இந்தியாவின் நேசசக்தியாக தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்

அந்தவரிசையில் பிரபாகரன் அவர்களும் அதற்குரிய அத்தனை சிறப்பு அம்சங்களையும் கொண்டவர் என்பதை உளமார ஏற்று, எல்லாத் தரப்பினரும் அவரையும், அவர் நடத்திய விடுதலைப் போராட்டத்தையும் உரியமுறையில் அங்கீகரிக்க வேண்டியதும், இந்திய உபகண்ட ஒற்றுமையைக் கருத்திக்கொண்டு அனைவரும் ஆற்றவேண்டிய வரலாற்றுக் கடமையாகும்.

இந்தியாவின் நேசசக்தியாக தமிழீழத்தை  அங்கீகரிக்க வேண்டும்

சென்ற நேர்காணலின் தொடர்ச்சி 

கேள்வி: தமிழர்கள் தமது இருப்புநிலை வரலாற்றை நினைவில்கொண்டு தமிழீழ விடுதலையை வென்றெடுப்பார்களா?

பதில்: இளம் தலைமுறையினரும் விளங்கிக்கொள்ளக் கூடியவிதத்தில் இதுபற்றிச் சில விடயங்களை சற்று விரிவாக்க கூற விரும்புகின்றேன்.

தமிழ்நாடு, புதுச்சேரி, தமிழீழம் ஆகியன தமிழர்களின் இன்றைய பூர்விக தாயகப் பிரதேசங்கள் என்பதும், இப்பிரதேசங்களில் இன்றுவரை தமிழர்களே தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் தமிழர்களின் நீண்ட நெடிய வரலாறு. கேரள, ஆந்திரா, கர்நாடகா போன்று இந்தியாவின் வேறு பல மாநிலங்களிலும், தென் இலங்கையிலும் தமிழர்கள் பூர்விகமாகவும், குடியேறிகளாகவும் நீண்ட நெடிய காலமாக வாழ்ந்துவருகினர் என்பதும் தமிழர்களின் இன்னுமொரு நெடிய வரலாற்றுத் தொடர்ச்சிக்கும் – இருப்பிற்குமான இன்றைய கள யதார்த்த இருப்பு நிலை வரலாறு.

தெற்கே மடகஸ்கார் தொடக்கம் வடக்கே இமயமலை வரையில் பரவிக்கிடந்த ஆதித்தமிழர் நாகரிகம், சிந்துவெளி அகல்வாய்வின் வெளிப்பாடுகளாகவும், கடல்கோளுக்கு உள்ளாக்கப்பட்டு மூழ்கிப்போன இந்துசமுத்திர உட்கிடக்கைகளின் ஆய்வுத் தெறிப்புக்களாகவும் அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது. இத்தகைய தமிழர்களின் பரந்து விரிந்த பூர்விக பூமி இன்று, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, தமிழீழம் எனச் சுருங்கிக் கிடக்கிறது என்பதும் கவனத்திற்கொள்ளவேண்டிய இன்றைய கள யதார்த்தம்.

ஏறக்குறைய கடந்த மூவாயிரம் ஆண்டுகால வரலாற்றை உற்று நோக்கினால், ஆதித்தமிழர் பூமியாக விளங்கிய தென் இலங்கை தமிழர்களின் இருப்புநிலை மருவிய சிங்கள தேசமாகவும், தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு தேசங்களாகத் தமிழைக் கட்டி வளர்த்த அரசுகளும், சிற்றரசுகளும் இன்று தமிழர்களின் இருப்புநிலை மருவி மலையாள, கன்னட, தெலுங்கு தேசங்கள் எனப் பல புதியமொழிகளைப் பேசும் தேசங்களாகவும் உருமாறியுள்ளன.

