பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்கள் நாடுதழுவிய போராட்டம்!
பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் வேதன முரண்பாடு, வேதன அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் சிக்கல்களுக்கு உரிய தீர்வை வழங்க வலியுறுத்தி கால அவகாசம் வழங்கப்பட்ட போதும் இதுவரை தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
ஊழியர் சங்கங்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், இலங்கை அரசாங்கமும் இதுவரை தீர்வு வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு தழுவிய பணிநிறுத்தப் போராட்டம் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
உடனடித் தீர்வினை வழங்கவேண்டி இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படும் குறித்த போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இணைந்து கொள்ளவுள்ளதாக அந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் முன்னெடுக்கும் இருநாள் பணிநிறுத்தத்திற்கு தங்கள் விரிவுரைகளை தவிர்த்து மூத்தவர்களுக்கு தார்மீக மற்றும் முழுமையான ஆதரவினை அளிப்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிச் சூழ்நிலையில் நாளாந்த வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்பால், அடித்தட்டு உழைக்கும் வர்க்கம் முதற்கொண்டு அனைத்துத் தரப்பினரும் பாரிய நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்தநிலையில் அவற்றினை ஈடுசெய்வதற்கேற்ற வேதன அதிகரிப்பென்பது அத்தியாவசியமான ஒன்றாகும்.
மேலும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல், கொரோனாத் தொற்று, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அவ்வப்போது ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளினால் மாணவர்களின் கல்வியாண்டுகள் நிர்ணயித்த காலத்தை விட அதிகரித்துள்ளது.
எனவே, மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டேனும், காலதாமதம் ஏதுமின்றி கல்விசார ஊழியர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகாண உரிய தரப்புக்கள் முன்வர வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.