16மே 2009

16மே 2009
17 MAY 2009

16 மே 2009 (1)

நேற்றைய இரவு அமைதியாக இருந்த போதிலும் நேரத்தோடு எழுந்து இருளோடு காலைக்கடனை முடித்துக் கொண்டோம். வழமைப் போலவே நேரம் வேகமாக முடிந்திருந்தது. 

24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் ஆளில்லா வேவு விமானத்தை யாரும் இப்போது கணக்கெடுப்பதே இல்லை. 

என்ன நடக்கப் போகிறது என்பது யாருக்கும் தெரியாது அடுத்த கட்டத்துக்கான ஒரு தொடக்கப் புள்ளிக்காக அனைவரும் காத்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. 

எனக்கான உத்தரவு என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று எனக்குள் ஒரு உந்துதல். 

தமிழீழ வைப்பக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதால் சுதாவுக்கு எந்த கடமையும் மிச்சம் இல்லை என்பது எனது எண்ணம். 

ஆனால் எனக்கு அப்படி அல்ல.

அப்போது இரண்டு பேர் வந்து "குகா அன்ரி உங்கள அண்ணி வரட்டாம்" உடனடியாகவே பதட்டத்துடன் எழுந்து புறப்பட ஆயத்தம் ஆனார். 

"தம்பி ஆட்கள் குருவியும் ( ராம் அவர்களின் மனைவி ) பிள்ளைகளும் நிற்கினம் " என்ற குகா அக்கா (கேணல் சங்கர் அவர்களின் துணைவியார்) Tஅவர்கள் "குருவி அக்கா நீங்களும் வாங்கோ" என்றார்கள். 

எனக்குப் புரிந்து விட்டது இயக்கத்தின் அதி முக்கிய பிரதிநிதிகள் கொண்ட அணி ஒன்று புறப்பட தயாராகிறது என்பது. எப்படி செல்கிறார்கள் என்பது முக்கியமல்ல ஆனால் புறப்பட தயாராகிறார்கள் என்பது என்னால் புரிந்து கொள்ளப்பட்ட இறுதிச் செய்தியாக இருந்தது. Tநாமும் தயாராக வேண்டும். 

குகா அக்கா சுதாவை இறுக அணைத்து கலங்கிய கண்களுடன் விடைபெற்றார். குருவி அக்காவும். குகா அக்கா எங்கள் இருவருக்குமே தாயைப் போன்றவர். அவரது வீடு எப்போதும் எங்களுக்காக திறந்ததே இருக்கும். அங்கு வைத்து தான் அண்ணி வத்சலா அக்கா ( PO வின் மனைவி) இந்திரா அன்ரி எல்லோரும் சுதாவுக்கு நெருக்கம். எனக்கும் கூட. இவர்களின் வெளித் தேவைகளுக்காக குகா அக்காவின் பொருத்தமான கண்டுபிடிப்பு சுதா. என் மனைவி குறித்து எப்போதும் எனக்கு பெருமையே. 

அப்பு ........... இந்தா எணை . இது சங்கர் அப்பாடை பிஸ்டல். இவ்வளவு நாளும் கவனமா வச்சிருந்தனான் இதை வேற யாரட்டையும் கொடுக்க விருப்பமில்லை. நீ கவனமா வைத்துக்கொள்ளப்பு. CZ100 ஒன்றை பெட்டியுடன் எடுத்து நீட்டினார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என்னிடம் வேறு எனது துப்பாக்கியுள்ளது. எனது ஆயுதத்தையே நான் என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை. அத்துடன் இதுவும். "இல்லை அக்கா அனுமதி இல்லாமல் நான் இதை கையேற்க முடியாது" என்றேன். 

உடனே அருகில் நின்ற அவவின் உதவியாளர் அதனை தம்மிடம் வாங்கி வைத்துக்கொண்டார். 