இன்று உலகில் உள்ள பல மொழிகளை, எங்கே தோற்றம் பெற்றது, எங்கே வளர்ச்சி பெற்றது, எப்போது தோற்றம் பெற்றது என, ஒரு குறிக்கப்பட்ட பகுதிக்குள் இலகுவில் அடையாளப்படுத்த முடிகிறது. உதாரணம் சிங்களமொழி என்பது தென் இலங்கையில் தான் தோற்றம் பெற்றது, வளர்ச்சி பெற்றது, அதன் வயதெல்லை ஏறக்குறைய இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு உட்பட்டது என்பதை இலகுவில் அடையாளப் படுத்த முடிகிறது ஆனால் தமிழ்மொழி என்பது, எங்கே தோற்றம் பெற்றது, எங்கே வளர்ச்சி பெற்றது, எப்போது தோற்றம் பெற்றது என்பதனை மனிதகுல வரலாற்றைப் போன்று ஒரு சிறிய பகுதியினுள் அடையாளப் படுத்திவிட முடியாதுள்ளது. ஆபிரிக்காவில் இருந்து துருக்கியின் எல்லைகளைத் தொட்டு, ஈரானின் எல்லைகளை மேவி, ஆப்கானிஸ்தானை உள்ளடக்கி, சிந்துநதிக் கரையோரங்களின் வழியே இமயமலை அடிவாரங்களை உரசி, கொறியா - ஜப்பான் வரை நிண்டு, பசுபிக் தீவுகளின் வழியே அவுஸ்ரேலியா வரையிலுமான பெருவட்ட நிலப்பரப்பினுள் ஆதித் தமிழ்மொழியின் தோற்றுவாய்ச் சான்றுகள் பரவிக்கிடக்கின்றது. இவற்றில் எங்கே தமிழ்மொழி தோன்றியது, எப்போது தோன்றியது, எவ்வாறு பரவியது என்பவை பற்றி இன்னும் பல கண்டறியப்படாத நிலையிலேயே தமிழர் வரலாற்றின் தொன்மை வளர்ந்து கிடக்கிறது.

பல ஆயிரம் ஆண்டுகால மொழிக் குறிப்பு வரலாற்றைக் கொண்ட தமிழ், இன்றுவரையிலும் நீண்ட வரலாற்றின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டை மையப்படுத்தி அதனை அடியொற்றி பரவிக்கிடக்கும் தமிழர் பூமியில், தமிழ் மொழியையும், தமிழர் வரலாற்றையும் சீர் செழுமைப்படுத்தி வாழவைத்து நிற்கிறது. இங்கேதான் மானிட குலத்தின் ஆரம்ப மொழித்தோற்றத்தின் அடித்தடம் மாறாத தமிழ்மொழி பேசும் மக்கள் குழுமத்தின் வாழ்வியல் சுருங்கிப்போனதைக் கவனத்தில் கொள்ளும்போது, வெளித்தெரிவது, இயற்கை அனர்த்தங்களும், அந்நிய ஆக்கிரமிப்புக்களும், பெருந்தன்மையான விட்டுக்கொடுப்புக்களும், நான் என்ற ஆணவமும், ஆட்சி - அதிகார ஆசைகளும், உள் முரண்பாடுகளும் எனப் பல காரணிகள் தமிழ்மொழிச் சிதைப்பிற்கும், தமிழினச் சிதைப்பிற்கும் தமிழர் வரலாறு எவ்வாறு வழிகோலியது என்பதை உணரமுடிகின்றது. எனவே தமிழர்களின் எதிர்கால இருப்புநிலை வரலாறு எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டியது என்பது தொடர்பான வரலாற்று அறிவுத்தேடலின் முக்கியத்துவத்தை இங்கிருந்து ஆரம்பிக்க வேண்டியதும், அதனை அங்கிகாரிக்க வேண்டியதும் உலகில் உள்ள அனைவரதும் கடமையாகும்.

கேள்வி: இன்றைய கொதிகளத்தில் தமிழ்நாடு மற்றும் தமிழீழத்தில் தமிழர் இருப்பை பாதுகாக்கத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?

பதில்: தமிழர்கள் இன்று தமிழீழத்தின் விடுதலைக்காகவும் - தமிழ்நாட்டின் விடுதலைக்காகவும் அல்லது நிரந்தர இருப்பைப் பாதுகாப்பதற்காகவும் போராடி வருகின்றனர்.

