தமிழின அழிப்பை மூடிமறைப்பதற்கு சிறீலங்கா அரசிற்கு துணைபோகும் உலகத் தமிழர் பேரவை!
இலங்கைத் தீவில் கடந்த சில வருடங்களாக ஏற்படுத்தப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சாதகமாக்கி புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும், வர்த்தகர்களையும் குறிவைத்து சிறீலங்கா அரசு பேரம்பேசல் எனும் கபட நாடகத்தை கடந்த மூன்று வருடங்களாக அரங்கேற்றிவருகின்றது. இதனை நம்பி கனடா, அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் சிறீலங்காவில் ஏற்கனவே முகாமிட்டுள்ளனர்.
பொஸ்கோ மரியதாஸ் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் & பன்னாட்டு இணைப்பாளர், உலகத் தமிழர் இயக்கம்
இலங்கைத் தீவில் கடந்த சில வருடங்களாக ஏற்படுத்தப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சாதகமாக்கி புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும், வர்த்தகர்களையும் குறிவைத்து சிறீலங்கா அரசு பேரம்பேசல் எனும் கபட நாடகத்தை கடந்த மூன்று வருடங்களாக அரங்கேற்றிவருகின்றது. இதனை நம்பி கனடா, அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் சிறீலங்காவில் ஏற்கனவே முகாமிட்டுள்ளனர்.
அதனடிப்படையில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய நிறுவனங்களிடமிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்வதற்குரிய கையிருப்புப் பணமாக சிறீலங்கா அரசிற்கு 15 000 கோடி ரூபாய்கள் தேவைப்படுகிறது.
அப் பணத்தை பெற்றுக்கொள்வதற்கு ஒரு கருவியாக புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பேரம்பேசல் எனும் கபட நாடகத்தை அரங்கேற்றியதன் ஊடாக அதில் குறிபிட்ட தமிழர்களை தனது வலையில் வீழ்த்தியுள்ளது. இவ்வாறு சிறீலங்கா அரசின் வலையில் வீழ்ந்தவர்கள் ஆளுக்கு தலா 3 கோடி - 5 கோடி ரூபா வரை செலுத்தியுள்ளனர். இதற்கு நன்றிக்கடனாக சிறீலங்கா அரசால் அவர்களுக்கு பட்டங்களும் பதவிகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பன்னாட்டுத் தளங்களில் ஈழத் தமிழரின் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்காக கடந்த பலவருட காலமாக சிறீலங்கா அரசும் சிங்கள சமூக அமைப்புகளும் இணைந்து பல்வேறு கபட நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது பேரம்பேசல் எனும் ஒரு கபட நாடகம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மீண்டும் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.
இது போன்றே 2017ம் ஆண்டு காலப்பகுதியில் ரணில் - மைத்திரி அரசினால் குறிப்பிட்ட சில புலம்பெயர் அமைப்புகளின் தடை நீக்கப்பட்டது. அவ்விடயத்தினை பாரிய நல்லிணக்க செயற்பாடாக அனைத்துலக மட்டத்தில் திணித்திருந்தது. அக் கபட நாடகம் ஐ.நா அறிக்கைகளிலும் இடம்பெற்றது. அத்துடன் சிறீலங்கா அரசினால் தடை நீக்கப்பட்ட ஆங்கில நாடுகளைத் தளமாகக் கொண்ட குறிப்பிட்ட புலம்பெயர் அமைப்புகள் தமிழின அழிப்பை மூடிமறைக்கும் வகையில் ஐ.நா வில் வெளிவந்த இலங்கை தொடர்பான தீர்மானங்களை தொடர்ந்தும் ஆதரித்து வந்தனர்.