அவர்கள் எம்மிடமிருந்து சென்றுவிட்டார்கள் என்றதும் எனக்கு கடகடவென எல்லாம் புரிந்து போனது. நாங்கள் தனித்து விட்ட உணர்வு. சிறிது அவகாசமே இருப்பதாக மனம் என்னைத் தள்ளியது.

என்ன இருந்தாலும் எனக்கு உத்தியோகபூர்வமான முடிவு தெரிந்தாக வேண்டும். எனவே எனது பொறுப்பாளரை நோக்கி செல்ல முடிவெடுத்து சுதாவையும் கூட்டிக்கொண்டு நடந்தேன். 

எனது வேகமான நடை எனது துப்பாக்கி தடுத்துக் கொண்டிருந்தது கோல்சர் நெஞ்சில் அடித்து அடித்துக் கொண்டிருந்தது. 

வேவு விமானம் மேலே வட்டமிட அவ்வப்போது ஓரிரண்டு 60 mm செல்கள் அல்லது ரொக்கெட்கள் எமது பகுதிக்குள் இருந்த வெடிபொருள் நிரப்பிய வாகனங்களின் மேல் விழுந்து வெடித்துக் கொண்டிருந்தன. அவை குறி தவறாத இலக்குகளாகவும் வெடிப்பின் போது மிகுந்த சேதத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன. மரங்களுக்கு அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் கூட திடீரென்று வெடித்து எரிந்தன. 

உடனடியாக நிலத்தில் விழுந்து பாதுகாப்பு தேடுவது சிரமமாக இருந்தது. எனவே கோள்சரைக் கழட்டி வைக்கலாமா என்று யோசித்தேன். அதனை செய்ய முயன்ற போது எனது மனைவி பத்திரகாளியானாள். 

வார்த்தைகள் ஒருமையில் வந்தன. 

" உனக்கு அண்ணை சொன்னவரா ஆயுதத்தை கழட்டி வைக்க சொல்லி" 

"இதற்காக எத்தனை பேர் வீரச்சாவு அடைந்திருப்பார்கள் தெரியுமா?" 

 "நீ போறதென்றால் போ நான் வரேல்லை"

என்னடா இது நான் இன்னும் போவதாக முடிவெடுக்கவே இல்லை அப்படி இருக்க ஏன் இந்த ஏச்சு எனக்கு? 

இறுதி நேர முடிவுகளில் எனக்கும் அதே கோபம் அதே ஆத்திரம் இருந்தாலும் 

அவளை சமாதானப்படுத்தி அவளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் என்னிடம் இந்த போராட்டம் தந்த ஒரே சொத்தாக தேசப்பற்றுள்ள ஆளுமை அர்ப்பணிப்பு நிறைந்த என் மனைவி மட்டுமே.

போராட்டத்தின் நிறைவுக் கட்டம் அத்தோடு தன் வாழ்வின் மிகுதி நாட்கள் குறித்த அச்சம் அவளுள் பரவுவதை காண முடிந்தது. 

அவளைக் குறித்து நான் எப்போதுமே பெருமைப்படுவதுண்டு எனது இலட்சிய வாழ்வில் அவள் எனக்கு மனைவியாக கிடைத்தது எனது வரமே. கோள்சரை வாங்கி அவள் கட்டிக்கொண்டாள். துப்பாக்கி என்னிடம். செல் அருகில் வீழ்ந்த போது கூட அவள் தரையில் அமர்ந்து காப்பெடுக்கவில்லை. எப்படியாவது சாவு தானாக வந்து விடாதா என்று ஏக்கம் அவளுக்கு. ஆனால் இன்னும் உத்தியோக பூர்வ முடிவு அறிவிக்கப்படாததால் எனது பொறுப்பாளர் இருக்குமிடம் செல்ல முயன்றோம். 

வழியில் அறிவண்ணையை கண்டு நிலைமை பற்றி கேட்டோம். அவரும் சரியான பதில் தனக்கும் தெரியாது என்றார். 