இன்றைய அரசியல் இராசதந்திர போராட்ட வடிவத்தில், தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்டம் அல்லது நிரந்தர இருப்பைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்பது, இந்திய மத்திய அரசுடன் ஊடலும் – கூடலும் கொண்டதாகவும், உலகப் பரப்பில் தனி அரசாக செயற்படும் இந்தியாவின் உட்கட்டுமானத்தில் - உலகிற்கே முன்னுதாரணமான இந்திய மத்திய அரசுக்கு உட்பட்ட கூட்டாட்சி அரசாகச் செயலாற்றும் வகையில் ஒத்தாசை வழங்குவதாகவும் திகழ்கின்றது - இந்தக் கூட்டாட்சி வடிவம் என்பது உலகப் பரப்பில் இந்திய உபகண்ட மக்களின் விழுமியங்களைப் பாதுகாப்பதிலும், பலப்படுத்துவதிலும் ஓரளவு சிறந்த செயல்நிலை வடிவமாக செயலாற்றுகின்ற தோற்றப்பாடையும், முரண்பாடுகளின் நடுவிலும் உலகிலேயே பல மொழிபேசும் தேசிய இனங்கள் இணைந்து வாழக்கூடிய மாநில அரசு முறைமை வடிவமைக்கப்பட்டு தொடர்ந்தும் சீர்செழுமை செய்யும் கூட்டாட்சி முறைமையினைக் கொண்டதாக இந்தியா விளங்குகின்றது என்ற தோற்றப்பாட்டினையும் வெளித்தள்ளி நிற்கும் அதேவேளை, தமிழ்நாட்டில் தனி நாட்டிற்கான கோரிக்கைகள் ஆங்காங்கே உரிமைக் குரல்களாக எழுந்து நிற்கின்றது என்பதையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். இவை இவ்வாறு இருக்க, இந்திய மத்திய அரசுடனான பரஸ்பர உறவுக் கோட்பாடே தமிழ்நாட்டில் இன்று அதிகம் நிலைபெற்று நிற்கின்றது என்பதே இன்றைய கள நிலவரம்.

இத்தகைய உறவுத்தளத்திலேயே தமிழ்நாட்டின் விடுதலை அல்லது இருப்பிற்கான போராட்டம் என்பது ஹிந்தி, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் அல்லாத மொழிகளின் அல்லது அம்மொழிபேசும் மக்களின் திட்டமிட்ட உள்நுழைப்பு மற்றும் பிராமண - இந்துமத ஆதிக்கத் திணிப்பு போன்றவற்றிற்கு எதிரானதாக பெரிதும் அமையப்பெற்றுள்ளது. மேற் கூறப்பட்ட எதிர்ப்பு வடிவங்கள் என்பது, அவற்றின் ஆதிக்க மற்றும் ஆக்கிரமிப்பு நோக்கத்திற்கான எதிர்ப்பு வடிவங்களே அன்றி வெறுப்பு வடிவங்கள் அல்ல என்பதுடன், வடஇந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்குமான வடஇந்திய மொழிக்கலப்பு மற்றும் மதக்கலப்பு அடிப்படையிலான உறவென்பது பல ஆயிரம் ஆண்டுகால பழமையான உறவுப்பரிமான வடிவம் என்பதில் இருந்தே சிந்தித்துச் செயலாற்றவேண்டிய அல்லது செயலாற்றப்படுகின்ற தமிழர்களின் இருப்பிற்கான பாதுகாப்புப் போராட்ட வடிவமாகும் எனவே தமிழீழ விடுதலையை முன்னிறுத்திக் கண்முடித்தனமாகச் செயலறுவதன் மூலமாக கண்ணுக்குத்தெரியாத தமிழ்நாட்டின் அழிவிற்கு தமிழர்வரலாறு செயல்வடிவம் கொடுத்துவிடக்கூடாது.

மறுபுறத்தில் இன்றைய தமிழீழத்திற்கான அரசியல் இராசதந்திரப் போராட்ட வடிவம் என்பது, தென் இலங்கை அரசுடனான உரிமைப் போராட்ட வடிவமாகவும், இந்திய மத்திய அரசுடனான நெருங்கிய உறவுப் பிணைப்பாகவும், அதேநேரம் இந்திய மத்திய அரசின் ஏமாற்று அல்லது துஸ்பிரயோக அரசியலுக்கு எதிரான உரிமைகோரும் அமைதிவழி அரசியல் எதிர்ப்புப் போராட்ட வடிவமாகவும் அமையப்பெற்றுள்ளது.

1987 இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழத்தில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளுக்கும் இடையிலான போர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அண்மைவரை, தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது இந்திய மத்திய அரசுடனும், அதனை மாறிமாறி ஆளும் கட்சிகளுடனும் மிகக் குறைந்த, மட்டுப்படுத்தப்பட்ட, மறைமுகமான அரசியல் உறவு – வெளிப்படையான எதிப்புப் போராட்ட வடிவம் என்ற அடிப்படையிலேயே அமையப்பெற்றிருக்கின்றது.

