தனியார் கடன் வழங்குநர்கள் இலங்கை அரசாங்கத்திடம் யோசனை முன்வைப்பு!
வெளிநாட்டு கடனான 12 பில்லியன் அமெரிக்க டொலரை மறுசீரமைப்பது தொடர்பில், இலங்கையின் தனியார் கடன் வழங்குநர்கள் சிலர், அரசாங்கத்திடம் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
குறித்த யோசனையில் புதிய பிணை பத்திரங்களும் அடங்குவதாக ரொயிட்டர்ஸ் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானால் கடனை திருப்பிச் செலுத்துவதை இலகுவாக்குவதற்காக குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தனியார் துறையினர் வரலாற்றில் முதன் முறையாக இவ்வாறு யோசனை முன்வைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் மொத்த நிதி தேவைகள் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பன கடன் குறிகாட்டிகளுடன் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டுள்ளன.
இதன்காரணமாக இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் சில நிபந்தனைகளுடான, பொருளாதார இலக்குகளை அடையத் தவறினால், 2027ஆம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கான நலன்புரி கொடுப்பனவுகள் குறைக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், 2027ஆம் ஆண்டளவில், மொத்த தேசிய உற்பத்தி 4.5 சதவீதத்தை விடவும் அதிகரிக்குமாயின், நலன்புரி கொடுப்பனவுகளில் சிக்கல்கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில், 12 பில்லியன் அமெரிக்க டொலருக்கான வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பது தொடர்பில், இலங்கையின் தனியார் கடன் வழங்குநர்கள் சிலர், யோசனை முன்வைத்துள்ளதாக ரொயிட்டர்ஸ் இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.