அருகில் காயக்காரர்கள் . எல்லாளன் நடவடிக்கை யில் சிறப்பாக செயற்பட்டு தலைவரிடம் மறமானி விருது பெற்ற தமிழ்மாறன் மாஸ்டர் கழுத்தில் காயத்துடன் கோமா நிலைக்கு சென்று கொண்டிருந்தார். அவருடைய உயிருக்கு ஏதாவது என்றால் தானும் குப்பி கடிக்கப் போவதாக அவரது மனைவி அழுது புலம்பிக் கொண்டிருந்தார். 

தமிழ்மாறன் மாஸ்டரைப் பாதுகாக்க வேண்டும். அடுத்து அருகே தமிழ்வாணி தர்சனா போன்றவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும். அவர்கள் மிகப் பெரும் நேரடி சாட்சிகளாக இருப்பார்கள். அடுத்து எமது நிலை என்ன என்பதை அறிய வேண்டும். உடனே அருகில் இருந்த வாமன் டொக்டரது மெடிசின் இல் உயிர்காக்கும் ஊசி ஏதாவது கிடைக்குமா என்று பார்த்துவர நானும் சுதாவும் செல்ல தமிழ் வாணியும் தர்சனாவும் தாங்கள் வருவதாக எம்மோடு வந்தார்கள். நல்ல வேளையாக வாமன் அண்ணை வாசலிலேயே சாறத்துடன் நின்றிருந்தார். தொடர்ச்சியான நீண்ட ஓய்வில்லாத மருத்துவ பணிக்கு நிறைவெழுதி விட்டவராக கையை கழுவித் துடைத்துக் கொண்டு " தம்பியாக்கள் மனம் தளர்ந்து போய்விடாதீர்கள். இயக்கம் வெல்லும். 

பரவாயில்லை அண்ணை எங்களுக்கு அவசரமாக உயிர்காக்கும் ஊசி மருந்து தேவை உங்கள் இடத்தில் இருக்கிறதா? 

சரியாக தெரியவில்லை செல் தாக்குதலில் பிறிஜ் எல்லாம் உடைந்து போயிற்று. பரவாயில்லை நாங்கள் பார்க்கிறோம் . தமிழ்வாணி மருத்துவ மாணவி என்பதால் அவவுக்கு தெரியும். உடைந்து கிடந்த அந்த இறுதி மருத்துவ அறையில் சில மருந்துகளை அவர்கள் சேகரித்து இருக்க வேண்டும். இருவரையும் அறிவண்ணையிடம் மீண்டும் விட்டுவிட்டு.

எனது பொறுப்பாளரைத் தேடி சென்றேன். அப்போது தொலைத் தொடர்பு ஆசிரியரும் மிகுந்த ஒழுக்கம் உள்ள போராளியுமான உலக நம்பி தனிமையில் தனது மேற்பொறுப்பாளர்களை வாய்க்கு வந்த மாதிரி ஏசிக் கொண்டிருந்தார். "பாருங்க...... நான் என்ன பிழை விட்டனான் நான் வரமாட்டேன் என்று சொன்னேனா. ஏன் அண்ணையோட போற ரீமில என்னை சேர்க்காமல் விட்டவர்கள் " 

அண்ணை இது கொமியூனிகேசன் பிரச்சனையாக இருக்கும் இப்பத்தான் ரீம் ரெடி பண்ணுறீனம். கட்டாயம் கூப்பிடுவினம். கொஞ்சம் பொறுமையாக இருங்கோ. வாறன் என்று அறிவண்ணை சொன்ன குறிப்பில் சென்று எனது பொறுப்பாளரை கண்டேன். 

அறிவண்ணை சொன்ன வழியால் வந்த நாங்கள் எமது பொறுப்பாளரைக் கண்டேன். ஐ பங்கருக்குள் படுத்திருந்தார்.