இந்தநிலை என்பது இந்திய மத்திய அரசுக்கு எதிரான தமிழ்நாட்டின் போராட்ட வடிவத்துடன் ஒத்ததாக இருந்தமையால் தமிழீழ விடுதலைப் போராட்டம், தமிழ்நாட்டின் தமிழ்த் தேசிய வாதிகளின் போராட்டம் மற்றும் திராவிடச் சித்தாந்த வாதிகளின் போராட்டம் என அனைத்துமே இந்திய மத்திய அரசை நோக்கிய ஒரே வடிவிலான அரசியற் போராட்டம் என்ற வகையில், ஒரேதிசையில் மிகவும் காத்திரமான முறையில் அமையப் பெற்றிருந்தது.

ஆனால் இன்றைய களச் சூழல், தமிழீழ விடுதலைப் போராட்ட வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, இந்திய மத்திய அரசுடன் இணைந்து, இந்தியாவின் பிராத்திய உறவில் நல்லுறவை ஏற்படுத்தி, ஆரோக்கியமான விதத்தில் பங்கெடுக்கவேண்டிஇருப்பது தமிழீழ விடுதலைக்கும், இந்தியாவின் உள்முரண்பாடுகளைக் கடந்த இந்திய உபகண்டப் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதற்கும் மிகவும் அவசியமாகின்றது.

இந்திய மத்திய அரசை மாறிமாறி ஆட்சி செய்யும் அகில இந்தியக் கட்சிகளின் பிரமுகர்கள் சிலர் இந்தியா முழுமையிலும் ஹிந்திமொழிப் பரம்பலையும், பிராமண வர்க்க ஆதிக்கத்தையும் திணிப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் முயன்றுவரும் இவ் வேளையில், தமிழீழ விடுதலை சார்ந்த விடயங்களில் இத்தகைய அகில இந்தியக் கட்சிகளுடன் அனைவரும் இணைந்து செயலாற்றுவது தமிழ்நாட்டிற்குள் இக்கட்சிகளின் உள்நுழைவிற்கு வழி ஏற்படுத்திவிடக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் இருக்கின்றது என்பதனை மனதில் நிறுத்தி, அவ்வாறான நிலையில் இருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்கக் கூடியவாறான முறையில் போராட்ட வடிவங்களையும், உறவுமுறைகளையும் அமைத்துக் கொள்வது அனைவரினதும் கடமைக்குரியதாக இருக்கும் அதேநேரம், இதனை அகில இந்தியக் கட்சிகளின் மாநில உரிமைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் ஆரோக்கியமான முன்னெடுப்புகளுக்கு மாறானதாகவோ, அதிகூடிய அதிகாரம்கொண்ட இந்திய மத்திய அரசின் கூடாட்சி ஒருமைப்பாடிற்கும் வளர்ச்சிக்கும் எதிரானதாகவோ அல்லது இந்தியாவின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்குக் குந்தத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதாகவோ இருக்கக்கூடாது என்பதையும் கருத்திற்கொண்டு செயலாற்றவேண்டும். 

அதுமட்டுமன்றி அகில இந்தியக் கட்சித் தலைமைகளும், தமிழ்நாட்டில் செயலாற்றும் அவ்வகையான கட்சிகளின் மாநிலத் தலைமைகளும், அதன் அங்கமாகப் பணியாற்றும் தமிழ்நாட்டு மக்களும் இதனைப் புரிந்து கொள்வதுடன் தமிழ்நாட்டின் இருப்பை இவ்வாறான பிறழ்வுகளில் இருந்து பாதுகாக்க ஆரோக்கியமான தீர்வினைத் தேடவும், அதன்மூலம் தமிழ்நாட்டின் தனித்துவத்தை சீர்செழுமைப் படுத்தியவாறே இந்தியாவையும் சீர்செழுமைப்படுத்தும் வகையில் செயலாற்றவேண்டும் என்பதே தமிழ்நாடு மற்றும் இந்திய ஒருமைப்பாட்டின் பலம். எனவே தமிழ்நாடும், தமிழீழமும் இதனை இந்திய மத்திய அரசிற்கும் இந்திய உபகண்ட மக்களுக்கும் எடுத்துரைக்கும் வகையில் செயலாற்ற வேண்டியது இன்றைய காலத்தின் கடமையாகும்.

