கொறோணாவுக்கான ஜனாதிபதி செயலணியே இனவாத அடிப்படையிலானது

கொறோணாவுக்கான ஜனாதிபதி செயலணியே இனவாத அடிப்படையிலானது

கொரோனா தொடர்பான ஜனாதிபதி செயலணி இனவாத அடிப்படையில் அமைக்கப்பட்டது - ரவூப் ஹக்கீம் கேள்வி!

இலங்கையில் கொரோனாவினால் இறந்த 3 ஆயிரத்து 634 பேர் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் தகவல்களின்படி இதில் 2ஆயிரத்து 225 ஆண்களும் ஆயிரத்து 409 பெண்களும் அடங்குகின்றனர்.

அத்துடன் இன அடிப்படையில் 2 ஆயிரத்து 992 இஸ்லாமியர்கள், 287 பௌத்தர்கள், 270 இந்துக்கள் 85 கத்தோலிக்கர்கள் இதில் அடங்குவதாக கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அந்த காலத்தில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் பரிந்துரையின் அடிப்படையிலேயே விடயங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

இந்தநிலையில், அப்போதைய ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட கொரோனா தொடர்பான ஜனாதிபதி செயலணி, இனவாத அடிப்படையில் அமைக்கப்பட்டது என்று குறிப்பிட்ட, ரவூப் ஹக்கீம், இதனை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

கொரோனா வைரஸ் நீரூக்கடியில் பரவாது என்று கூறப்பட்டபோதும், இலங்கையின் ஜனாதிபதி செயலணி, நீருக்கடியில் கொரோனா வைரஸ் பரவும் என்றும் எனவே, கொரோனாவினால் மரணமடைவோரின் உடலங்கள் தகனம் செய்யப்படவேண்டும் என்றும் பரிந்துரைத்தது என்றும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார். கொரோனா வைரஸ் ஒருவரின் உடலுக்குள் சென்ற நிலையில் அவர் இறந்துப்போனால் அந்த வைரஸூம் இறந்துப்போகும் என்பதை சுகாதாரப் பிரிவினரின் கருத்தாகும் என்றும் ஹக்கீம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல, குறித்த ஜனாதிபதி செயலணியில் துறைசார் நிபுணர்கள் உள்வாங்கப்பட்டிருக்கவேண்டும் என்றும், தவறான நிபுணர்கள் அந்த குழுவில் இருந்தார்கள் என்பதையும் தவறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டது என்பதையும் தாம் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டார்.

அதேநேரம் ஜனாதிபதி செயலணியில் முக்கியமான பங்கை வகித்தவரே, 

பின்னர் அரகலய போராட்டத்தில் இனவாதத்துக்கு எதிராக முன்னிலையாகியிருந்தார் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து மற்றும் ஒரு கேள்வியை தொடுத்த ரவூப் ஹக்கீம், இனவாத அடிப்படையில், குறித்த ஜனாதிபதி செயலணி செயற்பட்டது என்பதை அமைச்சர் ஏற்றுக்கொண்ட நிலையில், தவறான தீர்மானத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கப்படுமா என்ற கேள்வியை தொடுத்தார்

எனினும் இந்த விடயத்தில் முஸ்லிம்கள் மாத்திரமல்ல, ஏனைய மக்களும் பாதிக்கப்பட்டனர் என்று அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டபோதும் நட்டஈடு தொடர்பான விடயத்துக்கு பதில் எதனையும் வழங்கவில்லை.