எனது பதினாறு வயதிலிருந்து அவாிடமே வளர்ந்திருந்தேன். மிகவும் இறுக்கமானவர் கட்டுப்பாடானவர் தன்னுடன் நிற்கும் போராளிகள் எப்போதும் 100க்கு 100 சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். மிகச் சிறந்த நிர்வாகி இவரைப் பற்றி தனி அத்தியாயமே எழுதலாம் அதனால் அதை அதிகம் நான் சொல்லப் போவதில்லை.

நிறைய தளபதிகளுடனும் பொறுப்பாளர்களுடனும் கடமை செய்து இருக்கிறேன். ஆனால் இவர் அளவுக்கு எவரையும் எனக்குப் பிடித்ததில்லை. ஒரு தந்தை மகன் போன்ற உறவு எங்களுக்குள்.

எனக்கு அவரைப் பார்த்தபோது தமிழீழ விடுதலைப் போராட்டமே சரிந்து விழுந்து ஒரு ஐ பங்கருக்குள் படுத்து கிடப்பது போல் இருந்தது. அவரைக் கண்டதும் நான் அழ ஆரம்பித்து விட்டேன். அவரது கண்களும் கலங்கியதை காண முடிந்தது.

அவரது இடத்தில் இருந்து வருகிறோம் என்றால் இயக்கத்தின் எல்லா கதவுகளும் திறக்கும் இது எங்கள் அனுபவம். தலைவர் எங்கள் முகாமுக்குள் கதைத்துக்கொண்டிருக்கும் போதே நாங்கள் வெளியில் சென்று வரக்கூடியளவுக்கு அவரது போராளிகள் நம்பிக்கைக்குாியவர்கள். அவருக்கு அண்ணை என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் தெரியாது அவரைப் பற்றிய அனைவரது மதிப்புகள் எல்லாம் ஒரு நொடியில் என் கண்முன்னே வந்து சென்றன.

அழாதே என்றார். அது அழுவதற்கான நேரம் இல்லை என்பது தெரியும். இருந்தாலும் அப்போதுதான் அழ முடியும் எங்களால் நாங்களும் மனிதர்கள் தானே. அவருக்கு முன்னால் மட்டுமே அழத் தோன்றியது.

எவ்வளவோ கற்பனைகள் கண்டு வைத்திருந்த தேசம் ஈழ தேசத்துக்கு நல்லது புரியக்கூடிய எந்த ஒரு விடயத்தையும் சிந்திக்கவும் திட்டமிடவும் உருவாக்கவும் எங்களுக்கு அனுமதி இருந்தது.

தமிழீழ தேசத்தின் அதி உச்ச செயல்பாடுகளில் அதிகாரங்களில் செயற்பட முடிந்திருந்தது. எல்லா தமிழீழக் கனவுகளும் முள்ளிவாய்க்கால் மண்ணில் கரைந்து போவதை உணர்கிறபோது ஏற்படுகின்ற வலி வார்த்தைகளில் எழுத முடியாது.

அவரால் எழுந்து நடக்க முடியாது 1991 ஆம் ஆண்டில் இருந்து அவர் சக்கர நாற்காலியிலேயே இருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தார். அவரோடு எப்போதும் குறைந்தது மூன்று பேர் இருக்க வேண்டும்.

அன்றும் அவரைச் சுற்றி மூன்று பேர் இருந்தார்கள். ஆனால் முக்கியமானவர்கள் யாரையும் காணவில்லை. காலம் அவர்களை வேறு கடமைகளுக்காக அனுப்பிவிட்டது போலும்.

அங்கிருந்தவர்களால் அவரை விட்டு நகர முடியாது. பொறுப்பு நிலையில் இருந்தவர்கள் யாரும் அவ்விடத்தில் இருக்கவில்லை.

அப்போ என்ன அடுத்த கட்டடம் என்ன? அண்ணையோட காட்டுக்குள்ள போற ரீமோடை போகப் போகிறோம். முத்து சொன்னான். அவரது பராமாிப்பாளன். அவரது எல்லாமே அவன்தான்.