தமிழீழத்திற்கும் இந்திய மத்திய அரசுக்குமான உறவுமுறை வேறானது, அதுபோலவே தமிழ்நாட்டிற்கும் இந்திய மத்திய அரசுக்குமான உறவுமுறை வேறானது என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழீழத்தை இந்திய மத்திய அரசால் சனநாயக அதிகாரம் கொண்டு அடக்கி அளிக்க முடியாது, ஆனால் தமிழ்நாட்டை கூட்டாற்சி சனநாயக முறைமைகொண்டு இந்திய மத்திய அரசால் சிதைத்து அழிக்க முடியும். அது அகில இந்தியக் கட்சிகளின் வடிவிலும் வருவதால் தமிழீழ விடுதலை விடயத்தில் இணையவேண்டிய இடத்தில் இணைந்தும், தமிழீழ விடுதலை மற்றும் தமிழ்நாட்டின் இருப்புநிலை தொடர்பான போராட்டங்களை ஏமாற்றும் இடத்தில் அதனை எதிர்த்தும் அல்லது தோலுரித்தும் காட்டுவதுடன், அகில இந்தியக் கட்சிகள் மத்தியில் ஆரோக்கியமான மாற்றம் ஏற்படும் வரையில் தமிழ்நாட்டின் விடுதலையை அல்லது தமிழ்நாட்டின் இருப்பைப் பாதுகாக்கும் போராட்ட வடிவத்தினை தொடர்ந்தும் இடையறாது இதே உறவுமுறைகொண்ட பாதுகாப்பு வடிவத்தில் முன்னெடுப்பதே இந்திய உபகண்டத்தில் தமிழர்களின் இருப்பையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வழிசெய்யும் என்பதை அனைத்துத் தமிழர்களும் கவனத்திற் கொண்டு, போராட்ட வடிவங்களையும் உறவுமுறைகளையும் இந்திய மத்திய அரசுடனும், அகில இந்தியக் கட்சிகளுடனும் ஆரோக்கியமான உறவைப் பலப்படுத்தி முரண்பாடற்ற முறையில் முன்னகர்த்தினால் இதனை வெல்வது மிகவும் இலகுவானதே.

இதுவரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தூண்களாகவும், தமிழ்நாடுத் தேசிய இருப்பின் தூண்களாகவும் பெரிதும் விளங்கும் தமிழ்நாட்டின் தமிழ் தேசிய வாதிகளும், திராவிடச் சித்தாந்த வாதிகளும் இன்றைய சூழமைவில் தமிழீழ விடயத்தில் இந்திய மத்திய அரசை நோக்கியும், சர்வதேசத்தை நோக்கியும் செயலாற்ற வேண்டிய அல்லது போராடவேண்டிய இடங்களில் அகில இந்தியக் கட்சிகளுடன் ஒன்றாக ஒருமேடையில் தங்களின் தனித்துவத்தை இழந்துவிடாது - சபை நாகரிகத்துடன் பங்குபற்றுவதும், தமிழ்நாட்டின் விடயத்தில் உள்முரண்பாட்டின் காத்திரமான அரசியல் வடிவமாக தேவைக்கேற்ப ஒன்றுபட்டும், தேவைக்கேற்ப எதிர் - எதிர் மேடைகளிலும் வழமைபோன்று செயலாற்றுவது தமிழ்த் தேசியத்தின் பாதுகாப்பிற்கும், இந்தியாவின் பாதுகாப்பிற்குமான இன்றைய ஆரோக்கியமான அரசியல் அணுகுமுறைகளாகும்.

இதுவரை தமிழ்நாட்டின் தமிழ்த் தேசிய வாதிகளின் மேடைகளிலும், திராவிடச் சித்தாந்த வாதிகளின் மேடைகளிலும் உரிமையுடன் பங்குபற்றிய தமிழீழத் தமிழர்கள் இனி அகில இந்தியக் கட்சிகளின் அரசியல் மேடைகளிலும் அதே உரிமையுடன் பங்குபற்றத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதும், தமிழ்நாட்டின் அரசியற் கொதிகளத்தில் பெரிதும் தலையிடாது சமநிலை பேணிக்கொள்வதும் - அதனை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் ஏற்றுக் கொள்வதும் தமிழர்கள் தமிழீழத்திற்காக ஆற்றவேண்டிய இன்றைய காலக் கடமையாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும், 2009 ஆம் ஆண்டு மே மாத நடுப்பகுதிவரை அவ்வியக்கத்தை நேரடியாகத் தலைமைதாங்கிய தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களும் என்றுமே இந்தியாவை எதிரி நாடாகக் கருதியதில்லை, மாறாக இந்தியாவின் அணுகுமுறைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அணுகுமுறைகளுக்கும் இடையில் ஏற்பட்ட மாறுபாடுகளின் விளைவாக ஏற்பட்டதே இந்திய - தமிழீழப் போரும், அதன்விளைவாக ஏற்பட்ட தாக்கங்களும் வரலாற்றின் விளைவுகளாக அமையப்பெற்றுள்ளது.

