602 பில்லியன் ரூபாய் தனிநபர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டிய நிலை!

602 பில்லியன் ரூபாய் தனிநபர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டிய நிலை!

பரேட் சட்டம் தொடர்பான திருத்தத்தை எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடனைத் திருப்பிச் செலுத்தாத கடன்பெற்றவர்களிடம் இருந்து நிலத்தையும் சொத்துக்களையும் கைப்பற்ற பரேட் சட்டம் அனுமதிக்கிறது.

 இந்தநிலையில், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சுமையை குறைக்கவும் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டும் அமைச்சரவை தீர்மானத்துக்கமைய இந்த பரேட் சட்டம் எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று கருத்துரைத்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, இரண்டு அரச வங்கிகளினால் தனிநபர்களுக்கு மொத்ததாக சுமார் 602 பில்லியன் ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவற்றில் பெரும்பகுதியை திருப்பிச் செலுத்த முடியாததால் அறிவிடமுடியாக் கடனாக அதனை தள்ளுபடி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் தொகையை நாட்டில் விவசாயம் மற்றும் தொழில் துறைகளில் பயன்படுத்த சாத்தியம் ஏற்பட்டிருந்தால், அந்தத் துறைகளில் பெரும் வளர்ச்சியை எட்டியிருக்க முடியும்.

நாட்டில் நிதிக் கட்டுப்பாடு இல்லாதமையினால் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதுடன், வர்த்தகர்களும், நிதி நிறுவனங்களும் நெருக்கடியில் சிக்காத வகையில் செயல்பட வேண்டும்.

அதன்படி, பரேட் சட்டத்தால் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்க்கும் நோக்கில் அந்த சட்டம் தொடர்பான சில திருத்தங்களை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதேநேரம், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு தனியான கடன் திட்டத்தையும் அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 அத்துடன், இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து குறைந்த வட்டியில் கடன் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.