உடனே சுதா என்னிடம் நாங்களும் வாறம் என்று சொல்லுங்கோ. நான் அண்ணை நாங்களும் வாறம் என்றேன். 

இல்லை இது கடினமான பயணம் நீங்கள் தாங்க மாட்டீங்கள். என்றார். அப்போ நாங்கள் என்ன செய்யிறது என்றேன்.

நீங்கள் நீங்கள் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்துகொள்ளுங்கோ. என்றார் 

இந்தச் செய்தியை அவாிடமிருந்து நான் எதிர்பார்க்கவேயில்லை. அவரா இப்படி கூறினார். அவர் ஒன்றைக் கூறினால் அது முடிந்த முடிவாகத்தான் இருக்கும். இயக்கத்தின் நிலைப்பாடு அதுவாகத்தானிருக்கும்.

சாி அந்த வேளை வரும்போது பார்த்துக்கொள்வோம். என்று விட்டு முத்துவிடம் மற்றவர்கள் பற்றி விசாாித்தேன். அவன் சொன்ன விடயங்களையும் வெளியில் நடைபெறும் விடயங்களையும் வைத்துப் பார்க்கும் போது நிலைமையின் சிக்கலும் பாரதுாரமும் புாிந்தது. சாி எனக்கு கடைசிக் கடமை வந்து விட்டது.

அண்ணையோட போகிற ரீமோடை இவர்களைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கு முதல் இரட்ணம் மாஸ்டரின் இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்தான் அப்போது இயக்கத்திற்குப் பொறுப்பாளர். தலைவரைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே அனைவரதும் இலக்காக இருந்தது.

காலையில் மாஸ்டாின் இடத்தைத் தேடிப் புறப்பட்ட ஒருவர் இன்னும் திரும்பி வரவில்லை. அன்னெருவரும் கூட. மிகக் குறுகிய காலத்திற்குள் எல்லாம் நிகழ்ந்து முடிய வேண்டும். சவாலை நானாகவே என் தலையில் சுமத்திக்கொண்டேன்.

அப்படியிருந்தும் எனது பொறுப்பாளர் நம்பிக்கை தளரவில்லை. அவன் இப்ப வந்திடுவான். என்றே நம்பியிருந்தார்.

எனக்கு நம்பிக்கையில்லை.

சுதாவிடம் கூறினேன். அது எனது வேலை நான் செய்திட்டு வாறன் நீங்கள் இரவு தங்கியிருந்த இடத்தில் காத்திருங்கள் என்று அவவைக் கொண்டுபோய் விட்டுவிட்டு. வோக்கி ஒன்றுடன் நடந்தேன்.

இந்தச் செயற்பாட்டின் போது வீரச்சாவடைந்தாலும் எனக்கு திருப்தியான சாவாக அமையும் தானே.

வழியில் மஜித் அண்ணையைக் கண்டேன். அண்ணை ..................அண்ணையை மாஸ்ராிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதனால் எனக்கு மாஸ்டரின் இடத்தை காட்ட முடியுமா?

மாஸ்ரர் இருக்குமிடத்தில்தான் அண்ணையிருப்பார். எனவே அவரை மாஸ்டருடன் இணைத்து விட்டாலே போதும். 

மஜித் அண்ணைக்கு என்னை நன்றாகத் தொிந்ததால் இப்படியே நேராக போங்கோ அதில் ஒரு சிறிய கிணறு வரும் அதிலிருந்து கொஞ்சத் துாரத்தில் அருணா நிற்கிறார் அவரோடை கதையுங்கோ. அருணாவும் நானும் ஒரே பயிற்சிமுகாம் என்பதால் அவரை கண்டு பிடிப்பதில் சிரமம் இருக்கவில்லை.

அருணாவின் உதவியுடன் நந்திக்கடலின் கரையிலிருந்த மாஸ்டரின் பங்கரை புறப்பட்ட பதினைந்து நிமிடத்திற்குள்ளாகவே கண்டுபிடிக்க முடிந்தது.