இந்திய உபகண்டம் பல உள்ளகப் போர்களையும், பல உள்ளக முரண்பாடுகளையும் சந்தித்துள்ளது. ஆனால் அவற்றைக் கடந்து ஒரு கூட்டு தேசமாக மீண்டும் இணைந்து பயணித்துள்ளது. காந்தியும், அம்பேத்காரும், சுபாஸ் சந்திரபோசும், பகத்சிங்கும், நேருவும், இந்திராகாந்தியும், ரஜீவ்காந்தியும், வாச்பாயும், அண்ணாவும், பெரியாரும், காமராயரும், எம்ஜிஆரும், கருணாநிதியும், ஜெயலலிதாவும் என நீளும் இந்திய உபகண்டத்தின் தலைவர்கள் பட்டியலில் அடிமைப்படுத்தலுக்கு எதிராக எழுந்த வீரியம் மிக்க விடுதலை வழிகாட்டியாக பிரபாகரன் அவர்களும் விளங்குகிறார். மேல் உள்ள இந்தியத் தலைவர்கள் இந்தியாவினுள் புரையோடிப் போயிருந்த அடிமைத் தழைகளை உடைப்பதற்காகவும், உலகில் அடிமைத்தழையற்ற இந்திய உபகண்ட இருப்பைப் பாதுகாப்பதற்காகவும் வெவ்வேறு வழிகளில் போராடி, வழிகாட்டிய தலைவர்களாவார்கள், அந்தவரிசையில் பிரபாகரன் அவர்களும் அதற்குரிய அத்தனை சிறப்பு அம்சங்களையும் கொண்டவர் என்பதை உளமார ஏற்று, எல்லாத் தரப்பினரும் அவரையும், அவர் நடத்திய விடுதலைப் போராட்டத்தையும் உரியமுறையில் அங்கீகரிக்க வேண்டியதும், இந்திய உபகண்ட ஒற்றுமையைக் கருத்திக்கொண்டு அனைவரும் ஆற்றவேண்டிய வரலாற்றுக் கடமையாகும். 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இதுவரை மாறிமாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளுக்கும் அல்லது இந்தியாவை இதுவரை மாறிமாறி ஆட்சி செய்த அகில இந்தியக் கட்சிக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் மட்டும்தான் இருத்தது என்ற வடிவநிலை மாற்றப்பட்டு, ஒருவருக்கு மற்றவர் ஆற்றிய நேரடி மற்றும் மறைமுகமான ஒத்துழைப்புக்கள் மீளவும் சீர்த்தூக்கி ஆராயப்பட்டு, தமிழ்நாட்டின் உள்ளக அரசியல் கொதிகளத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் ஒட்டுமொத்த இந்தியாவின் நேச சக்தியாக விளங்கினார்கள் என்ற உன்னத நிலையை உணரவைத்தல் வேண்டும். இதுவே தமிழ்நாட்டின் அரசியற் கொதிகளத்தில் தமிழ்நாட்டிற்கும் தமிழீழத்திற்கும் இடையில் பாகுபாடற்ற அரசியல் நிலை தோற்றம் பெறவும் இந்திய - தமிழீழ நட்புறவு நிலைக்கவும் வழிசெய்யும்.

