிங்கம் நாராயணசாமி அவர்கள்

தன்நலன் கருதாது நேர்மையுடனும் ,நெஞ்சுறுதியுடனும் எமது சுதந்திரப்போராட்டத்திற்கு 2009 வரை அரும்பணியாற்றிய எளிய தமிழப் பெருமகன் ஒருவரை நாம் இன்று இழந்து விட்டோம்.

தமிழினம் பெருமைப்படும்படியாக எமது விடுதலை இயக்கத்தின் கடல் பயணங்களிலும்,கடற் கலன்களின் கட்டுமானங்களிலிலும் பெரும் பங்களிப்பை புரிந்த இந்த தமிழினப்பற்றாளர் ஒருவரை இழந்து தமிழர் தேசம் சோகக்கடலில் மூழ்கிக்கிடக்கிறது.  

திரு.மகாலிங்கம் நாராயணசாமி அவர்கள் ஒரு சிறந்த கடலோட்டி,இவரிடம் ஆழமான கடலறிவு இருந்தது, தமிழ் மண்ணின் விடுதலைக்கு பங்காற்றவேண்டும் என்ற உயரிய குறிக்கோள் இருந்தது. எமது இயக்கத்தின் கடற்புலிகள் கட்டுமானத்திற்கு ஆரம்ப காலம் தொடக்கம் பெருந் துணையாக நின்றவர்.நீண்ட கடற்பயணங்களில் தனி மனிதனாக எமது போராளிகளுக்கு பக்கபலமாக,நண்பனாக செயற்பட்டு வந்தவர். போராளிகளின் இலட்சிய உறுதியும்,மனவுறுதியும் உயர்ந்திட உரமாக நின்றவர். ஆபத்தான கடற் பயணங்களை எல்லாம் சவாலாக ஏற்று எமது விடுதலைக்கு பங்காற்றியவர்.

தமிழீழ மக்களின் சுதந்திரப் போராட்டதை தமிழர்களின் மிகப்பெரும் பலமாக கருதி செயற்பட்டு வந்தவர்.தமிழ் மக்களுக்கு இவரது இழப்பு மாபெரும் துயர நிகழ்வு.

திரு.மகாலிங்கம் நாராயணசாமி அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப்பற்றிற்கும் மதிப்பளித்து அவரது நற்பணியை கௌரவிக்கும் முகமாக ‘மாமனிதர்’என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் பெருமையடைகின்றோம்.

அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது அன்பான ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.