பிரான்ஸ் தமிழர்களினால் மீண்டும் ஒரு வரலாற்று பதிவு

பிரான்சில் வரலாற்று முத்திரை பதிக்கும் #தமிழ்ச்சோலை வெள்ளிவிழா ஆண்டில் ... #ஏப்ரல்19_2023

பிரான்ஸ் தமிழர்களினால் மீண்டும் ஒரு வரலாற்று பதிவு

பிரான்சில் வரலாற்று முத்திரை பதிக்கும் #தமிழ்ச்சோலை வெள்ளிவிழா ஆண்டில் ...

#ஏப்ரல்19_2023

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தோற்றுவிக்கப்பட்ட 25 ஆண்டுகள் நிறைவையிட்டு #பிரான்சு #அஞ்சல்_துறையுடன் சேர்ந்து அவ்வமைப்பால் #முத்திரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

♦பிரான்சு தமிழ் மக்களிடையே மட்டுமல்லாது ஏனைய சமூகங்களிடையேயும் இம்முத்திரை வெளியீடு தமிழ்மொழி மீதான நேர்மறையான பார்வையை உருவாக்கும் எனத் தமிழார்வலர்கள் கருதுகின்றார்கள்.

♦பிரான்சு மண்ணில் தமிழ்மொழி முகிழ்விற்கும் வளர்ச்சிக்கும் அன்று தொட்டு இன்று வரை உழைத்த உழைத்துக்கொண்டிருக்கும் அனைத்து தமிழார்வலர்களுக்கும் இம்முத்திரை சமர்ப்பிக்கப்படுவதாகவும் அவர்களுக்கான நன்றியுணர்வை வெளிப்படுத்தும் நோக்கில் இம்முத்திரை வெளியிடப்படுவதாகவும் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றினூடாகத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் கருத்து வெளியிட்டுள்ள

♦பிரான்சில் தமிழ்மொழிக் கல்வியை ஒருங்கிணைப்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தனது #இருபத்தைந்து ஆண்டு நிறைவைக் குறிக்குமுகமாக #பிரான்சு_அஞ்சல் துறையுடன் இணைந்து வெள்ளிவிழா அஞ்சல் முத்திரையினை வெளியிட்டுள்ளது.

♦உயிரினும் மேலான தாய்மொழி அழிந்து போய்விடுமோ என்னும் பேரச்சத்தோடு 90களின் தொடக்கத்தில் வீடுகளிலும் சிறு மண்டபங்களிலும் தமிழ் ஆர்வலர்களால் நடாத்தப்பட்டு வந்த தமிழ்மொழிக் கல்வியை, ஒருங்கிணைத்து நெறிப்படுத்தும் நோக்கோடு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் 1998ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பிரான்சு அரசின் 1901 ஆண்டின் சங்க வரையறை மற்றும் பண்புகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தமிழ்ச்சங்கங்களால் நடாத்தப்படும் 64 தமிழ்ச்சோலைப்பள்ளிகளைத் தலைமைப் பணியகம் ஒன்றிணைத்து நிர்வகித்து வருகின்றது. இவற்றில் 52 பள்ளிகள் பாரிசு மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் ஏனைய 12 பள்ளிகள் வெளிமாகாணங்களின் முக்கிய நகரங்களிலும் இயங்கிவருகின்றன. இந்த 64 தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் 8000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ்மொழியை மட்டுமல்லாது தமிழ்க்கலை, ஆங்கிலம், என பல்வேறுபட்ட பாடங்களைக் கற்று வருகின்றனர். இக்காலநீட்சியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளையோர் வளர்தமிழ் 12ஐ நிறைவுசெய்து வெளியேறியுள்ளதோடு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோர் தமிழ்மொழி கற்பிக்கும் இரண்டாந்தலைமுறை ஆசிரியர்களாகவும் உருவெடுத்துள்ளனர். மேலும் வளர்தமிழ் 12 உடன் நின்றுவிடாது, தமிழியல் இளங்கலைமாணிப் பட்டப்படிப்பையும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து வருவதோடு 20 இளந்தலைமுறையினர் இளங்கலைமாணிப் பட்டமும் பெற்றுள்ளனர்.

♦பிரான்சில் தமிழர்களின் மிகப்பெரும் கட்டமைப்பாகக் காணப்படும் தமிழ்ச்சோலைகள் மொழி, பண்பாடு, கலாசாரத் தளங்களில் பெரும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. கால் நூற்றாண்டாகத் தமிழ்ச்சமூகத்தின் இருப்பிற்கும் மேன்மைக்கும் தமிழ்மொழிக் கல்வி பெரும்பங்காற்றுவதை யாரும் மறுக்கமுடியாது. புலம்பெயர் மண்ணில் பிறமொழி ஒன்றைக் காப்பதென்பது இலகுவான காரியமல்ல. ஒரு தலைமுறை கடந்தும் நேர்த்தியான, நிலையான கட்டமைப்பாய் இயங்கும் தமிழ்ச்சோலைகள் மூன்றாம் தலைமுறை மாணவர்களுக்கு தமிழ் மொழியை ஊட்டத் தொடங்கியுள்ளதானது தமிழ் இனி நிலைத்து வளரும் என்பதற்குச் சான்றாகும்.

♦பிரான்சின் அஞ்சல் துறை, தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் வெள்ளிவிழாவின் தாற்பரியத்தைப் புரிந்துகொண்டுள்ளதோடு மொழிமீதான தமிழர்களின் பற்றுணர்வைப் பாராட்டி இந்த அஞ்சல் தலைக்கான தயாரிப்பில் பெரும் கரிசனை காட்டியது. அதற்காய் உழைத்த அஞ்சல் துறை அதிகாரிகளுக்குத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் நன்றி தெரிவிக்கின்றது.

♦பிரெஞ்சு மண்ணில் தாய்மொழியின் முகிழ்விற்கும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் உழைத்த, இன்றுவரை உழைத்துக்கொண்டிருக்கும் அனைத்துத் தனிமனிதர்களுக்கும் இந்த அஞ்சல் தலையை சமர்ப்பித்து நன்றி செலுத்துவதில் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பெருமகிழ்வடைகின்றது.

❤இனியும் வாழும் தமிழ்…! இன்னும் வளரும் தமிழ்..!

நன்றி 

கனகசிங்கம் சிறிதரன்