நாட்டுப்பற்றாளர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கிண்ணியம்மா

நாட்டுப்பற்றாளர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கிண்ணியம்மா

சுயநல வாழ்வைத் துறந்து தமிழீழ விடுதலையை இலட்சியமாக வரித்து அந்த உயர்ந்த இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த ஒரு உயர்ந்த அன்னையை தமிழர் தேசம் இழந்து விட்டது. இது தமிழீழ விடுதலை வரலாற்றில் நிகழ்ந்த துயர நிகழ்வு.

திருமதி கந்தசாமித்துரை வள்ளிநாயகி அவர்கள் ஒரு அபூர்வமான அன்னை, அசாத்தியமான குணவியல்புகளை கொண்டவர். இனிமையான பேச்சும்,எளிமையான பண்பும், தன்நலன் கருதாத தேசப்பற்றும் அவரது ஆளுமையின் சிறப்பியல்புகள். நெஞ்சில் உறுதியும் நேர்மையும் கொண்ட ஒரு தேசத் தாய். தமிழீழ மக்களாலும், போராளிகளாலும் பெரிதும் போற்றப்பட்ட தலை சிறந்த தமிழினப்பற்றாளர். மாவீரர்களான கப்டன் முரளி, மேஜர் கிண்ணி அவர்களை பெற்றெடுத்த புனித அன்னை.

தமிழ்த்தேசியப் போராட்டத்தின் ஆரம்ப காலம் தொடக்கம் உறுதுணையாக நின்றவர். காயப்பட்ட போராளிகளை பாதுகாத்து பராமரித்து நின்றவர். தமிழ் மண்ணில் பிறந்து அந்த மண் பெருமைப்படும் படியாக வாழ்ந்த பெருமைக்குரியது அம்மாவின் தேசப்பற்று.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அதன் இலட்சியத்தையும் முழுமையாக முழுமனதுடன் ஏற்று தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு பெரும் பங்களிப்பு செய்தார். 1980 களில் தொடங்கி எமது போராளிகளின் தாயாக தாங்கி நின்று அடைக்கலம் கொடுத்தவர். பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளில் பற்பல அச்சுறுத்தல்களையும் ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் கொடிய அரச பயங்கரவாத அடக்குமுறைக்கு மத்தியில் மிகுந்த துணிவுடன் தமிழ்த்தேசியத்திற்கும்,தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் பல்வேறு வழிகளில்

கைகொடுத்து உதவினார். ஆபத்தான போராட்டப் பாதையில் மறைமுகமாக எமது விடுதலை இயக்கத்திற்கு அன்னார் ஆற்றிய பணிகள் என்றுமே போற்றுதற்குரியது.

திருமதி.கந்தசாமித்துரை வள்ளிநாயகி அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப்பற்றிற்கும் மதிப்பளித்து அவரது நற்பணியை கௌரவிக்கும் முகமாக ‘நாட்டுப்பற்றாளர்’என்ற தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் பெருமையடைகின்றோம்.

தேச விடுதலை என்னும் உன்னத இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்துவிடுவதில்லை. எமது நெஞ்சத்து நினைவுகளில் அவர்கள் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்கள்.