கந்தகாடு முகாம் மோதல் : கைதான 34 பேரும் விளக்கமறியலில்!
வெலிக்கந்த – கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட 34 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் இன்று [06] முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களில் 20 பேரை எதிர்வரும் 16ஆம் திகதி வரையும் ஏனைய 14 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இராணுவ சிப்பாய் ஒருவர் உட்பட 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த மோதல் தொடர்பில் 34 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தினை அடுத்து தலைமறைவாகியுள்ள சந்தேகநபர் ஒருவரை தேடும் நடவடிக்கைகளில் பொலிஸாரால் ஈடுபட்டு வருகின்றனர்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தொடர்ந்தும் கைதிகளுக்கு இடையில் மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, புனர்வாழ்வு நிலையங்களில் உள்ள கைதிகள் தொடர்ந்தும் வன்முறையில் ஈடுபட்டால் அவர்களை புனர்வாழ்வு நடவடிக்கைகளில் இருந்து நீக்கி விளக்கமறியலில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெலிக்கந்த – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அதேநேரம், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில், கைதிகளுக்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகள் தொடர்பில் உடனடி அறிக்கை ஒன்றையும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, அதன் பணிப்பாளரிடம் கோரியுள்ளார்.