நான் உள்ளே செல்லவில்லை. அது எனது தேவையுமில்லை. எனவே நான் திரும்பி வந்து. என்னோடு விதுசனை அழைத்து வந்து மாஸ்ராின் இடத்தில் விட்டேன். அவனிடம் மாஸ்டர் …………. அண்ணைக்கு மட்டுமே சீற் என்று சொல்லுங்கோ என்றிருந்தார்.

அவர் சொல்லிக் கொண்டிந்த போதே இராணுவத்தின் தாக்குதல் பைட்டர் ஒன்று சட்டென்று எழுந்து தாக்கிவிட்டு சென்றுவிட்டது. .

அத்தோடு எனது இந்தக்கடமை முடிந்தது. விதுசனிடம் மச்சான் கவனமடா உன்னை மட்டும்தான் இவ்விடத்தில் நம்புகிறேன். வேற யாாிடமும் ஒப்படைக்காமல் நீயே செய்து முடி என்று அவனைக் கட்டி அணைத்தது விட்டு விடைபெற்றேன். ஒரு இறுதிக் கடமை முடித்த திருப்தியில் எனது மனைவி இருந்த இடத்திற்கு சென்றுவிட்டேன். அவளிடம் எதுவும் கூறவில்லை. அவவும் கேட்கவில்லை. அதை என்னால் கூறவும் முடியாது. அது இரகசியம்.

நான் அருணாவை சந்திக்க சென்ற வேளை தம்பி சாள்ஸுடன் கணனிப்பிாிவின் போராளிகளும் அணியணியாய் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அணி போன்றவர்கள். இலத்திரனியல் வெடிமருந்து விற்பனர்கள். துறைசார்ந்த திடகாத்திரமான இளம் வீரர்களைக் கொண்ட அணிகள் முழுமையான ஆயுதம் தாித்த நிலையில் இறுதிச் சமருக்குத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். படகுகளும் கூட. மேலே வேவு விமானங்கள் வட்டமிட்டுக் கொண்டிருக்கத் தக்கதாக வெட்டை வெளியில் தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்தன. அது பற்றி நான் யாருக்கும் கூற முடியாது.

அதே நேரம் இன்னும் ஒரு சவாலும் எனக்கு இருந்தது. சரியாக நாங்கள் இருந்த பங்கர் தாக்குதலுக்கு அணிகள் தயார் படுத்திக் கொண்டிருக்கும் இடத்துக்கு நேரே வீதியைக் கடந்து அமைந்திருந்தது. அதில் ஏறத்தாழ ஒரு 30 பேர் வரை இருந்தோம்.

சண்டை தொடங்கியதும் எப்படியும் மல்டி பரல் அடிப்பான். ஒன்றுஇரண்டு இலக்கு தவறி என்றாலும் இவ்விடத்துக்குள் விழ சந்தர்ப்பம் உண்டு .

ஆதலால் இவர்களை பாதுகாப்பாக மக்களோடு மக்களாக நகர்த்தி விட வேண்டும். நான் சுதாவிடமும் எதுவும் கூறவில்லை அவர்களை எனக்கு பழக்கமும் இல்லை.

உண்மையான விடயத்தை கூறாமல் அந்தப் பாதுகாப்பான பங்கரில் இருந்து அவர்களை அப்புறப்படுத்துவது நடவாத காரியம். நல்ல வேளையாக அந்த பங்கருக்குள் படைய புலனாய்வு போராளி ஒருவரும் காயம் அடைந்திருந்தார். அவருக்கு சாடை மாடையாக விடயத்தை கூறி இவர்களை அப்புறப்படுத்துவது உங்கள் பொறுப்பு என்றேன். பலவாறான முயற்சிகளின் பின் ஒருவாறு அது கைகூடி இருந்தது. அனைவரும் புறப்பட தயாரானார்கள். நேரம் அதிகாலை 3 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

இதயத் துடிப்பு சற்று அதிகமாகவே உணர்கிறேன்.

தொடரும்.....