தமிழர்கள் ஒரு பலமான இனம், பெரும் பேரரசாக உலகில் ஆட்சி நடத்திய வலிமையான இனம், மீண்டும் தமிழர்களே தமிழர்களை ஆளக்கூடிய தனியரசுகளை உருவாக்க வல்ல வலிமை கொண்ட இனம் என்ற அடிப்படையில், வீரியம் மிக்க தமிழ்த் தேசிய சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுக்கும் தேசிய வாதிகள் தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும் செயற்படுகின்றார்கள் என்பதும், அவர்களின் சிந்தனையில் இந்திய மத்திய அரசிடம் தமிழர்கள் மண்டியிடத் தேவையில்லை, இந்தியா என்பது ஒரு தேசமே அல்ல என்பதுடன் இந்திய மத்திய அரசும், இலங்கை அரசும் தமிழர்களை ஆக்கிரமித்து தமிழின அழிப்பை நிகழ்த்தும் அந்நிய அக்கிரப்பு அரசுகள் என்ற கருத்துநிலையும் கொண்டுள்ளனர். 2009 மே மாதம் வரையிலான தமிழீழ விடுதலைப் போராட்டம் இத்தகைய சிந்தனைக்கே செயல்வடிவம் கொடுத்ததாகவும் நம்புகின்றனர். இத்தகையதோர் நிலையில் தமிழீழத்தின் தனித்துவத்தையும் இருப்பையும் பாதுகாக்க தென் இலங்கையிடம் இருந்து தப்பித்து இந்திய மத்திய அரசிடம் மாட்டிக் கொள்வதாகவே கருதுகின்றனர். இன்றைய புவிசார் அரசியல் நிலைமைக்கு அமைவான, இன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிலான உலக ஒழுங்கில் இந்தியாவின் ஒருமைப்பாடு அவசியமானதாக இருக்கும் இன்றைய நிலையில், இந்திய மத்திய அரசால் தமிழ்நாடு அளிக்கப் படுவதைக் காட்டிலும் கடந்த எழுபது ஆண்டுகளில் தென்னிலங்கையால் தமிழீழம் அழிக்கப்பட்டதே அதிகம். இந்த நிலையில் தமிழீழம் என்பது பேரளவில் தனிநாடாகவும் - செயலளவில் இந்தியாவுடன் இணைந்த தமிழ்நாட்டின் இணைபிரியா மாநிலம் போன்று செயலாற்ற வல்ல சூழமைவு ஒன்றைத் இத்தகைய தமிழ்த் தேசிய வாதிகள் உருவாக்கத் தவறுவர்களேயானால், ஆணவம், தலைக்கனம், சாதிக்க முடியாததைத் சாதிக்கலாம் என்ற வறட்டு நம்பிக்கை என்பன ஒருபுறத்திலும் மறுபுறத்தில், மற்றுமொரு தமிழர் தரப்பின் செயற்பாடுகளான விட்டுக்கொடுப்பு, பரஸ்பர நட்புடன் புதிய உலக ஒழுங்கிற்கேற்ப சுகபோகமாக வாழுதல், பதவியாசை, அறிவீனமான வாழ்வு என்பது போன்ற சிந்தனைத் தெளிவற்ற செயற்பாடுகளுக்கு ஆளாக்கப்பட்டு, தமிழீழதேசம் அழிக்கப்படும். 

தென்னிலங்கை சிங்கள தேசமாக மாறியதுபோன்றும் ஆந்திர, கன்னட, கேரள தேசங்கள் உருவானது போன்றும், தமிழீழம் மிகவிரைவாகவே சிங்களதேசமாக மாற்றப்படும் என்பதே கள யதார்த்தம். எனவே இன்றைய இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தையும், பௌத்த சிங்கள இனவாதத்தின் அதி தீவிரமான தமிழின எதிர்ப்பு மனோபாவத்தையும் கருத்தில்கொண்டு யாருக்கும் அடிபணியாத தமிழ்த் தேசியவாதிகள் - தமிழீழத்தின் இருப்பைப் பாதுகாக்க வேண்டியதும், நெருக்கடி நேரத்தில் தமிழர்களின் இருப்பைப் பாதுகாக்கக் கூடிய அணுகுமுறைகளை ஆராய்ந்து அணுகவேண்டியதும், அதற்கேற்ப, அதற்குச் செயல்வடிவம் கொடுக்கவேண்டியதும், காலத்தைக் கருத்திற்கொண்டு அவர்கள் ஆற்றவேண்டிய தமிழ்த்தேசியப் பணியாகும்.

மறுபுறத்தில் தமிழ்நாட்டிற்கும், தென் இலங்கைக்குமான உறவும் தமிழ்நாட்டிற்கும், தமிழீழத்திற்குமான உறவும் வேறானது என்பதையும், அதேசமயம் தமிழ்நாட்டின் இலங்கையுடனான உறவென்பது இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையுடன் பின்னிப் பிணிந்ததே என்பதனையும் அனைவரும் அறிவியல்பூர்வமாக விளங்கிக்கொள்ளல் வேண்டும்.

(தொடரும்……………..)