அது போன்றே தற்பொழுது புலம்பெயர் தமிழர்களுடன் தாம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதான பிம்பத்தையும் மேற்குலக நாடுகளுக்கு காட்ட முயற்சிக்கின்றது. அதனூடாக அவர்களிடமிருந்து மேலதிக பொருளாதார உதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் புலம்பெயர் ஈழத் தமிழர்களின் முயற்சியினால் சர்வதேச ரீதியாக உருவாக்கப்பட்டுள்ள துரும்பாகவுள்ள நீதிப்பொறிமுறைகளை உடைப்பதற்காகவுமே உலகத் தமிழர்களினால் அறியப்படாத குறிப்பிட்ட சிலரை மட்டும் கொண்டுள்ள உலகத் தமிழர் பேரவை என்று கூறிக்கொள்பவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததனூடாக சிங்கள பேரினவாத அரசு அவர்களை ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளாக சர்வதேச மட்டத்தில் திணிக்கப் பார்க்கின்றது. இவ்விடயம் எதிர்வரும் காலங்களில் ஐ.நா அறிக்கைகளில் நல்லிணக்க செயற்பாடாக சுட்டிக்காட்டப்படும்.
இரண்டாம் உலகப் போர் காலப்பகுதிகளில் பிரான்ஸ் நாசிக்களின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த போது பிரான்சை ஆட்சிசெய்த விசி அரசாங்கம் ( Vichy Government ) நாசிக்களுடன் இணைந்து கொடுங்கோல் ஆட்சி புரிந்தது.
அக் காலப்பகுதியில் புலம்பெயர்ந்து வாழ்ந்த பிரெஞ்சு மக்கள் தமது நாட்டின் விடுதலைக்காக அதிதீவிர செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர். அவ்வாறானவர்களின் செயற்பாடுகளை முடக்குவதற்காக நாசிக்களின் அடிவருடியாக செயற்பட்ட விசி அரசு நாட்டின் விடுதலைக்காக போராடிய தனது நாட்டவர்களுக்கு எதிராக கொடிய சட்டங்களை ஏவி அவர்களை துன்புறுத்தி கொலைசெய்தது. அச் செயலினை மனிதகுலத்திற்கு எதிரான செயலாகவே
மேற்குலக நாடுகள் இற்றைவரை
விமர்சித்து வருகின்றன.
மேலும் இரண்டாம் உலகப் போர் முடிவுற்றதும் நாசிக்களின் அடிவருடியாக செயற்பட்ட விசி அரசில் அங்கத்துவம் வகித்தவர்கள் அனைவருக்கெதிராகவும் சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு அனைவரும் தண்டிக்கப்பட்டனர். அதில் பெரும்பாலானவர்கள் தூக்கில் போடப்பட்டதுடன் மிகுதிப்பேர் ஆயுள் தண்டனைக்குட்படுத்தப்பட்டனர். இந் நிலையே உலகத் தமிழர் பேரவை போன்று தமிழர்களின் எதிரிகளுடன் கைகோர்த்து செயற்படும் அனைவருக்கும் எதிர்காலத்தில் ஏற்படும்.
தமிழீழம் பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பிலிருந்து சிறீலங்காவின் ஆக்கிரமிப்பிற்குள் உள்ளாக்கப்பட்டதிலிருந்து இற்றைவரை சிறீலங்காவின் ஆட்சியாளர்களுடன் தமிழர் தரப்பு பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. அந்த பேச்சுவார்த்தைகளினால் எவ்வித தீர்வுகளும் எட்டப்படவில்லை மாறாக அவை தமிழர்களை பலவீனப்படுத்துபவையாகவே அமைந்தன.
அதனடிப்படையில் தாயகத்தில் பாதிக்கப்பட்ட தரப்புகள் சிறீலங்காவின் உள்ளக பொறிமுறைகளில் நம்பிக்கையிழந்து அனைத்துலக பொறிமுறைகளையே தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள். இவ்வாறான நிலையில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சிறீலங்காவின் இராசதந்திர வலைக்குள் சிக்காமல்
அனைத்துலக பொறிமுறைகளூடாகவே தமிழின அழிப்புக்கான நீதி மற்றும் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நாம் வென்றெடுக்க முடியுமென்பதில் இறுதிவரை உறுதியாக இருக்க வேண்டும்.